சிங்கப்பூரின் பன்முக பாரம்பரியக் கலைகளையும் சமகாலக் கலைகளையும் கொண்டாடும் நோக்கத்துடன் சிங்கப்பூர் கலை வாரத்தின் ஒரு பகுதியான ‘அலிவால் நகர்ப்புறக் கலை விழா’ (The Aliwal Urban Arts Festival) சனிக்கிழமை (ஜனவரி 25) இடம்பெறவுள்ளது.
‘கிராஃபிட்டி ஸ்பிரே பெயின்டிங்’, தெருமுனைக் கூட்டத்தின் பழக்கவழக்கங்கள், ‘ஸ்கேட்போர்டிங்’ விளையாட்டு போன்றவற்றைப் பற்றி மேலும் அறிந்துகொள்ள விழாவில் நடைபெறவுள்ள பல்வேறு பயிலரங்குகளில் மக்கள் கலந்துகொள்ளலாம். அத்துடன், சிங்கப்பூரின் தனித்துவமான கலாசார அடையாளத்தை எடுத்துக்காட்டும் உள்ளூர்க் கலைஞர்களின் ஆடல் பாடல் நிகழ்ச்சிகளையும் வருகையாளர்கள் கண்டு ரசிக்கலாம்.
விழாவின் சிறப்பம்சங்களில் ‘சௌக் புரொடக்ஷன்ஸ்’ (Chowk Productions) நடன நிறுவனத்தின் ஒடிசி நடன நிகழ்ச்சிகளும் அடங்கும். ‘சௌக் புரொடக்ஷன்ஸ்’ நடன நிறுவனத்தின் கலை இயக்குநரான ராகா மூரோ தலைமையில் நடைபெறும் இந்நிகழ்ச்சிகள், இந்த நகர்ப்புறக் கலை விழாவிற்கு ஒரு தனித்துவமான கலாசாரக் கண்ணோட்டத்தை கொண்டுவரவுள்ளன.
“ஒடிசி நடனத்தின் நாட்டுப்புற வேர்கள் முதன்முதலில் தெருக்களில் தோன்றியது என நம்பப்படுகிறது. குறிப்பாக, இந்தியாவின் கோட்டிபுவா சமூகத்தினரைச் சேர்ந்த சிறுவர்கள், சிறுமிகளைப் போல் உடையணிந்து தெருக்களிலும் திருவிழாக்களிலும் நடனமாடினர்,” என்று செவ்வாய்க்கிழமை (ஜனவரி 21) நடைபெற்ற கலை விழாவின் செய்தியாளர் முன்னோட்டத்தில் திருவாட்டி ராகா பகிர்ந்துகொண்டார்.
வரும் சனிக்கிழமையன்று நடைபெறவுள்ள அவர்களின் மேடை நிகழ்ச்சியில் கோட்டிபுவா நடன குருவால் துர்கா தேவியைக் கொண்டாடுவதற்காக உருவாக்கப்பட்ட நடனத்தை ‘சௌக் புரொடக்ஷன்ஸ்’ கலைஞர்கள் படைக்கவுள்ளனர்.
மேலும், ஒடிசியின் அபிநய அம்சத்தையும் தமிழ் எழுத்தாளர் பெருமாள் முருகனின் ‘மாதொருபாகன்’ என்ற தலைப்பைக் கொண்ட நாவலின் சில பகுதிகளையும் ஒருங்கிணைத்து ஒரு சிறப்பு நடன நிகழ்ச்சியையும் அவர்கள் வழங்கவுள்ளனர்.
“கலாசாரக் கலைகளை இன்றைய சமூகத்திற்குப் பொருத்தமானதாக மாற்றியமைப்பதன்வழி பார்வையாளர்களின் மனங்களைக் கவர்வதே எனது நோக்கமாகும்,” என்று திருவாட்டி ராகா சொன்னார்.
கலை விழாவின் மற்றோர் அங்கமாக ‘அவான்ட் தியேட்டர்’ (Avant Theatre) நாடகக்குழு, நாடகப் பயிலரங்கு ஒன்றை நடத்தவுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
பல்வேறு விளையாட்டுகள், பாத்திரங்களை உருவாக்கும் பயிற்சிகள் முதலிய நடவடிக்கைகளின்வழி இப்பயிலரங்கு ஆரம்பநிலை நடிப்பு நுட்பங்களைப் பங்கேற்பாளர்களுக்கு அறிமுகப்படுத்தும்.
“மேடை நிகழ்ச்சிகளில் மட்டுமல்லாமல் அன்றாட தகவல்தொடர்புகளில்கூட பயன்படுத்தக்கூடிய நடிப்பு நுட்பங்களை இதுபோன்ற பயிலரங்குகள் கற்பித்து எதிர்காலக் கலைஞர்களைத் தயார்படுத்துகின்றன,” என்றார் ‘அவான்ட் தியேட்டர்’ நாடகக்குழுவின் இயக்குநர் ஜி செல்வா.
இந்தப் பயிலரங்கானது பல்வேறு பின்னணிகளையும் இனங்களையும் சேர்ந்த பலதரப்பட்ட பார்வையாளர்களை இணைப்பதோடு சிங்கப்பூர் இளையர்களை நாடகக் கலைக்கு அறிமுகப்படுத்தும் என்றும் அவர் நம்புகிறார்.
‘அலிவால் நகர்ப்புறக் கலை விழா’ அலிவால் கலை மையத்தில் பிற்பகல் 12 மணி முதல் இரவு 10.30 மணிவரை நடைபெறும். நிகழ்ச்சிகள் குறித்த மேல்விவரங்களுக்கு https://artshouselimited.sg/aac-auaf-2025 என்ற இணையத்தளத்தை நாடலாம்.