வாழ்வியல் இலக்கியப் பொழிலின் 101வது மாதாந்தர நிகழ்ச்சி

வாழ்வியல் இலக்கியப் பொழிலின் 101வது மாதாந்தர நிகழ்ச்சி

1 mins read
9da3774d-e194-47de-b814-df5a10e97b32
வாழ்வியல் இலக்கியப் பொழில் அமைப்பின் மாதாந்தர நிகழ்ச்சியில் பங்கேற்றோர். - படம்: வாழ்வியல் இலக்கியப் பொழில்

வாழ்வியல் இலக்கியப் பொழில் அமைப்பின் 101வது மாதாந்தர நிகழ்ச்சி சனிக்கிழமை (மார்ச் 14) பொங்கோல் சமூக மன்றத்தில் நடைபெற்றது.

பொதுப் பிரிவில், சென்னையிலிருந்து இணையம் வழியாக இணைந்த வெ.ஜெ. நிரஞ்சனா, தமிழ்ப்பாடலுக்கு பரதநாட்டியம் ஆடினார்.

தொடர்ந்து சிறுவர் அங்கத்தில், சாரா நாடிமுத்து ‘தமிழுக்கும் அமுதென்று பேர்’ பாடலைப் பாட, சரவணன் முகிலெயினி ‘இன்னா செய்தாரை’ எனத் தொடங்கும் திருக்குறளை அடிப்படையாகக் கொண்டு கதை கூறினார். வர்ணிகா வினேஷ் மனோ, மேகவர்தினி அருள்பிரகாஷ் ஆகியோர் தமிழ்ப் பாடல்கள் பாடினார். தமிழோவியா அருள்பிரகாஷ் ‘திணைமொழி ஐம்பது’ பாடலைப் பாடி, நன்னெறிக் கதையும் கூறினார்.

பொழிலின் தலைவர் பாவலர் எல்ல. கிருஷ்ணமூர்த்தி ‘மாலை’ என்னும் தலைப்பில் பல்வேறு இலக்கியக் குறிப்புகளுடன் அறிமுகவுரை ஆற்றினார்.

சிறுவர்களுக்கும் பெரியவர்களுக்கும் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. சிறார்க்குத் தமிழ் ஆர்வத்தைத் தூண்டும் விதமாக வயதிற்கேற்ப தமிழ்ப் பயிற்சித் தாள்கள் கொடுக்கப்பட்டன.

கற்பகலட்சுமி, ‘மாதவப் பெண்கள்’ என்னும் தலைப்பில் சிற்றுரையாற்றினார். சிறப்புரையில் ‘இலக்கியத்தில் பெண்கள்’ என்னும் தலைப்பில் ஜெர்மனியிலிருந்து தமிழ் வான் அவை அமைப்பின் நிறுவனர் சந்திரகௌரி சிவபாலன் (கௌசி) இணையம் வழி இணைந்து இலக்கியத்தில் பெண்கள் பற்றி பல மேற்கோள்களைக் காட்டி உரையாற்றினார்.

குறிப்புச் சொற்கள்