441 பயிற்சி அதிகாரிகள் பதவி நியமனம்

3 mins read
02403e38-61dc-4bbc-affb-835dc70f8b1a
சனிக்கிழமை (நவம்பர் 30) சாஃப்டி ராணுவப் பயிற்சிக் கழகத்தில் நடந்த 135/24 பயிற்சி அதிகாரி பதவி நியமன அணிவகுப்பில் அதிபர் தர்மன் சண்முகரத்னம் இரண்டாம் லெஃப்டினன்ட் ஜோயல் ஜேம்சிடம் கெளரவ வாள் விருதை வழங்கினார். - படம்: தற்காப்பு அமைச்சு
கெளரவ வாள் விருதைப் பெற்ற இரண்டாம் லெஃப்டினன்ட் ஜோயல் ஜேம்ஸ், 19.
கெளரவ வாள் விருதைப் பெற்ற இரண்டாம் லெஃப்டினன்ட் ஜோயல் ஜேம்ஸ், 19. - படம்: தற்காப்பு அமைச்சு

தேசிய தினத்தன்று பிறந்தவர் இரண்டாம் லெஃப்டினன்ட் ஜோயல் ஜேம்ஸ், 19.

அதனால் தொடக்கத்திலிருந்து சிங்கப்பூருக்கும் அவருக்கும் இடையே ஒரு தனி பந்தம் இருந்துள்ளது.

13 வயதில் தன் பெற்றோரின் வேலை, அக்காவின் படிப்பு கருதி அவர் தன் குடும்பத்தோடு சிங்கப்பூரிலிருந்து அமெரிக்காவுக்குக் குடிபெயர்ந்தார்.

எனினும், தேசிய சேவைக்கான வயதை நெருங்கியதும், தன் குடும்பத்தைவிட்டு தாமாக சிங்கப்பூருக்குத் திரும்பி தேசிய சேவையை ஆற்ற முடிவெடுத்தார் ஜோயல். “சிங்கப்பூருக்குத் திரும்பவேண்டும் என்பது எப்போதுமே என் கனவாக இருந்தது. அதனால், ஏன் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தக்கூடாது என நினைத்தேன்,” என்றார் ஜோயல்.

ஜோயலின் தேசப் பற்றுக்குத் தகுந்த பரிசாக, சனிக்கிழமை (நவம்பர் 30) சாஃப்டி ராணுவப் பயிற்சிக் கழகத்தில் நடந்த 135/24 பயிற்சி அதிகாரி பதவி நியமன அணிவகுப்பில் அதிபர் தர்மன் சண்முகரத்னம் அவரிடம் கெளரவ வாள் விருதை அளித்தார்.

சிங்கப்பூருக்குத் திரும்பவேண்டும் என்பது எப்போதுமே என் கனவாக இருந்தது. அதனால், ஏன் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தக்கூடாது என நினைத்தேன்.
இரண்டாம் லெஃப்டினன்ட் ஜோயல் ஜேம்ஸ், 19

‘ராணுவ உளவுத்துறை’ (Army Intelligence) பிரிவின் 38 பயிற்சி அதிகாரிகளில் தலைசிறந்த வீரராகத் திகழ்ந்தமைக்காக ஜோயல் இவ்விருதைப் பெற்றார்.

தம் மகன் விருது வாங்குவதைக் காண ஜோயலின் பெற்றோரும் அமெரிக்காவிலிருந்து வந்திருந்தனர். ஆறு மாதங்கள் கழித்து அவர்களைக் கண்டதில் ஜோயல் பூரிப்படைந்தார்.

“பல ஆண்டுகள் கழித்து சிங்கப்பூர் திரும்பியபோது என்னால் மீண்டும் சிங்கப்பூர் சமூகத்தில் இணையமுடியுமா என்ற பதற்றம் இருந்தது.

“ராணுவத்தில் எனக்கு நல்ல நண்பர்கள் கிடைத்ததால் என்னால் சமாளிக்க முடிந்தது,” என்றார் ஜோயல். தன் குடும்பத்திலேயே தேசிய சேவை செய்த முதல் வீரர் என்ற பெருமையும் அவரைச் சாரும்.

கடற்படைக் கனவுகள்

சிங்கப்பூர்க் குடியரசுக் கடற்படையின் இரண்டாம் லெஃப்டினன்ட் ரிக்கே‌ஷ் ரவிச்சந்திரன், 21.
சிங்கப்பூர்க் குடியரசுக் கடற்படையின் இரண்டாம் லெஃப்டினன்ட் ரிக்கே‌ஷ் ரவிச்சந்திரன், 21. - படம்: தற்காப்பு அமைச்சு

பெரும் முனைப்புடன் தேசிய சேவையாற்றி பதவி நியமனம் பெற்ற மற்றொருவர், சிங்கப்பூர்க் குடியரசுக் கடற்படையின் இரண்டாம் லெஃப்டினன்ட் ரிக்கே‌ஷ் ரவிச்சந்திரன், 21.

அவரது தாத்தா சிங்கப்பூர் காவல்துறையில் முழுநேரமாகப் பணியாற்றியவர். தந்தை தேசிய சேவையின்போது ராணுவத்தில் இருந்தவர். குடும்பத்தில் கடற்படைக்குச் சென்ற முதல் வீரர் ரிக்கே‌ஷ்.

பயிற்சி அதிகாரிப் பள்ளியில் கடற்படையில் சேவையாற்றிய 12 தேசிய சேவையாளர்களில் ஒருவர் ரிக்கே‌ஷ்.

சிங்கப்பூர் பலதுறைத் தொழிற்கல்லூரியில் கடல்துறை வர்த்தகம் பயின்றதிலிருந்தே அவருக்கு அத்துறையில் பெரும் நாட்டம்.

அதனால், அடிப்படை ராணுவப் பயிற்சி (BMT) காலத்திலும் பயிற்சி அதிகாரிப் பள்ளியில் சேர்ந்தவுடனும், கடற்படையில் சேவையாற்ற விரும்புவதாக அவர் தெரிவித்திருந்தார். எனினும், பல்வேறு கூறுகளின் அடிப்படையில் வீரர்கள் கடற்படைக்குத் தேர்வுசெய்யப்படுவதால் தனக்கு இவ்வாய்ப்பு கிடைக்கும் என அவர் எதிர்பார்க்கவில்லை. அது கிடைத்தபோது அதை அவர் நன்கு பயன்படுத்திக்கொண்டார்.

“முதல் சில மாதங்களில் கடற்படை சார்ந்த நிறைய பாடங்களும் கடினமான தேர்வுகளும் இருந்தன. அவை எனக்குச் சவால்மிக்கதாக இருந்தன.

“பயிற்சி முடித்தபின் ஒரு மாதம் போர்க்கப்பலில் பயணம் செய்து நாங்கள் கற்றதை நடைமுறைப்படுத்தினோம். பின்பு, மூன்று மாதங்களுக்குத் தனித்தனிக் கப்பல்களில் வேலைப்பயிற்சிக்குச் சென்றோம்,” என்றார் ரிக்கே‌ஷ்.

வர்த்தகக் கப்பல்களில் சோதனை நடத்தும் 180வது படைப்பிரிவில் (180 Squadron) ரிக்கே‌ஷ் இனி குழுத் தலைவராகச் செயல்படுவார். “நான் எடுக்கும் ஒவ்வொரு முடிவும் என் பொறுப்பிலிருக்கும் இளைய வீரர்களையும் பாதிக்கும். அதனால், எப்பொழுதும் நான் தலைசிறந்த முயற்சியைச் செய்வேன்,” என்றார் ரிக்கே‌ஷ்.

ராணுவத்திலிருந்து 339 வீரர்கள், கடற்படையிலிருந்து 53 வீரர்கள், ஆகாயப் படையிலிருந்து 49 வீரர்கள் என மொத்தம் 441 பயிற்சி அதிகாரிகள் நவம்பர் 30ஆம் தேதி பதவி நியமனம் பெற்றனர். பயிற்சி அதிகாரிப் பள்ளியில் 38 வாரக் கடும் பயிற்சிக்குப் பிறகு அவர்கள் இந்த மைல்கல்லை அடைந்துள்ளனர்.

இனி நான் எடுக்கும் ஒவ்வொரு முடிவும் என் பொறுப்பிலிருக்கும் இளைய வீரர்களையும் பாதிக்கும். அதனால், எப்பொழுதும் நான் தலைசிறந்த முயற்சியைச் செய்வேன்.
இரண்டாம் லெஃப்டினன்ட் ரிக்கே‌ஷ் ரவிச்சந்திரன், 21.

“அடுத்த ஆண்டு, சிங்கப்பூரின் 60ஆம் பிறந்தநாளை நாம் ஒன்றாகக் கொண்டாடவிருக்கிறோம். இன்னும் 60 ஆண்டுகளுக்கும் கூடுதலாக நாம் சுதந்திரத்தைக் கொண்டாடவேண்டுமெனில், ஒவ்வொரு தலைமுறையும் தனது பணியோடு நின்றுவிடாமல், அடுத்தத் தலைமுறையிடமும் பொறுப்பை ஒப்படைக்கவேண்டும்,” எனக் கூறி வீரர்களின் குடும்பங்களைப் பாராட்டினார் அதிபர் தர்மன்.

குறிப்புச் சொற்கள்