தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மஞ்சள் எச்சரிக்கை: கேரளாவைப் புரட்டிப்போடும் கனமழை

2 mins read
ba44c74a-aecb-42bc-a3ee-74ad9470d230
கேரளாவில் தென்மேற்குப் பருவமழை முன் கூட்டியே பெய்யத் தொடங்கி உள்ளது. - படம்: ஊடகம்
multi-img1 of 2

திருவனந்தபுரம்: கடந்த சில நாள்களாக கேரளாவில் கனமழை பெய்து வரும் நிலையில், அம்மாநிலம் முழுவதும் கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கேரளாவில் கனமழை காரணமாக 5 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், விழிஞ்சம் பகுதியில் இருந்து மூன்று படகுகளில் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற 10 மீனவர்கள் மாயமாகியுள்ளனர். அவர்களைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக மாநில அதிகாரிகள் தெரிவித்தனர்.

மழை தொடர்பான சம்பவத்தில் புல்லுவிலா பகுதி மீனவர் ஒருவர் உயிரிழந்தார். படகு கவிழ்ந்த விபத்தில் அவர் பலியானதாகக் கூறப்படுகிறது.

தமிழகம், கேரளாவில் தென்மேற்குப் பருவமழை முன் கூட்டியே பெய்யத் தொடங்கி உள்ளது. இதனால் கேரளாவின் பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்கிறது.

வயநாடு, கோழிக்கோடு, கொல்லம், பத்தனம்திட்டா என பல மாவட்டங்களில் நீடித்து வரும் கனமழை காரணமாக பெரும்பாலான இடங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது. காசர்கோடு பகுதியில் குடியிருப்புகளை இடுப்பளவு வெள்ளநீர் சூழ்ந்துள்ளதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கேரளாவில் இதுவரை ஏழு பேர் மழைக்கு உயிரிழந்துவிட்டனர். பத்து மீனவர்கள் மாயமான நிலையில், அவர்களைத் தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.

கனமழை மேலும் நீடித்து வருவதால் கேரள மாநிலம் முழுவதும் மஞ்சள் எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.

மலன்கரா உட்பட நான்கு அணைகள் நிரம்பியுள்ளன. எனவே அணைக்கரையோர பகுதி மக்களைப் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர். விழிஞ்சம் பகுதியில் மட்டும் 8 மீனவர்களைக் காணவில்லை.

எர்ணாகுளம், காசர்கோடு, இடுக்கி, திருச்சூர் என பல மாவட்டங்களில் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கி உள்ள நிலையில், மீட்பு - நிவாரணப் பணிகளை மேற்கொள்ள தேசியப் பேரிடர் மீட்புக் குழுவினர் கேரளா விரைந்துள்ளனர்.

தமிழகத்தின் அரக்கோணத்தில் இருந்து 30 வீரர்கள் அடங்கிய நான்கு தேசிய பேரிடர் மீட்புக் குழுக்கள் கேரளா சென்றுள்ள நிலையில், சூழ்நிலைக்கேற்ப மேலும் சில குழுக்கள் அங்கு செல்ல வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொல்லம், கோட்டயம், இடுக்கி ஆகிய மாவட்டங்களில் மே 31ஆம் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டது.

இதற்கிடையே, வடகிழக்கு மாநிலங்களான அசாம், மிசோரம், திரிபுரா, சிக்கிம் உள்ளிட்ட மாநிலங்களிலும் கனமழை பெய்து வருகிறது. இதனால் ஆங்காங்கே நிலச்சரிவுகளும் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டுள்ளன.

அசாம் மாநிலத்தில் மே 31ஆம் தேதி நிலவரப்படி, ஐந்து பேர் மழைக்கு உயிரிழந்துவிட்டனர். அங்கு 12 மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மழையால் தலைநகர் கௌஹாத்தி மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறிப்புச் சொற்கள்