பள்ளிக் கல்வியின்போது ஆய்வுக்கூடத்தில் இருந்த கண்ணாடிக் கருவிகளில் வளைவுகள் இருந்ததைக் கண்டு வியந்ததாகவும் கண்ணாடியை அதிக வெப்பத்தில் உருக்கி, வடிவமைக்க முடியும் என்று தம் ஆசிரியர் செய்முறையாக விளக்கிக் காட்டியபோது ஏற்பட்ட பெருவியப்பு ஆர்வத்தைத் தூண்டியதாகவும் கூறுகிறார் திரு தசரதராமன்.
ஆங்கிலத்தில் ‘Glassblowing’ எனப்படும், கண்ணாடியை உருக்கிப் பொருள்களாக வடிவமைக்கும் கலையில் ஈடுபட்டுள்ளார் இவர்.
சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழக (என்யுஎஸ்) வேதியியல் துறையில் கண்ணாடியாலான அறிவியல் ஆய்வுக்கூடக் கருவிகளை வடிவமைத்தும், பழுதுபார்த்தும் தரும் பணியில் ஈடுபட்டுள்ள தசரதராமன், தமிழ் முரசின் ‘ஆய கலை அரிய கலைஞர்’ வலையொளித் தொடரில் இந்தக் கலை குறித்த பல்வேறு தகவல்களைப் பகிர்ந்துகொண்டார்.
பள்ளி ஆசிரியரால் கண்ணாடியை ஊதி, வடிமைக்கும் கலைமீது ஏற்பட்ட பேரார்வம் இவருக்குள் தணியாமல் இருந்த நிலையில், சென்னையில் அந்தத் துறையில் மேற்படிப்புக்கான வாய்ப்பு கிடைத்தபோது அதைச் ‘சிக்’கெனப் பிடித்துக்கொண்டார்.
முழுவதும் செயல்முறையில் அமைந்த பாடத்திட்டத்தின்கீழ் ஈராண்டுகள் பயின்ற இவரைப் போன்ற பலரும் உலகெங்கும் ஆய்வுக்கூடங்களில் கண்ணாடிக் கருவிகளை உருவாக்கும் பணியிலிருப்பதாக இவர் கூறினார்.
வாயால் ஊதி வீட்டு உபயோகப் பொருள்கள், அலங்காரப் பொருள்கள் போன்றவை தயாரிக்கப்படும் முறையிலிருந்து தாம் கடைப்பிடிக்கும் முறை மாறுபட்டது என்று தசரதராமன் விளக்கினார்.
அறிவியல் ஆய்வுக்கூடக் கருவிகளைத் தயாரிக்கும் ‘சயன்டிஃபிக் கிளாஸ்புளோயிங்’ முறையில் தயாராகும் கருவிகள், சாதாரண வீட்டு உபயோக, அலங்காரப் பொருள்களைக் காட்டிலும் அதிகமான வெப்பநிலையைத் தாங்கக்கூடியவை. அவை 500 டிகிரி செல்சியசுக்கு அதிகமான வெப்பத்தையும் தாக்குப்பிடிக்கும் என்கிறார் இவர்.
மேலும், சாதாரண கண்ணாடிப் பொருள்கள் தயாரிப்பில் ‘சோடா’ எனும் வேதிப்பொருள் பயன்படுத்தப்படுகிறது என்றும் அவை உடைந்து, உடலில் காயம் ஏற்பட்டால் அதற்கு உடனடியாக மருத்துவ சிகிச்சை தேவைப்படும் என்றும் கூறிய தசரதராமன், ‘சயன்டிஃபிக் கிளாஸ்புளோயிங்’ முறையில் தயாராகும் ஆய்வுக்கூடக் கருவிகள் நம் உடலில் அவ்வளவாகப் பாதிப்பை ஏற்படுத்தாது என்று சொன்னார்.
தொடர்புடைய செய்திகள்
அடிப்படையில் கண்ணாடியை ஊதி, வடிவமைக்கும் திறன் இருப்பதால், ஆய்வுக்கூடக் கருவிகளுக்கு அப்பால் அவ்வப்போது தம் கற்பனைத் திறனுக்கேற்ப பொம்மைகள், வேறு கலை வடிவங்களையும் இவர் படைப்பதுண்டு.
பறவைகள், விலங்குகளின் வடிவங்கள் மட்டுமன்றி சதுரங்கக் காய்களையும் பலகையையும்கூட வடிவமைத்திருக்கிறார்.
வெள்ளை, கறுப்புக் காய்களை, பளபளப்பான கண்ணாடி, சற்றே பனிபடர்ந்த தோற்றத்துடனான கண்ணாடி என வேறுபடுத்திக் காட்டியதைச் சுவைபட எடுத்துக்கூறினார்.
பணியில் ஈடுபடும்போது முழுக் கவனக் குவிப்புடன் ஈடுபடுவதே தமது இயல்பு என்கிறார் இவர். கண்ணாடிப் பொருளைத் தயாரிக்கும்போது தவறு ஏற்பட்டால் அதைத் திருத்திக்கொள்ள முடியும் என்று கூறியதுடன் மிக நீண்ட நேரம் வேலை செய்ய நேர்ந்தால் சிறிது நேரம் நிறுத்திவிட்டு, பின் மீண்டும் கண்ணாடியைத் திரவ நிலைக்குக் கொண்டுவந்து பணியைத் தொடரமுடியும் என்று விளக்கினார்.
முற்காலத்தில் இந்த ‘கிளாஸ்புளோயிங்’ கலையைக் கற்றுத்தரும் பயிற்சிக்கூடம் சிங்கப்பூரில் இருந்ததாகவும் அதில் பயின்றவர்கள் அப்போதிருந்த சற்றே கடினமான முறையைப் பின்பற்றி இங்குப் பணியாற்றியதாகவும் கூறிய தசரதராமன், தற்போது இதைப் பயில விரும்புவோர் வெளிநாடுகளுக்குத்தான் செல்லவேண்டும் என்றார்.
சவூதி அரேபிய ஆய்வுக்கூடத்தில் வேலை பார்த்தபோது தமது மேலாளராக இருந்த எகிப்து நாட்டவர், கலையார்வத்துடன் பல்வேறு பொருள்களை உருவாக்குவதற்கான உந்துசக்தியாகத் திகழ்ந்ததை இவர் நினைவுகூர்ந்தார். அப்படித் தயாரித்த சதுரங்கப் பலகை, ‘என்யுஎஸ்’ நேர்காணலின்போது மிகுந்த பாராட்டைப் பெற்றுத்தந்ததாகக் குறிப்பிட்டார்.
கண்ணாடியின் பல்வேறு வகைகள் குறித்தும், எந்தப் பொருளுக்கு எந்த வகையான கண்ணாடி பயன்படுகிறது என்பது குறித்தும் இந்தக் கலையில் ஏற்பட்டுள்ள நவீன மாற்றங்கள் குறித்தும் தகவல்களைப் பகிர்ந்துகொண்டார்.
மற்ற கலைகளைப் போல இதைக் கற்றால் மட்டும் கைவந்துவிடாது; உள்ளுக்குள் தணியாத ஆர்வம் இருந்தால் மட்டுமே மிளிர முடியும் என்றார்.
எந்தச் சூழலிலும், கண்ணாடியை ஊதி, வடிவமைக்கும் துறையை விட்டு விலகவேண்டும் என்ற எண்ணமே தனக்குத் தோன்றியதில்லை என்று கூறிய தசரதராமன், இனியும் அதே உறுதி தொடரும் என்கிறார்.