லக்னோ: மருத்துவப் படிப்புக்கு ஆசைப்பட்டு இளையர் ஒருவர் தமது காலை தாமே உடைத்துக்கொண்ட சம்பவம் உத்தரப் பிரதேசத்தில் நிகழ்ந்துள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம், ஜான்பூர் அருகே உள்ள காலிபூர் கிராமத்தைச் சேர்ந்தவர் இருபதுகளிலுள்ள இளையர் சூரஜ் பாஸ்கர். எம்பிபிஎஸ் படித்து மருத்துவராக வேண்டும் என்பது இவரது கனவு.
அந்தப் படிப்பில் சேர, கடந்த ஈராண்டுகளாக நீட் தேர்வு எழுதியும் அவரால் போதிய மதிப்பெண்களைப் பெறமுடியவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் விரக்தியடைந்த சூரஜ், விபரீத முடிவை எடுத்தார். எம்பிபிஎஸ் சேர்க்கையில் மாற்றுத் திறனாளிகளுக்கு ஒதுக்கீடு உள்ளது என்பதையும் அவர்கள் நீட் தேர்வில் அதிக மதிப்பெண் எடுக்கத் தேவை இல்லை என்பதையும் அவர் இணையம் வாயிலாகத் தேடி தெரிந்துகொண்டார்.
மாற்றுத்திறனாளி சான்றிதழ் இருந்தால் மருத்துவப் படிப்பு சேர்க்கை சுலபமாகக் கிடைத்துவிடும் என நம்பிய அவர், கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 18) தன் இடது காலின் கீழ்ப்பகுதியை வெட்டிக்கொண்டார்.
வெட்டிய பின்னர், ரத்தவெள்ளத்தில் சரிந்த அவர், மர்ம நபர்கள் சிலர் தன்னைத் தாக்கி, காலை வெட்டிவிட்டுத் தப்பி ஓடிவிட்டதாகக் காவல்துறையிடம் கூறினார்.
அதனை நம்பிய காவல்துறையும் முதலில் கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியது. ஆனால், விசாரணையின்போது சூரஜ் முன்னுக்குப் பின் முரணாகப் பேசியது அதிகாரிகளுக்குச் சந்தேகத்தை ஏற்படுத்தியது.
இதனையடுத்து அவரது நாட்குறிப்பு (டைரி) மற்றும் கைப்பேசியை ஆய்வு செய்தபோது உண்மை வெளிச்சத்திற்கு வந்தது.
தொடர்புடைய செய்திகள்
“நான் 2026ல் எப்படியாவது எம்பிபிஎஸ் டாக்டர் ஆகிவிடுவேன்,” என்று அவர் தமது நாட்குறிப்பில் திரும்பத் திரும்ப எழுதியிருந்தார். மேலும், ஊனமுற்றோர் ஒதுக்கீடு பற்றிய தகவல்களை, கைப்பேசி வாயிலாக அவர் இணையத்தில் தேடியதும் கண்டுபிடிக்கப்பட்டது.
மருத்துவப் படிப்புமீது பேரார்வம் இருந்தும் அதனைப் படிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை என வருந்தி கடும் மன உளைச்சலுக்கு அவர் ஆளானதாக சந்தேகிக்கப்படுகிறது.
தற்போது ஜான்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அந்த இளையரை பல்வேறு வழக்குகளின்கீழ் கைது செய்வதற்கான நடவடிக்கைகளில் காவல்துறை செயல்பட்டு வருகிறது.
பொய்ப் புகார் அளித்தது, காவல்துறையை திசைதிருப்பியது உள்ளிட்ட குற்றப்பிரிவுகளின்கீழ் சூரஜ் கைது செய்யப்படலாம் என்று ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

