புதுடெல்லி: பாகிஸ்தானுக்கு செல்லும் நதிகளின் அணை மதகுகள் மூடலைத் தொடர்ந்து பாகிஸ்தானைச் சேர்ந்த பிரபலங்களின் சமூக வலைத்தளக் கணக்குகள் இந்தியாவில் முடக்கப்பட்டு வருகின்றன.
தற்போது, அந்நாட்டின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் முன்னாள் அமைச்சர் பிலாவல் பூட்டோவின் எக்ஸ் தளப் பக்கக் கணக்குகள் இந்தியாவில் முடக்கப்பட்டுள்ளன.
அண்மையில், பாகிஸ்தான் நடிகர்களான மகிரா கான், ஹனியா ஆமிர், சனம் சயீத், அலி ஜாபர், பிலால் அப்பாஸ், இக்ரா அஜீஸ், அயேஸா கான், சஜல் அலி ஆகியோரின் இன்ஸ்டகிராம் பக்கங்களும் இந்தியாவில் முடக்கப்பட்டன.
மேலும், பஹல்காம் தாக்குதல் குறித்தும் இந்திய பாதுகாப்புப் படை குறித்தும் அவதூறு கருத்துகளை வெளியிட்ட யூடியூப் சேனல்களை மத்திய அரசு தடை செய்துள்ளது. அத்தோடு பாகிஸ்தானைச் சேர்ந்த பிரபலங்களின் சமூக வலைத்தளக் கணக்குகளை முடக்கி வருகிறது.
இந்தியாவில் இருந்து இவர்களின் பக்கங்களை அணுக முயன்றால், மத்திய அரசின் சட்டப்பூர்வ கோரிக்கையை ஏற்று முடக்கப்பட்டதாகத் தகவல் வருகிறது.
கடந்த வெள்ளிக்கிழமை பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீஃப்பின் யூடியூப் ஒளிவழியும் முடக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது