புதுடெல்லி: சீனாவும் இந்தியாவும் போட்டியாளர்கள் அல்ல, “ஒத்துழைப்பு, வளர்ச்சியில்” பங்காளிகள் என்பதில் ஸி ஜின்பிங்கும் பிரதமர் நரேந்திர மோடியும் ஒருமித்த கருத்தை எட்டியதாக இந்தியாவுக்கான சீனத் தூதர் ஸு ஃபெய்ஹொங் புதன்கிழமை தெரிவித்துள்ளார்.
“சீனாவும் இந்தியாவும் ஒன்றுக்கொன்று போட்டியோ, அச்சுறுத்தலோ அல்ல. இரு நாடுகளும் ஒத்துழைப்பு, வளர்ச்சி வாய்ப்புகளில் பங்காளிகள் என்பதில் அதிபர் ஸி ஜின்பிங்கும், பிரதமர் நரேந்திர மோடியும் முக்கியமான ஒருமித்த கருத்தை எட்டியுள்ளனர். இது இருதரப்பு உறவுகளுக்கு தெளிவான திசையை வழங்குகிறது,” என்று சீனக் குடியரசு நிறுவப்பட்ட 75வது ஆண்டு விழாவில் பேசியபோது ஃபெய்ஹொங் குறிப்பிட்டார்.
“இரு தலைவர்களின் ஒருமித்த கருத்தை நாம் உறுதியாக செயல்படுத்த வேண்டும், ஒருவருக்கொருவர் வளர்ச்சி, உத்திபூர்வ நோக்கங்களை சரியாகப் பார்க்க வேண்டும். ஒருவருக்கொருவர் பரஸ்பரம் முக்கிய நலன்கள், முக்கிய அக்கறைகளுக்கு இடமளிக்க வேண்டும்,” என்று அவர் கூறினார்.
ஆசியாவிலும் உலகிலும் பன்முகத்தன்மையைக் கொண்டுவர இந்திய- சீனா பங்காளித்துவம் முக்கியமானது என்று வெளியுறவு அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் மீண்டும் உறுதிப்படுத்திய சில மணிநேரங்களுக்குப் பிறகு இந்த அறிக்கை வந்துள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையே நிலவி வரும் பிரச்சினையைச் சுட்டிக்காட்டிய ஃபெய்ஹொங், “அண்டை நாடுகளுக்கு வேறுபாடுகள் இருப்பது சகஜம், அதை எப்படி சரியான கண்ணோட்டத்துடன் பார்ப்பது, கையாள்வது என்பதுதான் முக்கியம். சீனாவும் இந்தியாவும் இரு தொன்மையான நாகரிகங்கள். இரு நாடுகளிடமும் போதுமான ஞானம் உள்ளது என்று நம்புகிறேன். வேறுபாடுகளைச் சரியாகக் கையாளும் திறன், இரு தரப்பும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வைக் கண்டறியும் திறன்களும் உள்ளன,” என்றார் அவர்.
2020ஆம் ஆண்டு சீன ராணுவமும் மோதலில் ஈடுபட்டது முதல் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான உறவில் பதற்றம் நிலவி வருகிறது. இரு தரப்பினரும் பல உரசல்களில் இருந்து விலகியிருந்தாலும், எல்லைப் பிரச்சினைக்கு இன்னும் முழுமையான தீர்வு எட்டப்படவில்லை.


