ரூ.7 லாட்டரியில் ரூ.1 கோடி வென்ற பெண்; பாங்க்ரா நடனமாடினார்

ரூ.7 லாட்டரியில் ரூ.1 கோடி வென்ற பெண்; பாங்க்ரா நடனமாடினார்

படம்: தினத் தந்தி

23 Oct 2026 - 10:04 pm

1 mins read

சண்டிகர்: பஞ்சாப் மாநிலத்தில் வெறும் ரூ.7 செலவில் லாட்டரி சீட்டு வாங்கிய கூலித்தொழிலாளியின் மனைவிக்கு ரூ.1 கோடி பரிசு கிடைத்துள்ளது.

பரித்கோட் மாவட்டம் கோட்கபுராவைச் சேர்ந்த பிம்லா தேவியின் கணவர் கூலித்தொழில் செய்து வரும் நிலையில், குடும்பப் பொருளாதாரம் சவாலாக இருந்தது.

இந்நிலையில், ரயில்வே சாலையிலுள்ள ஸ்டார் லாட்டரி விற்பனை நிலையத்தில் வெறும் ரூ.7 கொடுத்துச் சிக்கிம் மாநில அரசின் லாட்டரி சீட்டை பிம்லா தேவி வாங்கினார்.

மறுநாள் குலுக்கல் முடிவுகள் அறிவிக்கப்பட்டபோது, பிம்லா தேவி வாங்கிய லாட்டரி சீட்டுக்கு ரூ.1 கோடி பரிசுத் தொகை கிடைத்துள்ளது தெரியவந்தது.

இத்தகவலைக் கேட்ட பிம்லா தேவியின் குடும்பத்தினரும் லாட்டரி கடை உரிமையாளர் நரேஷ் மோங்காவும் இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சியை உற்சாகமாகக் கொண்டாடியதுடன், உற்சாகத்தில் பாங்க்ரா நடனமும் ஆடினர்.

பரிசுத் தொகை குறித்துப் பேசிய பிம்லா தேவி, “இந்த வெற்றி தங்களது குடும்பத்தின் பொருளாதாரப் பிரச்சினைகளைத் தீர்க்கப் பெரிதும் உதவும்” என்றார்.

மேலும், “குழந்தைகளுக்குச் சிறந்த எதிர்காலத்தை அமைத்துத் தரவும், அவர்களுக்கு நல்ல வேலைவாய்ப்பை ஏற்படுத்தவும் இப்பணம் உதவும்,” என்று அவர் கூறினார்.

குடும்பத்தினர் அனைவரும் ஒன்றாக ஆலோசித்து, குழந்தைகளின் எதிர்காலத்திற்காக ஏதேனும் தொழில் தொடங்குவது குறித்துத் திட்டமிட உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

கடந்த ஆறு மாதங்களாகத் தொழில் நடத்தி வரும் தமது கடையில் ரூ.1 கோடி பரிசு கிடைப்பது இதுவே முதன்முறை எனக் கடை உரிமையாளர் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்