இந்திய மரபுடைமை நிலையம் அதன் 10ஆம் ஆண்டுநிறைவைக் குறிக்கும் வகையில், கோலாகலமான தீபாவளிக் கொண்டாட்டங்களுக்கும் ஆர்வமூட்டும் பல்வேறு நடவடிக்கைகளுக்கும் ஏற்பாடு செய்துள்ளது.
இந்த ஆண்டின் கொண்டாட்டங்கள் செப்டம்பர் 27ஆம் தேதி முதல் அக்டோபர் 19 வரை நான்கு வார இறுதிகளில் பூக்கள் என்ற கருப்பொருளுடன் நடைபெறுகின்றன. அனைவரும் பங்கேற்கக்கூடிய கலையரங்கமாக நிலையம் மிளிரும்.
“சிங்கப்பூரிலும் உலகெங்கிலும் உள்ள எண்ணற்ற இந்தியர்களுக்கு, பூக்கள் வாழ்க்கையின் ஓர் இன்றியமையாத அங்கமாகும். சடங்குகளிலும் முடி அலங்காரங்களிலும் வீடுகளை அழகுபடுத்துவதற்கும் அவற்றைப் பயன்படுத்துகிறோம்,” என்றார் நிலையத்தின் புதிய பொது மேலாளர் கிருத்திகா மகேந்திரன்.
“எங்கள் 10வது தீபாவளிக் கொண்டாட்டங்களின்போது, புதிய பார்வையாளர்களையும் ஆண்டுதோறும் தவறாமல் வருவோரையும் வரவேற்றுப் புதுமையான அனுபவத்தை அளிப்பதே எங்கள் நோக்கம்,” என்று அவர் குறிப்பிட்டார்.
முதன்முறையாக, இந்திய மரபுடைமை நிலையம் தனது திறப்பு நேரத்தைச் சனிக்கிழமைகளில் நீட்டித்து, செப்டம்பர் 27ஆம் தேதியும் அக்டோபர் 4ஆம் தேதியும் சிறப்பு இரவு நிகழ்ச்சிகளை இரவு 8 மணிவரை நடத்துகிறது.
‘டிவைன் டேல்ஸ் – ஸ்பெஷல் ஆஃப்டர் டார்க் டிராமா இன் த கேலரி’ (Divine Tales – Special After Dark Drama in the Gallery) எனும் தலைப்பில் நடைபெறும் இந்த இரவு நாடக நிகழ்ச்சியை ஏ.கே.டி. கிரியேஷன்ஸ் கலை நிறுவனம் படைக்கிறது. நரகாசுரனின் கதையையும், இருளை வெற்றிகண்ட ஒளியையும் அவர்கள் நடனம், வாய்ப்பாட்டு, பாரம்பரிய இசைக்கருவிகள் வழியாக உயிர்ப்பிக்கவுள்ளனர்.
இந்த நிகழ்ச்சி ஆங்கிலத்தில் நடைபெறுவதால், தீபாவளியின் பின்னணியை அனைவரும் எளிதாகப் புரிந்து ரசிக்கும் வகையில் இருக்கும் எனக் கூறினார் கலை நிறுவனத்தின் இயக்குநர் ராணி கண்ணா.
“கதை உயிரோட்டத்துடன் வெளிப்படும் விதத்திலும் பார்வையாளர்களுக்கு ஒரு முழுமையான அனுபவத்தை வழங்கும் நோக்கிலும் இந்த நிகழ்ச்சியை வடிவமைத்துள்ளோம். அவர்கள் நடிகர்களுடன் சேர்ந்து நடனமாடவும் இசைக்கருவிகளை வாசிக்கவும் சில நேரங்களில் கதாபாத்திரங்களாகவே நடிக்கவும்கூட வாய்ப்பு உண்டு,” என்றார் அவர்.
தொடர்புடைய செய்திகள்
இந்த ஆண்டின் சிறப்பு அம்சங்களில் பாரம்பரிய இந்தியக் கலையான தோல் பொம்மலாட்டமும் பாரம்பரிய விளக்குக் கலையும் வருகையாளர்களுக்கு அறிமுகப்படுத்தப்படுவதும் அடங்கும்.
மேலும், வழிகாட்டுதலுடன்கூடிய சுற்றுலா மூலம் லிட்டில் இந்தியாவின் பூக்கடைகளைப் பற்றியும் கலாசாரச் சிறப்புகளைப் பற்றியும் அறிந்துகொள்ளும் வாய்ப்பு வழங்கப்படும். இந்தச் சுற்றுலா, ஆறு வகைப் பாரம்பரிய இந்திய உணவுகளுடன் பூக்களைப்போல் அலங்கரிக்கப்பட்ட வாழையிலை விருந்துடன் நிறைவடையும்.
சமையல் கலையில் ஆர்வமுள்ளவர்கள், பண்டிகை உணவுகளில் மலர்களைப் பயன்படுத்தும் முறைகளை ஆராயும் சமையல் வல்லுநர் தேவகியின் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளலாம்.
தீபாவளிப் பாரம்பரியங்களை அறிமுகப்படுத்தும் பெற்றோர்-குழந்தை கதைசொல்லும் அமர்வில் குடும்பங்கள் ஒன்றாகப் பங்கேற்கலாம்.
கொண்டாட்டங்களின் மற்றொரு பகுதியாக, சிறப்புத் தீபாவளிச் சந்தையும் (Festive Market) நிலையத்தின் இரண்டாம் தளத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இங்குச் சிறிய வர்த்தகங்கள், வீட்டிலிருந்து செயல்படும் வர்த்தகங்கள் வழங்கும் கைவினைப் பொருள்கள், இந்திய ஆடை, ஆபரணங்கள், பண்டிகை சார்ந்த உணவுப் பொருள்கள் போன்றவை விற்கப்படும்.
இந்தச் சந்தையில் பங்கேற்கும் கடைக்காரர்களில் ஒருவரான 42 வயது அமுதா குலசேகரன், ‘ரீகல் லைஃப்ஸ்டைல் எஸ்ஜி’ (Regal Lifestyle SG) ஆபரணக் கடையின் உரிமையாளர் ஆவார். அரசாங்கத் துறையில் நீண்ட காலம் பணியாற்றிய அவர், கண்பார்வைக் குறைபாடுகளை எதிர்கொள்ளத் தொடங்கியதையடுத்து, ஏப்ரல் 2024 முதல் சுயதொழிலில் ஈடுபட ஆரம்பித்தார்.
“இத்தகைய நிகழ்ச்சிகள் எங்களைப் போன்ற தொழில்முனைவர்களுக்குப் பேராதரவாக அமைகின்றன. இணையத்தின்வழி விற்பனை செய்வதைவிட நேரடியாக வாடிக்கையாளர்களைச் சந்தித்து விற்பனை செய்வது மிகவும் வேறுபட்ட அனுபவமாக இருக்கும்.
“இந்திய மரபுடைமை நிலையம் எங்கள் தயாரிப்புகளைக் காட்சிப்படுத்தவும் மக்களைச் சந்திக்கவும் இந்தியப் பாரம்பரியத்தின் மீதான எங்கள் ஆர்வத்தைப் பகிர்ந்துகொள்ளவும் அருமையான தளத்தை வழங்கியுள்ளது,” என்றார் அவர்.
இந்த ஆண்டின் தீபாவளிக் கொண்டாட்டங்கள், அனைத்து வயதினரும் கலந்துகொள்ளக்கூடிய மற்ற நடவடிக்கைகளையும் இலவசமாக வழங்குகிறது. மருதாணி இடுதல், பண்டிகைக் கால ஆடை அலங்காரங்களை அணிந்து பார்ப்பதற்கான கூடாரங்கள், பூ மாலை கட்டும் நடவடிக்கை, நேரடிக் கலாசார நிகழ்ச்சிகள், மாலை நேரச் சிற்றுண்டிகள் போன்றவற்றை வருகையாளர்கள் எதிர்பார்க்கலாம்.
குறிப்பாகச் சிறுவர்களுக்காக முதல் தளத்தில் பல்வேறு கைவினை நடவடிக்கைகளும் புகைப்படச் சாவடியும் உள்ளன. புதுப்பிக்கப்பட்ட சிறுவர் நடவடிக்கைப் புத்தகத்தையும் தீபாவளி அஞ்சல் அட்டைகளையும் இங்குப் பெறலாம்.
மேலும், நிலையத்தின் வெளிப்புறத்தில் இசைக் கலைஞர்கள், நடனமணிகள் படைக்கும் நிகழ்ச்சிகளையும் கண்டு ரசிக்கலாம்.
“குடும்பங்கள், நண்பர்கள், புதிய முறையில் தீபாவளியைக் கொண்டாட விரும்பும் யாவரும் துடிப்புமிக்க, பண்பாட்டுச் சூழலில் ஒன்றுகூட இது ஒரு சிறந்த வாய்ப்பு,” என்று திருவாட்டி கிருத்திகா கூறினார்.
அடுத்த நான்கு வாரங்களுக்கு சனிக்கிழமைகளில் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரைக்கும் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரைக்கும் நிலையம் திறந்திருக்கும்.
பெரும்பாலான நிகழ்ச்சிகளுக்கு அனுமதி இலவசம்.
தேர்ந்தெடுக்கப்பட்ட பயிற்சிப் பயிலரங்குகளுக்கு முன்பதிவு அவசியம். மேல்விவரங்களுக்கு, ihc-programmes.peatix.com என்ற இணையத்தளத்தை நாடலாம்.