புதுடெல்லி: ஹர்ஷ் பர்தனுக்கு வயது 26. சென்ற ஆண்டு, பல்வேறு நிலைகளிலான தேர்வுகளுக்குப் பிறகு ‘ஐபிஎஸ்’ எனப்படும் காவல்துறை உயரதிகாரிப் பதவிக்குத் தேர்வானவர்.
மத்தியப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த இவர், கர்நாடக மாநிலத்தில் பணியாற்றத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஆனால் வேலையில் சேருமுன்னரே அவரது கனவுகள் கைகூடாமற் போய்விட்டன.
ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 1) மாலை, பர்தன் சாலை விபத்தில் உயிரிழந்ததாகக் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் மைசூரில் உள்ள கர்நாடகக் காவல்துறைக் கல்விக்கழகத்தில் நான்கு வாரப் பயிற்சியை நிறைவுசெய்த பர்தன், காவல்துறை உதவிக் கண்காணிப்பாளருக்கான பணியிடத் தகுதிகாண் பருவத்தில் (Probationary period) பொறுப்பேற்கவிருந்தார்.
காவல்துறை வாகனத்தில் அவர் சென்றுகொண்டிருந்தபோது ஹசன் வட்டத்துக்கு அருகே வாகனத்தின் டயர் வெடித்ததாகவும் அதையடுத்து ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்ததால் சாலையோர மரம், ஒரு வீடு ஆகியவற்றின் மீது மோதியதாகவும் காவல்துறை கூறியது.
உடனடியாக மருத்துவ உதவி வழங்கப்பட்டபோதும் தலையில் ஏற்பட்ட பலத்த காயங்களால் மருத்துவமனையில் அவர் உயிரிழந்தார்.
பர்தனின் குடும்பத்தார்க்குக் கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா இரங்கல் தெரிவித்துள்ளார். பல்லாண்டுக் கடின உழைப்பின் பலனாக, அதிகாரியாகப் பொறுப்பேற்கச் செல்லும் வழியில் பர்தன் மாண்டது மிகவும் வருத்தமளிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

