இசையுலகிற்கு விடைகொடுக்கும் அரிஜித் சிங்

இசையுலகிற்கு விடைகொடுக்கும் அரிஜித் சிங்

2 mins read
c995795c-d05c-41eb-bbe0-cb2f6eb2f93f
ஓய்வுபெறப்போவதாக அறிவித்துள்ள புகழ்பெற்ற இசைக்கலைஞர் அரிஜித் சிங். - படம்: மிட்-டே
multi-img1 of 2

பாலிவுட்டின் ஆன்மக் குரல் அரிஜித் சிங் இசையுலகிலிருந்து ஓய்வு பெறுகிறார் என்ற செய்தி மின்னலெனப் பரவியபோது சமூக ஊடகங்கள் அனைத்தும் அதிர்ச்சியில் உறைந்தன.

எக்ஸ், இன்ஸ்டகிராம் பக்கங்களில் #ArijitSinghRetires, #EndofAnEra போன்ற ஹேஷ்டேக்குகள் சில நிமிடங்களிலேயே இந்திய அளவில் இந்தச் செய்தி பரவலாகத் தொடங்கியது.

கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக தங்களின் மகிழ்ச்சி, சோகம், தனிமையின் துணையாக இருந்த அந்தக் குரல் ஓய்வுபெறுவதை ரசிகர்கள் ஒரு தனிப்பட்ட இழப்பாகவே கருதுகின்றனர்.

பல்வேறு நகரங்களில் உள்ள இசை ஆர்வலர்கள் தங்களின் விருப்பத்திற்குரிய பாடல்களைப் பகிர்ந்து அவருக்கு உருக்கத்துடன் விடைகொடுத்து வருகின்றனர்.

2005ம் ஆண்டு ‘ஃபேம் குருகுல்’ நிகழ்ச்சி மூலம் தமது பயணத்தைத் தொடங்கி, 2013ல் வெளியான ‘ஆஷிக்கி 2’ படத்தின் ‘தும் ஹி ஹோ’ பாடல் மூலம் பெரும்புகழடைந்த அவர் தனது ஆன்மாவைத் தொடும் குரலுக்காகவும், பலவிதமான பாடல்களைப் பாடும் திறனுக்காகவும் அறியப்படுகிறார்.

ஜனவரி 2026 நிலவரப்படி, 171 மில்லியனுக்கும் அதிகமான ஸ்பாட்டிஃபை நேயர்களைக் கொண்டு உலகளவில் அதிகம் பின்தொடரப்படும் கலைஞராகவும் இந்தியாவின் மிகவும் பிரபலமான பாடகர்களில் ஒருவராகவும் இவர் திகழ்கிறார்.

ஒவ்வோர் இரவும் அரிஜித் சிங்கின் பாடல்களை கேட்காமல் பைரவி செல்லப்பன், 29, உறங்கச் செல்வதில்லை.

அவருடைய பாடல்கள் தன்னை உணர்ச்சிபொங்க வைப்பதாகச் சொன்ன பைரவி அரிஜித் ஆற்றல்மிக்கவர் என்றும் குறிப்பாக அவர் தமிழ்மொழியில் பாடியது தம்மை மெய்சிலிர்க்க வைத்தது என்றும் சொன்னார்.

“வேறு மொழி பாடல்களை பாடும் ஒரு கலைஞர் எந்தப் பிழைகளுமின்றி தமிழில் துல்லியமாக பாடினால் அது அரிஜித் சிங்காகத்தான் இருக்க வேண்டும்,” என்றார் பைரவி.

தமிழ் திரைப்படம் ‘24’ல் ‘நான் உன் அழகினிலே’ பாடலை பாடி பலரது மனங்களைக் கொள்ளையடித்தார் அரிஜித். அதை ரசித்தவர்களில் ஒருவர் பைரவி.

அரிஜித் சிங் பாடல் நிகழ்ச்சிகளுக்கு சென்றுள்ள அவர் அரிஜித்தை நேரில் கண்ட காட்சியை நினைவுகூர்ந்தார்.

“புகழ்பெற்ற ஒரு கலைஞர் என்பதற்கு அப்பாற்பட்டு அரிஜித் குணத்தில் மிக தன்னடக்கமானவர். நிகழ்ச்சிகளில் சளைக்காமல் ரசிகர்களை அவர் மகிழ வைத்தார்,” என்று பைரவி கூறினார்.

அரிஜித் சிங் ஓய்வுபெறுவதைப் பற்றி ஒருபுறம் வருந்தினாலும் மறுபுறம் அது ஒரு கலைஞரின் தனிப்பட்ட முடிவு என்கிறார் சுதர்ஷன் கணேசன், 32.

அரிஜித் சிங்கின் தீவிர ரசிகராக இல்லாதபோதும் அவரது பாடல்களை அடிக்கடி கேட்பது சுதர்ஷனுக்கு வழக்கம்.

“அரிஜித் இளவயதிலேயே ஓய்வுபெற இருப்பதாகக் கூறியது என்னை முதலில் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இருந்தாலும் அவர் பாடுவதை நிறுத்தப்போவதாக அறிவிக்கவில்லை. அவர் வேறு வழிகளில் கண்டிப்பாக தமது குரலை ரசிகர்களிடம் கொண்டுசேர்ப்பார்,” என்று சுதர்ஷன் நம்பிக்கை தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்