தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

19வது முறையாக நடைபெற்ற ‘இலக்கியவனம்’ நிகழ்ச்சி

2 mins read
e399e9bd-bbcd-499d-97a2-5b98fb43cd9a
செய்தி, படம்: - தமிழ்மொழி பண்பாட்டுக் கழகம்

தமிழ் ஆர்வலர்களின் நல்லாதரவோடு தமிழ்மொழி பண்பாட்டுக் கழகம் நவம்பர் 16ஆம் தேதி, சிராங்கூன் சமூக மன்றத்தில் முனைவர் சரோஜினி செல்லக்கிருஷ்ணனின் தலைமையில் ‘இலக்கியவனம்’ நிகழ்ச்சியைச் சிறப்பாக நடத்தியுள்ளது.

இந்நிகழ்ச்சி 19வது முறையாக நடத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. பதினெண் மேற்கணக்கு நூல்களை கடந்து பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் துவங்கப்பட்டுள்ளன. இந்த மாதம் நாலடியார் நூலில் உள்ள பாடல்களைக் கருப்பொருளாகக் கொண்டு ‘இலக்கியவனம்’ நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்தப் பெருமைமிக்க நிகழ்ச்சி, இம்முறை திருவள்ளுவர் தமிழ்ப் பேச்சாளர் மன்ற மாதாந்தரக் கூட்டத்தின் ஓர் அங்கமாக நடைபெற்றது.  

நிகழ்ச்சி நெறியாளராக அசோக் நிகழ்ச்சியை தொடங்கிவைத்தார். சிராங்கூன் சமூக மன்ற இந்தியச் செயலவை குழுவின் துணைத் தலைவர் திரு முரளி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.

அவருக்கு தமிழ்மொழி பண்பாட்டுக் கழகத்தின் சார்பாக ஒருங்கிணைப்புத் தலைவர் திரு உமா சங்கர் பொன்னாடை போர்த்தி மரியாதை செய்தார். சிறப்பு விருந்தினரின் வாழ்த்துச்செய்திக்குப் பிறகு முனைவர் சரோஜினி செல்லக்கிருஷ்ணனின் தலைமையில் நிகழ்ச்சி தொடங்கியது. 

பெருமதிப்பிற்குரிய முனைவர் சரோஜினி மிகச் சிறப்பான வகையில் நாலடியார் பற்றிய அறிமுகத்தோடு அருமையாக உரையாற்றி இலக்கியவனத்தைத் தொடங்கி வைத்தார். அவர் பேச்சாளர்களை அறிமுகம் செய்துவைக்க, பேச்சாளர்கள் அனுராதா, வானதி, மணிகண்டன், மதிவதனா, உமா சங்கர், வித்யா மற்றும் இராதிகா மேடைக்குச் சென்று நாலடியாரில் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட தலைப்புகளையும் பாடல்களையும்  இலக்கிய சுவை சற்றும் குறையாமல் மிகவும் திறம்பட எளிமையான முறையில் நகைச்சுவையோடும் நளினத்தோடும் விளக்கினர்.

திரளாக வந்திருந்த 40க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் அனைவரும் பேச்சாளர்களின் இலக்கிய மழையில் நனைந்தார்கள் என்றே சொல்ல வேண்டும். 

இடையிடையே, முனைவர் சரோஜினி, நாலடியார் பெருமைகளை எடுத்துக்கூறியதோடு, அதில் வரும் பாடல்களை இன்னும் பல செய்திகளோடு இணைத்து பார்வையாளர்களுக்குப் புரியும் வண்ணமும் பயனுள்ள வகையிலும் பல எடுத்துக்காட்டுகளைக் கூறி நிகழ்ச்சியை இனிதே நிறைவு செய்தார்.  

குறிப்புச் சொற்கள்