தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மாணவர்களுக்கு உதவும் செயற்கை நுண்ணறிவுக் கருவிகள்

2 mins read
de58fd1c-33d5-45bc-a9d4-fdce4aae44a4
ஐந்து புதிய செயற்கை நுண்ணறிவுக் கருவிகளை அறிமுகப்படுத்தியுள்ளது காஹுட்!.  - படம்: செயற்கை நுண்ணறிவு

இன்றைய மாணவர்களின் வாழ்க்கையில் செயற்கை நுண்ணறிவு முக்கியப் பங்கு வகிக்கிறது.

கற்றலை எளிமைப்படுத்தி, நேரத்தைச் சேமிக்கவும் மன அழுத்தத்தைக் குறைக்கவும் அது உதவுகிறது. குறிப்பாகத் தேர்வுக் காலங்களில் மாணவர்கள் சந்திக்கும் பதற்றத்தைக் குறைத்து, சுறுசுறுப்புடன் படிக்கச் செயற்கை நுண்ணறிவு முக்கியப் பங்காற்றுகிறது.

காஹுட்! (Kahoot!) விளையாட்டு முறையிலான கற்றல் தளமாகும். இதன் மூலம் பயனர்கள் தாங்களே கற்றல் விளையாட்டுகள் அல்லது வினாடி வினாப் போட்டிகளை உருவாக்கவும் பகிரவும் விளையாடவும் முடியும்.  மாணவர்களும் ஆசிரியர்களும் இதை விரும்பிப் பயன்படுத்துகின்றனர். கற்றலைச் சுவைமிக்கதாகவும் இருவழிக் கருத்துப் பரிமாற்றத்துடன் கூடியதாகவும் மாற்றுவது இதன் நோக்கம்.

தற்போது காஹுட், செயற்கை நுண்ணறிவுக் கருவிகளை இணைத்து, மாணவர்கள் எளிதாகப் படிக்கப் புதிய பல அம்சங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

அது அறிமுகப்படுத்திய ஐந்து புதிய செயற்கை நுண்ணறிவுக் கருவிகளில் முதன்மையானது ‘காஹுட் ஏஐ  ஜெனெரேட்டர்’ (Kahoot AI Generator) ஆகும். இதன் மூலம் கையால் எழுதியவை, ஆவணங்கள், இணையப் பக்கங்கள் போன்றவற்றை வினாடி வினா, சொற்பொருள் பயிற்சி அல்லது குறுந்தேர்வுகளாக வடிவமைக்கலாம்.   

இரண்டாவது அம்சத்தின்கீழ், ‘கொஸ்டின் எஸ்ட்ரேக்டர்’ (Question Extractor), ‘ஸ்டெப்-பை-ஸ்டெப் சால்வர்’ (Step-by -Step Solver) கருவிகள் தேர்வுக் கேள்விகளை மின்வருடல் (Scan) செய்து விளக்கத்துடன் பதில்களைப் படிக்க உதவுகின்றன. 

மூன்றாவது அம்சமான, ‘ஆஃப்லைன் ஸ்டடி’ (Offline Study), இணையம் இல்லாமலே மாணவர்கள் எப்போது வேண்டுமானாலும் பயிற்சி செய்ய அனுமதிக்கிறது.

நான்காவது அம்சம், ‘டெஸ்ட் மோட்’ (Test Mode), தேர்வுச் சூழலை ஏற்படுத்தி, மாணவர்களைத் தேர்வுக்குத் தயார் செய்யும் கருவி. 

ஐந்தாவது அம்சத்தின்கீழ், ‘ஸ்டடி பட்டிஸ்’ (Study Buddies), ‘அச்சீவ்மென்ட்ஸ்’ (Achievements) ஆகியவை மாணவர்களுக்கு ஊக்கமளித்து, தொடர்ச்சியான கற்றலை உறுதிசெய்கின்றன.

இந்த ஐந்து அம்சங்களும் தேர்வுகாலப் பதற்றத்தைக் குறைத்து, மாணவர்களின் தன்னம்பிக்கையை உயர்த்துகின்றன.

தேர்வு நேரங்களில் மாணவர்கள் எதிர்கொள்ளும் மன அழுத்தம், பதற்றம் பற்றியும் செயற்கை நுண்ணறிவுப் பயன்பாடு குறித்தும் சிங்கப்பூர் மாணவர்கள் சிலர் கருத்துரைத்தனர்.

தொழில்நுட்பக் கல்விக்கழக மாணவர் திவான் பார்த்திபன், 18, “தேர்வு நேரங்களில் எனக்கு மிகவும் பதற்றமாக இருக்கும். என்ன செய்வது என்று திகைப்பாக இருக்கும்,” என்றார். “ஆனால், செயற்கை நுண்ணறிவு படிப்பதற்கு மிகவும் உதவியாக உள்ளது. காஹுட் செயலி படிப்பதை எளிமையாக்குகிறது,” என்றும் அவர் கூறினார்.

“தேர்வு நேரங்களில என் நேரம் அதிகம் வீணாவதற்கான முக்கியக் காரணம் சமூக வலைத்தளங்கள்,” என்றார் ரிபப்ளிக் பலதுறைத் தொழிற்கல்லூரி மாணவி ஆனந்தராஜ் ஏஞ்சலிட்டா ஷெரின், 18. “கேள்வி-பதில் முறையில் படிப்பதால் நினைவில் வைத்துக்கொள்வது எளிதாகிறது,” எனச் செயற்கை நுண்ணறிவுப் பயன்பாடு பற்றி அவர் கூறினார்.

குறிப்புச் சொற்கள்