லக்னோ: பெண்களின் பாதுகாப்பை எளிதில் உறுதி செய்யும் வகையில் செயலியுடன் கூடிய புதிய காலணி ஒன்றை இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த மாணவர்கள் உருவாக்கி உள்ளனர்.
இதற்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
பெண்கள் தங்களைப் பாதுகாத்துக்கொள்ள மிளகு ‘ஸ்பிரே’ உள்ளிட்ட கடந்த 20 ஆண்டுகளில் ஏராளமான வழிமுறைகள் அறிமுகமாகின்றன.
இந்நிலையில், இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தின் மகாராஜ்கஞ் மாவட்டத்தில் உள்ள ஆர்பிஐ சி பள்ளியில் பயிலும் அம்ரித் திவாரி, கோமல் ஜெய்ஸ் ஆகிய இரு மாணவர்களும் நவீன காலணியைத் தயாரித்துள்ளனர்.
இந்தக் காலணியைப் பயன்படுத்துபவரின் கைப்பேசியுடன் இணைக்க முடியும்.
காலணியின் அடிப்பகுதியில் பொத்தான் ஒன்று பொருத்தப்பட்டுள்ளது. ஆபத்தான தருணங்களில் உதவி தேவைப்படும்போது இந்த பொத்தானை அழுத்தினால் போதும். உடனடியாக காலணியுடன் இணைக்கப்பட்டுள்ள கைப்பேசியில் இருந்து, ஆபத்தில் இருப்பவரின் குடும்பத்தார், நண்பர்கள், நம்பிக்கைக்குரியவர்கள் கைப்பேசிகளுக்கு உடனடியாக தகவல் சென்றுவிடும். பொத்தானில் உள்ள ஒலிவாங்கியின் (மைக்) மூலம் ஆபத்தில் உள்ளவரைச் சுற்றி நடக்கும் உரையாடல்களைக் கேட்க முடியும்.
மேலும், அந்தப் பெண் எங்கு இருக்கிறார் என்பதையும் எளிதில் கண்டறிய முடியும்.
இந்தக் காலணியை வைத்து தாக்குதல் நடத்துபவரை மிதித்தால், அதிலிருந்து பாயும் மின்சாரம் தாக்குதல் நடத்துபவரை நிலைகுலையச் செய்யும். அதே நேரத்தில் அணிந்திருப்பவருக்கு பாதிப்பை ஏற்படுத்தாது.
தொடர்புடைய செய்திகள்
விரைவில் இந்தக் காலணியில் கேமரா பொருத்த திட்டமிட்டுள்ளதாக இரு மாணவர்களும் கூறியுள்ளனர்.

