தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சிங்கப்பூரில் மாண்ட அசாமியப் பாடகர் ஸுபீன் கார்க் மரண விசாரணை; விழா ஏற்பாட்டாளர், நிர்வாகி கைது

2 mins read
28fbca8b-932b-4949-982b-06a0bb874d4b
செப்டம்பர் 19ஆம் தேதி நிகழ்ந்த முக்குளிப்பு விபத்தில் 52 வயது ஸுபீன் மாண்டதாகத் தெரிவிக்கப்பட்டது. - படம்: இணையம்

புதுடெல்லி: புகழ்பெற்ற அசாமியப் பாடகர் ஸுபீன் கார்க் அண்மையில் சிங்கப்பூரில் மரணமடைந்தார்.

செப்டம்பர் 19ஆம் தேதி நிகழ்ந்த நீச்சல் விபத்தில் 52 வயது ஸுபீன் மாண்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

அவரது உடல் விமானம் மூலம் இந்தியத் தலைநகர் புதுடெல்லிக்குக் கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து கௌகாத்திக்குக் எடுத்துச் செல்லப்பட்டது.

இந்நிலையில், விழா ஏற்பாட்டாளார் ஷியாம்கனு மகந்தாவும் ஸுபீனின் நிர்வாகி சித்தார்த்தா சர்மாவும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தச் செய்தியை இந்திய ஊடகம் வெளியிட்டது.

மகந்தா சிங்கப்பூரில் தலைமறைவாக இருந்ததாக இந்தியக் காவல்துறை கூறியது. மகந்தாவையும் சர்மாவையும் தேடிக்கொண்டிருந்ததாகக் காவல்துறை தெரிவித்தது.

கௌகாத்தியில் இருக்கும் குற்றப் புலனாய்வுப் பிரிவு அலுவலகத்துக்கு அக்டோபர் 6ஆம் தேதிக்குள் செல்ல வேண்டும் என அவ்விருவருக்கும் உத்தரவிடப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, சிங்கப்பூரிலிருந்து புதுடெல்லிக்கு விமானம் மூலம் சென்ற மகந்தா, புதுடெல்லியில் உள்ள இந்திரா காந்தி அனைத்துலக விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.

குர்கானில் உள்ள ஓர் அடுக்குமாடி வீட்டில் சர்மா கைது செய்யப்பட்டார்.

அசாம் முதல்வரின் உத்தரவின்படி, கைது செய்யப்பட்ட இருவரிடமும் விசாரணை நடத்தப்படுவதாக அசாம் காலல்துறை கூறியது.

விசாரணை குழுவைச் சேர்ந்த சில அதிகாரிகள் புதுடெல்லியில் விசாரணை நடத்துகின்றனர்.

சில அதிகாரிகள் சிங்கப்பூருக்குச் சென்று அங்கு விசாரணை நடத்துவர் என்று தெரிவிக்கப்பட்டது.

ஏழு நாள்களுக்குள் விசாரணை நிறைவுபெற்று ஸுபீனின் மரணத்துக்கான காரணம் தெரிந்துவிடும் என்றும் அதுவரை அதிகாரிகள் மீது நம்பிக்கை வைத்து பொறுமையுடன் காத்திருக்க வேண்டும் என்றும் அசாம் காவல்துறை உயர் அதிகாரி ஹர்மீத் சிங் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.

குறிப்புச் சொற்கள்