வறட்சியைத் துரத்தி, மழையை வரவழைக்க யாகம்: தெலுங்கானா அரசு முடிவு

வறட்சியைத் துரத்தி, மழையை வரவழைக்க யாகம்: தெலுங்கானா அரசு முடிவு

2 mins read
027d6629-5f14-4603-956b-82531363dcff
மிகப்பெரிய அளவில் ஏற்பாடு செய்யப்பட்டு வரும் வருண யாகத்தில் தெலுங்கானா முதலமைச்சர் ஏ. ரேவந்த் ரெட்டி பங்கேற்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. - படம்: இந்தியா டுடே
Google News Preferred Icon

ஹைதராபாத்: ஆறுகளும் குளங்களும் வறண்டு தண்ணீர் தட்டுப்பாட்டை தெலுங்கானா மாநிலம் எதிர்கொள்வதால் மழை பெய்ய வேண்டி யாகம் நடத்த அந்த மாநில அரசு முடிவெடுத்துள்ளதாக இந்தியா டுடே செய்தி ஒன்று தெரிவிக்கிறது.

அந்த ‘வருண யாகம்’ நல்கொண்டா மாவட்டத்தில் உள்ள நாகார்ஜுன சாகர் அணைப் பகுதியில் நடைபெறும் என்றும் அதன் நிறைவு விழாவில் முதலமைச்சர் ஏ. ரேவந்த் ரெட்டி கலந்துகொள்வார் என்றும் அரசு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

தென்மேற்குப் பருவமழைக் காலம் கிட்டத்தட்ட பாதியைக் கடந்துவிட்டது.

ஆயினும், கிருஷ்ணா மற்றும் கோதாவரி ஆற்றுப் படுகைகளில் உள்ள நீர்த்தேக்கங்களுக்கு போதிய நீர்வரத்து இன்னும் வரவில்லை.

அதனால், அணைகள் மற்றும் பாசன அமைப்புகளில் நீர் இருப்பை உறுதிசெய்யும் நோக்கில் இந்த வழிபாட்டுச் சடங்கு நடத்தப்படுவதாக அரசு தெரிவித்துள்ளது.

11 ஹோம குண்டங்கள் அமைக்கப்பட்டு, 108 வேத விற்பன்னர்கள் இந்த ‘வருண யாகத்தை’ நடத்த உள்ளனர்.

யாதகிரி குட்டாவில் உள்ள ஸ்ரீ லட்சுமி நரசிம்ம சுவாமி கோவிலைச் சேர்ந்த அர்ச்சகர்கள் மற்றும் வேத பண்டிதர்கள் இந்த யாகத்தை முன்னின்று நடத்துகின்றனர்.

இதுகுறித்து மாநில நீர்ப்பாசனத் துறை அமைச்சர் என். உத்தம் குமார் ரெட்டி அலுவலகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

எல் நினோ அச்சுறுத்தல் மற்றும் சீரற்ற மழைப்பொழிவு நிலவுவதால் எப்படியாவது மழை பெய்துவிடும் என அலட்சியமாக இருந்துவிட முடியாது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாகார்ஜுன சாகர் அணையின் மொத்த கொள்ளளவான 312 டிஎம்சியில், தற்போது 145 டிஎம்சி மட்டுமே நீர் இருப்பு உள்ளது. அணையின் முழு நீர்மட்டம் 590 அடியாக உள்ள நிலையில், தற்போது அது 518 அடியாகக் குறைந்துள்ளது.

2025 ஆகஸ்ட் 9ஆம் தேதி நிலவரப்படி, நாகார்ஜுன சாகர் அணையின் நீர்மட்டம் 589.40 அடியாகவும் நீர் இருப்பு 310.25 டிஎம்சியாகவும் இருந்ததால் அணை கிட்டத்தட்ட நிரம்பியிருந்தது.

ஆனால், இந்த ஆண்டு அதே நாளில் அணையின் நீர் இருப்பு அந்த அளவில் பாதிக்கும் குறைவாக உள்ளது என்று நீர்ப்பாசனத் துறை அமைச்சரின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்