சாலையில் கிடந்த பணத்தைக் காவல்துறையிடம் ஒப்படைத்த மதுரைப் பெண்

1 mins read
d343eef2-d9da-43f2-ad9f-e7e8fe161cb6
சாலையில் கிடந்த சாக்கு மூட்டைக்குள் ரூ. 17 லட்சம் இருந்ததாகக் கூறப்பட்டது. - படம்: இந்து தமிழ் திசை

மதுரை: மதுரை மாநகரச் சாலையில் கிடந்த சாக்கு மூட்டைக்குள் இருந்த ரூ.17 லட்சம் பணத்தைக் காவல் நிலையத்தில் ஒப்படைத்த பெண்ணின் நேர்மையைப் பலரும் பாராட்டியுள்ளனர்.

மதுரை சிம்மக்கல் பகுதியைச் சேர்ந்த அப்பெண்ணின் பெயர் செல்வமாலினி. அவர் சனிக்கிழமை (அக்டோபர் 25) தனது மகளுடன் மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்குச் சென்றார்.

கோயிலிலிருந்து வீட்டுக்குத் திரும்பும்போது, மதுரை வக்கீல் புதுத்தெரு சந்திப்புப் பகுதியில் சாலையின் நடுவே சாக்குமூட்டை ஒன்று கிடப்பதை அவர் கண்டார்.

அந்த மூட்டையை ஓரமாகத் தள்ளி விடுவதற்காகக் காலால் அவர் எட்டி உதைத்தபோது சாக்குமூட்டையில் ரூ.500 பணக்கட்டு இருப்பதுபோலத் தெரிந்தது. அதனால் பதற்றமடைந்த செல்வமாலினி அருகில் பாதுகாப்புப் பணியில் இருந்த காவலரை அழைத்து அந்தத் தகவலைக் கூறினார்.

பின்னர் சாக்குமூட்டையைப் பிரித்துப் பார்த்தபோது 500 ரூபாய்க் கட்டுகள் அதில் காணப்பட்டன. அவற்றின் மொத்த மதிப்பு ரூ.17 லட்சத்து 50 ஆயிரம் என்று கூறப்பட்டது.

பின்னர் செல்வமாலினி அந்தச் சாக்கு மூட்டையை விளக்குத்தூண் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.

செல்வமாலினியின் நேர்மையைப் பாராட்டிய காவல்துறையினர், சாக்கு மூட்டையில் கிடந்த பணம் யாருடையது என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதற்கிடையில் ஒருவர் அது தனது பணம் என்று கூறி காவல் நிலையத்தை அணுகியதாகவும் அவரிடம் ரூ.17 லட்சத்திற்கான ஆவணங்களை அதிகாரிகள் கேட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்