தமிழ் நாடக வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்லும் வகையில் அகம் தியேட்டர் நாடகக் குழுவின் முதல் ‘பிளேக் பாக்ஸ்’ நிரந்தர நாடக அரங்கம் ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 13) திறக்கப்பட்டது.
தஞ்சோங் பகார் டிஸ்ட்ரிபார்க்கில் சிங்கப்பூர் கலை அரும்பொருளகத்திற்குமேல் அமைந்துள்ள புதிய அரங்கின் திறப்பு விழாவில் கலாசார, சமூக, இளையர்துறை, அமைச்சர் எட்வின் டோங் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார்.
“கலைகள் ஆற்றும் முக்கியப் பங்கை அரசாங்கம் அங்கீகரிக்கிறது. கலாசார இணை நிதி, சிங்கப்பூர் கலைப்பள்ளி வழங்கும் திறன் மேம்பாடு, கலையில் திறம்படச் செயல்பட மாணவர்களுக்கு வழங்கப்படும் உபகாரச் சம்பளம் ஆகியவை இதற்கு மேலும் வழியமைக்கின்றன.
“அகம் நாடகக் குழுவின் புதிய அரங்கத்திற்குப் பார்வையாளர்களின் ஆதரவு தேவைப்படுகிறது. அனைவருக்கும் இதில் பங்குண்டு. அகம் வயதளவில் இளமையாக இருந்தாலும் உள்ளூர் கலைத் துறையை அது வலுப்படுத்தியுள்ளது. மேலும், அகம் ஏற்கெனவே செய்வதுபோல் வருங்காலத் தலைமுறையினரையும் செதுக்குவது முக்கியம்,” என்றார் அமைச்சர் டோங்.
அரங்கத்தை அமைக்க 100க்கும் மேற்பட்ட கொடையாளர்களிடமிருந்து $400,000க்கும் மேற்பட்ட தொகை திரட்டப்பட்டது.
“சொந்த இடத்தில் அதிக நாடகங்களைப் படைக்க முடியும். இது மனதிற்கு மிக நிறைவாக உள்ளது,” என்று கூறிய அகம் நாடகக் குழு நிறுவனர் சுப்பிரமணியம் கணேஷ், 40, நீண்டகால நிலைத்தன்மைக்கு நன்கொடையாளர்களின் ஆதரவு மிக முக்கியம் என்றார்.
நல்ல நாடக அனுபவத்தை வழங்கும் வகையில் உள்ளிழுக்கக்கூடிய இருக்கைகளும் மேடை அமைப்பும் பலவகை நாடகக் கூறுகளை மேடைப்படுத்த வகைசெய்கின்றன.
சிங்கப்பூர் இந்திய நாடகத்திற்கான முதல் பிளாக் பாக்ஸ் அரங்கமான இது, 110 இருக்கைகளைக் கொண்டுள்ளது. நவீன வசதிகளுடன் அமைக்கப்பட்ட இந்த மேடை புதுமுயற்சிகள், புத்தாக்க நாடக நிகழ்வுகள் படைப்பதற்கான அரங்கமாக செயல்படும்.
தொடர்புடைய செய்திகள்
பயிலரங்குகள், நாடக வாசிப்புகள், சோதனை முயற்சிகளுக்கும் வசதியாக அமையும் இந்த அரங்கம், அடுத்த தலைமுறை நாடகக் கலைஞர்களை ஊக்குவிக்கும். தமிழ் நாடகங்களைத் தயாரிக்க விரும்பும் கலைஞர்களுக்கும் இந்த அரங்கு உதவியாக இருக்கும் என்று கணேஷ் நம்புகிறார்.
“இந்த அரங்கத்தைப் பயன்படுத்த தமிழ் நாடகக் கலைஞர்கள் முன்வரவேண்டும். அதிக தமிழ் நாடகங்கள் இங்கு படைக்கப்பட வேண்டும். நடனம், இசை நிகழ்ச்சிகள், இதர மொழி படைப்புகள் மேடையேறவும் இந்த அரங்கம் வழியமைக்கும்,” என்றார் அவர்.
கடந்த ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக அகம் நாடகக் குழு தமிழ் நாடகக் கலையை உயிர்ப்பிக்கும் பணியில் ஒரு முன்னணி தூணாக இருந்து வருகிறது. அகம் நடத்தும் தியேட்டர் சீரிஸ் எனும் திட்டம், தமிழ் நாடகத்தில் நாட்டம் உள்ளவர்கள், கலை, நாடகத்துறை சார்ந்து படிக்க உதவித்தொகை வழங்குகிறது.
திறப்பு விழாவின்போது, கலைத்துறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட இளையர்களுக்கு பங்களிப்பு, திறனை அங்கீகரிக்கும் வகையில் உதவித்தொகை வழங்கப்பட்டது.
“அகம் நாடகக் குழு தமிழ் மேடை நாடக உலகிற்கு என்னைக் கொண்டுசெல்ல ஒரு படிக்கல்லாக இருந்தது. எனக்கு 13 வயதிலிருந்தே மேடை நாடகங்களில் ஆர்வம். இந்த உதவித்தொகை எனக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது. மேற்படிப்புக்குப் பிறகு நாடகத் துறையில் சேர விரும்புகிறேன்,” என்று உதவித்தொகை பெற்றவர்களில் ஒருவரான நிஷாந்த் குமார் சிவகுமார், 24, சொன்னார்.
“எனக்கு ஒரு கனவு நனவானதுபோல் இருக்கிறது. எனக்கும் மேடை நாடகங்களுக்கும் அவ்வளவு பெரிய தொடர்பு இல்லை என்றாலும் நான் அவற்றை ரசித்துப் பார்ப்பேன். மற்ற நாடகக் குழுக்களுக்கு நிகராக அகம் வளர்ந்துள்ளதை இத்திறப்பு விழா நிரூபிக்கிறது. அகம் நாடகக் குழுவை அனைத்துலக அளவிற்கு கொண்டுசெல்ல வேண்டும் என்பது எங்கள் அடுத்த இலக்கு,” என்று அந்நாடகக் குழுவின் இயக்குனர்கள் குழுத் தலைவர் அழகிய பாண்டியன் தெரிவித்தார்.

