டாக்டர் அப்துல் கலாமின்93வது பிறந்தநாள் விழா

டாக்டர் அப்துல் கலாமின்93வது பிறந்தநாள் விழா

2 mins read
9a8e1bb4-d5d0-4e42-96ad-1d4e7c7266d5
டாக்டர் அப்துல் கலாம் பற்றி மா. அன்பழகன் எழுதிய பாடலை 11 மாணவர்களுடன் மிக உருக்கமாகப் பாடிய திரு பரசு கல்யாண் (வலது). - படம்: தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகம்
multi-img1 of 2

அப்துல் கலாம் இலட்சியக் கழகமும் தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகமும் இணைந்து டாக்டர் அப்துல் கலாமின் 93வது பிறந்தநாளை மிகச்சிறப்பாகக் கொண்டாடின.

இந்த விழாவுக்கு உமறுப்புலவர் தமிழ்மொழி நிலைய அரங்கில் சனிக்கிழமை (அக்டோபர் 12) மாலை 6 மணியளவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் உள்துறை, தேசிய வளர்ச்சி துணை அமைச்சர் இணைப்பேராசிரியர் டாக்டர் முஹம்மது ஃபைஷால் இப்ராஹிம் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு சிறப்பித்தார்.

தமிழ்த்தாய் வாழ்த்து காணொளிக்கு அக்‌ஷைனி தனபாலன் பாட, தொடர்ந்து ஸ்ரீரஜாவின் பாரம்பரிய நடனம் இடம்பெற்றது. அதைத்தொடர்ந்து, அப்துல் கலாம் இலட்சியக் கழகத்தின் தலைவர் திரு அமீரலி வரவேற்புரை வழங்கினார். டாக்டர் அப்துல் கலாமின் பண்புகளை எடுத்துச்சொல்லி சிறப்பு விருந்தினரை நிகழ்ச்சிக்கு வரவேற்பதில் பெருமையடைவதாக அவர் குறிப்பிட்டார்.

அதை அடுத்து, அமைச்சர் ஃபைஷால் இப்ராஹிம் உரையாற்றினார். டாக்டர் அப்துல் கலாமுக்காக நடத்தப்படும் விழாவில் கலந்துகொள்வதில் பெருமையடைவதாக அவர் கூறினார்.

வாழ்நாள் சாதனையாளர் விருது யாருக்கு என்பதைத் திரு அருமைச்சந்திரன் PBM அறிவித்து, சிறப்பு விருந்தினர் திரு மா.அன்பழகனுக்கு வாழ்நாள் சாதனைக்கான விருதையும் சான்றிதழையும் வழங்கினார். அதைத் தொடர்ந்து, திரு பரசு கல்யாண் 11 மாணவர்களுடன், டாக்டர் அப்துல் கலாம் பற்றி மா.அன்பழகன் எழுதிய பாடலை மிக உருக்கமாகப் பாடினார்.

அதன் பின்னர், பட்டிமன்றம் இடம்பெற்றது. டாக்டர் அப்துல் கலாமிடம் 20ஆண்டுகள் அறிவியல் ஆலோசகராகப் பணியாற்றிய டாக்டர் பொன்ராஜின் தலைமையில் பட்டிமன்றம் இடம்பெற்றது.

டாக்டர் அப்துல் கலாமின் வெற்றிக்குக் காரணம் மதிநுட்பமா, மனிதநேயமா என்பதே தலைப்பு. மதிநுட்பம் அணியில் திருமதி அகிலாமுத்து, திருமதி சக்திதேவி தமிழ்ச்செல்வன், செல்வி மோஹன் ஹரிவர்த்தினி ஆகியோரும் மனிதநேயம் அணியில் திரு ஜோதி. மாணிக்கவாசகம், திருமதி வானதிபிரகாஷ், செல்வி முத்துசுவேதா ஆகியோரும் மிகச் சிறப்பாக வாதிட்டனர்.

டாக்டர் அப்துல் கலாமோடு பழகிய காலங்களில் நடந்த நிகழ்வுகளை டாக்டர் பொன்ராஜ் சுவையாகப் பகிர்ந்துகொண்டு தீர்ப்பை வழங்கினார். மதிநுட்பம் என்பது உண்மைதான் என்றாலும், மனிதநேயம் அல்லாத மதிநுட்பம் வெற்றியைத் தராது. ஆக மதிநுட்பத்திற்கும் மேலாக அவரிடம் இருந்த மனிதநேயமே அவருடைய வெற்றிக்குக் காரணம் என்று அவர் தீர்ப்பளித்தார்.

இறுதி நிகழ்வாக அப்துல் கலாம் இலட்சியக் கழகத்தின் செயலாளர் திரு ஜான் ராமமூர்த்தி நன்றிசொல்ல, நிகழ்ச்சி இனிதே முடிவடைந்தது. திருமதி அன்னபூரணி கார்த்திகேயன் நிகழ்ச்சியை மிகச் சிறப்பாக நெறிப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்