டெல்லியில் தீவிரமடையும் காற்று மாசு: புதிய விதிகள் கட்டுப்பாடுகள் அமல்

டெல்லியில் தீவிரமடையும் காற்று மாசு: புதிய விதிகள் கட்டுப்பாடுகள் அமல்

படம்: இந்து தமிழ் திசை

01 Nov 2026 - 6:55 pm

1 mins read

புதுடெல்லி: வடமாநிலங்களில் தென்மேற்குப் பருவமழை நிறைவடைந்து குளிர்காலம் தொடங்க உள்ள நிலையில், டெல்லி, அதைச் சுற்றியுள்ள நகர்ப்புறப் பகுதிகளில் காற்று மாசுபாடு மீண்டும் தீவிரமடைந்துள்ளது. இதையடுத்து, பொதுமக்களின் சுகாதாரத்தைப் பாதுகாக்கவும் காற்று மாசைக் கட்டுப்படுத்தவும் டெல்லி நிர்வாகம் பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை அமல்படுத்தி உள்ளது.

டெல்லிக்கு வெளியே பதிவு செய்யப்பட்டு, நிர்ணயிக்கப்பட்ட தரநிலையைப் பூர்த்தி செய்யாத வாகனங்கள் நகருக்குள் நுழையத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நொய்டா, குருகிராம், ஃபரிதாபாத், காசியாபாத் போன்ற சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்து டெல்லிக்கு வரும் ஏறக்குறைய 10 லட்சம் பழைய பெட்ரோல், டீசல் வாகனங்கள் தடுக்கப்படும்.

எனினும், மின்சார வாகனங்கள், அவசரக்கால ஆம்புலன்ஸ் சேவைகளுக்கு இதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில், அரசு, தனியார் நிறுவனங்கள் 50 விழுக்காடு பணியாளர்களுடன் இயங்க அறிவுறுத்தப்பட்டுள்ளதுடன், மீதமுள்ள ஊழியர்களுக்குக் கட்டாயம் வீட்டில் இருந்து வேலை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், டெல்லி மாநகராட்சி அலுவலகங்கள் காலை 8.30 முதல் மாலை 5 மணி வரையிலும், பிற அரசு அலுவலகங்கள் காலை 10 முதல் மாலை 6.30 மணி வரையிலும் செயல்படும் வகையில் வேலை நேரங்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன.

மாசுபாட்டை அதிகரிக்கும் கட்டுமானப் பணிகளுக்கு ஜனவரி 31 வரை தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், வாகன நிறுத்துமிடக் கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன.

குறிப்புச் சொற்கள்