சுவாசக்காற்றை உலகிற்குக் கொடையாக அள்ளித்தரும் அமேசான் மழைக்காடுகளின் வியக்கத்தகு அழகும் வளமையும், ‘அமேசானியா’ நிழற்படக் கண்காட்சி மூலம் சிங்கப்பூரிலேயே உயிர்பெற உள்ளது.
அடர்காட்டுத் தாவரங்கள், மலைப்பகுதிகள், நீர்நிலைகள், வனவிலங்குகள், பழங்குடி மக்கள் என காண்பதற்கரிய காட்சிகளை நிழற்படக்கலைஞர் செபஸ்டியாவ் சல்காடோ (Sebastião Salgado) பதிவு செய்திருக்கிறார்.
அவற்றுடன், குடிநீர் சூழ்ந்துள்ள தீவுகளையும் நதிகளைப் போல காடுகளுக்கிடையே புரளும் நீராவிகளையும் அக்கலைஞர் படமெடுத்திருக்கிறார். இயற்கையிலேயே நவரசங்கள் இருப்பதை சால்காடோவின் 200க்கும் அதிகமான கறுப்பு-வெள்ளைப் படங்கள் காண்பிக்கின்றன.
அமேசான் மழைக்காடுகளில் சல்காடோ ஆற்றிய பல்லாண்டுகால உழைப்பின் பலனாக விளைந்த இந்தக் கண்காட்சி, சுற்றுப்புறப் பாதுகாப்பு குறித்த கலந்துரையாடலைத் தொடர்கிறது.
இந்தப் படைப்புகளைக் காட்டும் கண்காட்சி, ஆசிய பசிபிக் வட்டாரத்தின் முதல் தளமாக, தேசிய அரும்பொருளகத்தில் சிங்கப்பூரில் நவம்பர் 22ஆம் தேதி முதல் அடுத்த ஆண்டு மார்ச் 25 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. நுழைவுச்சீட்டுக்கான கட்டணம், 11 வெள்ளி.
இதற்கு முன்னதாக சல்காடோவின் புகைப்படங்கள் 2014ல் தேசிய அரும்பொருளகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
“உலகப் பருவநிலையுடன் ஆழமாகத் தொடர்புடையவை அமேசான் மழைக்காடுகள். பருவநிலை மாற்றத்தைப் பற்றிய விழிப்புணர்வும் நிவாரண நடவடிக்கைகளும் பெருகிவர, சல்காடோவின் புகைப்படங்களால் வருகையாளர்கள், சுற்றுப்புறத்தைப் பாதுகாக்கும் நற்காரியங்களில் ஈடுபட ஊக்கம் பெறவேண்டும் என வேண்டுகிறோம்,” என்று சிங்கப்பூர் தேசிய அரும்பொருளகத்தின் இயக்குநர் சுங் மே குவென் தெரிவித்தார்.
உயிர்கள் நிரம்பி உழலும் அமேசான் மழைக்காடு உலகத்திற்கே மரபுடைமைப் பொருளாக விளங்குவதாக சல்காடோ தெரிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்
“இதனைப் பாதுகாப்பது நம் கடமை. இந்தக் கண்காட்சி மூலம் நம் சமூகம் விழித்து அதனைப் பாதுகாப்பதற்குரிய நடவடிக்கையை எடுக்கவேண்டும் என்பதே என் விருப்பம்,” என்று அவர் கூறினார்.
உள்ளார்ந்த அனுபவத்தை வழங்கும் இந்தக் கண்காட்சிக்கான பின்னணி ஓசைகளை பிரஞ்சு இசையமைப்பாளர் ஜான்-மிஷெல் ஜாரேவா தொகுத்துள்ளார். சிறார்களுக்கான அங்கங்களும் இதில் உள்ளன.