தவறு இழைத்தவர்கள் நிச்சயம் தண்டிக்கப்படுவர்: நரேந்திர மோடி

தவறு இழைத்தவர்கள் நிச்சயம் தண்டிக்கப்படுவர்: நரேந்திர மோடி

2 mins read
4b1866ba-781b-48e3-a634-cf3b8b6d0211
புதன்கிழமை (ஜூலை 22) நள்ளிரவு டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் கூடியிருந்த போராட்டக்காரர்கள் மீது பாதுகாப்புப் படையினர் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசினர். - படம்: ராய்ட்டர்ஸ்

புதுடெல்லி: நீட் வினாத்தாள் கசிவு தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனப் பிரதமர் மோடி அளித்துள்ள உறுதிமொழியை ஏற்க இந்திய எதிர்க்கட்சிகள் திட்டவட்டமாக மறுத்துவிட்டன.

இந்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவிவிலக வலியுறுத்தி கரப்பான்பூச்சி மக்கள் கட்சி டெல்லியில் மேற்கொண்டு வரும் காலவரையற்ற போராட்டம் தீவிரமடைந்ததையடுத்து அங்கு துணை ராணுவப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே, நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்படும் என்றும் அவற்றின்மூலம் தவறு இழைத்தவர்கள் நிச்சயம் கடும் தண்டனைக்கு உள்ளாக்கப்படுவர் என்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்தார். இதுகுறித்து தமது எக்ஸ் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார்.

இந்திய இளையர்களின் நலனும் எதிர்காலமும்தான் மற்ற எதையும்விட முக்கியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய இளையர்களின் எதிர்காலத்திற்குத் தீங்கு விளைவிக்க முயற்சி மேற்கொள்ளும் எவரும் தப்பிக்க முடியாது என்றும் பிரதமர் மோடி உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

எனினும், அவரது பதிவு பிரச்சினைக்குத் தீர்வுகாணப் போதுமானதாக இல்லை. போராட்டத்தை முன்னெடுத்துள்ள கரப்பான்பூச்சி மக்கள் கட்சி (சிஜேபி) திரு மோடிக்கு ஒற்றை வரியில் பதில் அளித்துள்ளது.

அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்பது மட்டுமே அக்கட்சியின் பதிலில் இடம்பெற்றுள்ளது.

ஒட்டுமொத்த டெல்லியையும்கூட முடக்கத் தயாராக உள்ளார் பிரதமர் மோடி. ஆனால், தர்மேந்திர பிரதானை மட்டும் பதவிநீக்கம் செய்யத் தயாராக இல்லை என்று சிஜேபி தலைவர் அபிஜித் தீப்தே தெரிவித்துள்ளார்.

இதனிடையே, கல்வி அமைச்சரைப் பதவிநீக்கம் செய்து மாணவர்களிடம் இந்திய அரசு மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றும் மாணவர்களைத் தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடியின் பதிவிற்கு அளித்த பதிலில், இந்திய இளையர்களின் எதிர்காலத்திற்கு மிகப்பெரிய தீங்கு விளைவிப்பது பாஜக அரசுதான் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

மற்ற எதிர்க்கட்சித் தலைவர்களும் இதேபோன்று கருத்து தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, புதன்கிழமை (ஜூலை 22) நள்ளிரவு டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் கூடியிருந்த ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே திடீரென மோதல் மூண்டது.

இதையடுத்து, போராட்டக்காரர்கள் மீது பாதுகாப்புப் படையினர் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசினர்.

சிஜேபியின் அடுத்தக்கட்ட போராட்ட அறிவிப்பை அடுத்து, டெல்லியில் மத்திய துணை ராணுவப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். டெல்லியின் பல்வேறு பகுதிகளில் புதன்கிழமை இரவு முதல் வியாழக்கிழமை காலை 6 மணி வரை இணையச் சேவை துண்டிக்கப்பட்டது.

மூடப்பட்ட மெரினா

இதனிடையே, கல்வி அமைச்சர் பதவி விலகும் வரை நாடாளுமன்ற நடவடிக்கைகள் தொடர்ந்து முடங்கும் எனக் காங்கிரஸ் தலைமை தெரிவித்துள்ளது.

தமிழகத்திலும் நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம் வலுவடைந்து வரும் நிலையில், சென்னை மெரினா கடற்கரை நுழைவு வாயில்கள் மூடப்பட்டுள்ளன.

கடற்கரைக்குச் செல்ல பொதுமக்களுக்கு தற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அங்கு காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

பல்வேறு மாணவர் அமைப்புகள் கடற்கரையில் கூடி போராட்டம் நடத்த வாய்ப்பு உள்ளதாகத் தகவல் வெளியான நிலையில், அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்