சுற்றுப்புற நிலைத்தன்மைக்குப் பங்காற்றும் இளம் இந்தியத் தொழில்முனைவர்

ஊழியரணி உருமாற்ற விருது பெற்ற சுதேஷ் மேக்ஸ்

2 mins read
58d04a6b-0fec-44d0-94eb-a9fb88e42125
நீடித்த நிலைத்தன்மை நோக்கிய பணியில் செயலாற்றி வரும் இளம் இந்தியத் தொழிலதிபர் டி.சுதேஷ் மேக்ஸ். - படம்: இணையம்

மின்னணுக் கழிவுகளின் மறுசுழற்சி, தரவுகளையும் சாதனங்களையும் பாதுகாப்பான முறையில் அகற்றுதல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டுவரும் ‘கேஜிஎஸ்’ நிறுவனத்திற்கு ஊழியரணி உருமாற்ற விருது வழங்கப்பட்டுள்ளது.

பணித்திட்டங்களைச் செயல்படுத்துவதிலும் புதிய வலுவான ஊழியரணியை அமைத்துத் திறம்படச் செயலாற்றுவதிலும் முன்மாதிரி நிறுவனங்களை அங்கீகரிக்கும் வகையில் இந்த விருது வழங்கப்பட்டது.

சுற்றுச்சூழல் சேவைகள் தொழிற்துறையில் சிங்கப்பூர் ஊழியரணி அமைப்பின் முதலாவது ஊழியரணி உருமாற்ற விருதைப் பெற்றது குறித்துக் கருத்துரைத்தார் ‘கேஜிஎஸ்’ நிறுவனத்தின் இணை நிறுவனரும் செயல்பாட்டு இயக்குநருமான 33 வயது டி.சுதேஷ் மேக்ஸ்.

“ஒவ்வொருவரையும் நிறைவான, பயன்மிக்க ஊழியராக மாற்றும் நோக்கில் கூடுதல் முதலீடு செய்யும் எங்கள் நிறுவனத்தின் உறுதிப்பாட்டை இந்த விருது பிரதிபலிக்கிறது,” என்று அவர் குறிப்பிட்டார்.

ரிபப்ளிக் பலதுறைத் தொழிற்கல்லூரிப் பட்டதாரியான மேக்ஸ், சமூகம், சுற்றுச்சூழல் துறையில் வாய்ப்புகளையும், அத்துறைகளில் இடைவெளியும் நிலவுவதைத் தான் கண்டதாகக் குறிப்பிட்டார். அந்த அடிப்படையிலேயே கழிவு மேலாண்மை, நிலைத்தன்மை சார்ந்த துறையில் ஈடுபட்டதாக அவர் கூறினார்.

சுற்றுச்சூழல், நீடித்த நிலைத்தன்மை ஆகியவற்றில் அக்கறைகொள்ளும் இளம் தலைமுறை இந்தியர்களில் ஒருவரான மேக்ஸ், மறுசுழற்சி சார்ந்த முயற்சிகளில் இளையர்கள் பங்களிக்கலாம் என்றும் அது பயன்பாட்டிலிருந்தே தொடங்குகிறது என்றும் சொன்னார்.

“தேவையானவற்றை மட்டும் வாங்குங்கள். அது தேவையா என்று தெளிவாகத் தெரியாத பட்சத்தில், சில நாள்கள் காத்திருங்கள். மின்னணுக் கழிவுகளை உரிய கழிவுத் தொட்டிகளில் மறுசுழற்சி செய்வது அவசியம்,” என்று மேக்ஸ் வலியுறுத்தினார்.

இதற்கிடையே, செப்டம்பர் 1ஆம் தேதி, தேவையற்ற மின்னணுச் சாதனங்களைப் பாதுகாப்பாகவும் எளிதாகவும் மறுசுழற்சி செய்ய உதவும் இலக்குடன் ‘டேக்பேக்’ (TakeBag) எனும் திட்டத்தை ‘கேஎஸ்ஜி’ நிறுவனம் தொடங்கியது.

உள்ளூர் மின்கழிவு மறுசுழற்சி நிறுவனமான ‘கேஎஸ்ஜி’ இணை இயக்குநர்கள் சுதேஷ் மேக்ஸ் (இடம்), ஆண்ட்ரூ.
உள்ளூர் மின்கழிவு மறுசுழற்சி நிறுவனமான ‘கேஎஸ்ஜி’ இணை இயக்குநர்கள் சுதேஷ் மேக்ஸ் (இடம்), ஆண்ட்ரூ. - படம்: சாவ்பாவ்

இத்திட்டம் வாயிலாக மின்கழிவுகளைப் பாதுகாப்பாக அப்புறப்படுத்துவதற்கு உரிய ‘பேக்-ஐடி’ (Bag-IT) எனும் அஞ்சல் பைகளைக் குடியிருப்பாளர்கள் ‘கேஎஸ்ஜி’ நிறுவனத்திடம் இலவசமாகப் பெறலாம்.

“மின்கழிவுகள் மறுசுழற்சி, அவற்றை அகற்றுதல் ஆகியவற்றுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட அஞ்சல் பையைப் பெற்றுக்கொண்டு, அதில் பழைய மின்னணுச் சாதனங்களை வைத்து, பாதுகாப்பாக மூடி, தங்கள் குடியிருப்புக்கு அருகில் உள்ள சேகரிப்புப் பெட்டகத்தில் வைத்துவிடலாம்,” என்று திட்டம் குறித்து விவரித்தார் திரு மேக்ஸ்.

உலகளவில் மின்கழிவுகள் ஐந்து மடங்கு வேகமாக அதிகரித்து வருகின்றன. 2022ம் ஆண்டில் 62 மில்லியன் டன் மின்கழிவுகள் குவிந்தன எனவும்  2010ஆம் ஆண்டுடன் ஒப்புநோக்க இது 82 விழுக்காடு அதிகம் என்றும் ஐக்கிய நாடுகள் அமைப்பின் நான்காவது உலகளாவிய மின் கழிவு கண்காணிப்பு (GEM) அறிக்கை எச்சரிக்கிறது.

குறிப்புச் சொற்கள்