44ஆம் திருமுறை மாநாடு

1 mins read
37da9906-4e86-4ff3-8620-52b05c976a37
கடந்த ஆண்டின் திருமுறை மாநாடு, ஏற்பாட்டுக் குழுவின் ஒருங்கிணைப்பில் ஶ்ரீ ருத்ர காளியம்மன் ஆலயத்தில் மாலைதோறும் நடந்தேறியது. - படம்: திருமுறை மாநாட்டு ஏற்பாட்டுக் குழு

திருமுறைகள் வாயிலாக வாழ்வியலைப் புரிந்துகொள்ளும் தளமாக விளங்குகிறது சிங்கப்பூர்த் திருமுறை மாநாடு. ஆன்மிகத்தையும் வாழ்க்கைமுறையையும் இணைக்கும் இந்நிகழ்வு இவ்வாண்டு ஜூலை 26, 27, 28 தேதிகளில் மாலை நேரத்தில் அருள்மிகு செண்பக விநாயகர் ஆலயத்தில் நடைபெற உள்ளது.

தமிழ்நாட்டின் சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தின் சென்னை வளாக இயக்குநர் டாக்டர் சுதா சேஷய்யன் சிறப்புப் பேச்சாளராக இடம்பெற உள்ளார். மருத்துவ நோக்கில், அறிவியல் நோக்கில், மகளிர் நோக்கில் திருமுறை என மூன்று தலைப்புகளில் அவரின் சொற்பொழிவுகள் அமையும்.

சிங்கப்பூர் இந்திய மேம்பாட்டுக் கழகத்தின் (சிண்டா) தலைமை நிர்வாகி அன்பரசு ராஜேந்திரன் மாநாட்டைத் தொடங்கி வைக்கவுள்ளார். பல்வேறு சிங்கப்பூர் இந்து ஆல­யங்­களில் பணி­யாற்­றும் ஓது­வார்­களும் மூன்று நாள்களும் திருமுறை இன்னிசை வழங்குவர்.

ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 28) காலை 8.30 மணியளவில் முருகன் திருக்குன்றம் ஆலயத்தில் 63 நாயன்மார் குருபூசையும் நடைபெறும். அதைத் தொடர்ந்து டாக்டர் சுதா சேஷய்யனுடனான சைவசமய கேள்வி பதில் அங்கம் இடம்பெறும்.

ஆண்டுதோறும் மாநாட்டின் தொடர்பில் ஏற்பாடாகும் பலதரப்பட்ட போட்டிகளில் பங்குபெற்று வெற்றி பெற்றோருக்கு நிகழ்வில் பரிசுகள் வழங்கப்பட உள்ளன.

சிங்கப்பூர்த் திருமுறை மாநாடு 1981ஆம் ஆண்டு மறைந்த திரு க. அம்பலவாணரால் தொடங்கப்பட்டது. மேல் விவரங்களுக்கு singaithirumurai.org இணையத்தளத்தை நாடலாம்.

குறிப்புச் சொற்கள்