கேரள மக்களின் தண்ணீர்ப் பிரச்சினையைத் தீர்க்க கிணற்றில் இறங்கி தூர் வாரிய பெண்

கேரள மக்களின் தண்ணீர்ப் பிரச்சினையைத் தீர்க்க கிணற்றில் இறங்கி தூர் வாரிய பெண்

2 mins read
2bb62a0e-2f04-42ac-aabc-392f2ee5c204
கிணற்றைத் தூர் வாரி சீரமைக்கும் பணியில் ஈடுபடும் பஞ்​சா​யத்து உறுப்பினர் மரீனா சனீஷ் (இடது). தற்போது கிணற்றில் நீர் மட்டம் உயர்ந்துள்ளது. - படங்கள்: இந்து தமிழ் திசை

இடுக்கி: கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம் உப்புத்தரா கிராம மக்களின் குடிநீர்ப் பிரச்சினையைத் தீர்க்க விரும்பிய பெண் பஞ்சாயத்து உறுப்பினர் ஒருவர், தாமே கிணற்றுக்குள் இறங்கி அதனை தூர் வாரிய சம்பவம் சமூக ஊடகங்களில் பாராட்டுகளைக் குவித்து வருகிறது.

உப்புத்தரா கிராம மக்கள் கோடைக் காலங்களில் தங்கள் குடிநீர் தேவைக்காக பல மைல் தூரம் சென்று அதனைப் பெறவேண்டிய நிலை இருந்தது.

இந்தக் கிராமத்தில் பிரிட்டிஷார் ஆட்சிக் காலத்தில் தோண்டப்பட்ட பழைய கிணறு ஒன்று உள்ளது. அதில் ஊற்று நிறைந்த நல்ல தண்ணீர் கிடைக்கும் என்றாலும், முறையான பராமரிப்பின்றி வண்டல் மண்ணும் சேறும் படிந்து வறண்டு கிடந்தது.

மக்களின் சிரமத்தைக் கண்ட அந்தப் பகுதியின் பஞ்சாயத்து உறுப்பினர் மரீனா சனீஷ், கிணற்றைச் சீரமைக்கத் துணிச்சலான முடிவை எடுத்தார்.

முதலில் கிணற்றுக்குள் இறங்கப் பலரும் தயங்கிய நிலையில், 15 அடி ஆழமுள்ள அக்கிணற்றில் மரீனாவே நேரடியாக இறங்கி வியக்க வைத்தார்.

கிராம மக்களின் ஒத்துழைப்புடன், இயந்திரங்களைப் பயன்படுத்தி பல மணி நேரம் கடுமையாக உழைத்த அவர், கிணற்றில் படிந்திருந்த சகதியையும் வண்டல் மண்ணையும் தமது கைகளாலேயே தூர் வாரிக் கிணற்றைப் புதுப்பித்தார்.

இதுகுறித்துப் பேசிய மரீனா, “முன்பு 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இந்தக் கிணற்றைப் பயன்படுத்தினர். கோடைக் காலத்திற்கு முன்பே இதனைச் சுத்தம் செய்ய நினைத்தோம். நான் இறங்கிச் சுத்தம் செய்தபிறகு, தற்போது கிணற்றில் ஊற்று அதிகரித்து தண்ணீர் மட்டம் உயர்ந்துள்ளது. இதனால் இந்தப் பகுதி மக்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்,” என்று தெரிவித்தார்.

மக்கள் பிரதிநிதியான மரீனா, கிணற்றுக்குள் இறங்கி வேலை செய்யும் காணொளிக் காட்சிகள் சமூக ஊடகத்தில் பரவும் சூழலில், அவரது அர்ப்பணிப்பு உணர்வையும் துணிச்சலையும் பலரும் பாராட்டி வருகின்றனர்

குறிப்புச் சொற்கள்