சிங்கப்பூர்க் கலை வாரம் நடைபெறும் அதேவேளையில், ‘சிங்கப்பூர் பியனாலே’ எனும் கலை விழா அதன் இரண்டாவது கட்டத்தைத் தொடங்கியுள்ளது.
இதன் ஒரு பகுதியாக, அந்தந்த இடங்களுக்கேற்ப அமைக்கப்பட்ட மூன்று புதிய கலைப்படைப்புகளும் பல்வேறு நிகழ்ச்சிகளும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
புதன்கிழமை (ஜனவரி 22) அறிவிக்கப்பட்ட இந்தப் புதிய படைப்புகள், பியனாலே 8வது பதிப்பின் இரண்டாம் அத்தியாயமாக அமைகின்றன.
‘தூய எண்ணம்’ (pure intention) எனும் கருப்பொருளுடன் 2025ஆம் ஆண்டின் பிற்பகுதியிலிருந்து பல்வேறு இடங்களில் நடைபெற்றுவரும் இந்தக் கண்காட்சி, தற்போது வழக்கமான கலைக்கூடங்களுக்கு அப்பாலும் விரிவடைந்துள்ளது.
வனப்பகுதி சூழ்ந்த குடியிருப்புப் பகுதிகள், ரயில் நிலையங்கள் போன்ற இடங்களுக்குக் கலையைக் கொண்டுசெல்வதன் மூலம், அன்றாட நகர்ப்புறச் சூழலில் சமகாலக் கலையை இணைக்கும் நோக்கம் வலுப்படுத்தப்பட்டுள்ளது.
புதிய கலைப்படைப்புகள்
வெசெக்ஸ் எஸ்டேட் (Wessex Estate) பகுதியில் வில்டன் குளோஸ் (Wilton Close) அருகே உள்ள திறந்தவெளியில், தாய்லாந்துத் திரைப்படத் தயாரிப்பாளரும் கலைஞருமான அபிச்சாட்போங் வீராசேதகுலும் சிங்கப்பூர்க் கலைஞர் குவோ-லியாங் டானும் இணைந்து ‘டூ ஹூ ரிமெம்பர் த சீ’ (Two Who Remember the Sea) எனும் படைப்பை உருவாக்கியுள்ளனர்.
காற்றில் அசைந்தாடும் வெள்ளிநிறத் துணிகளைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த இயங்குநிலைக் கலை நிறுவல் (kinetic installation), காற்று, சூரிய ஒளியின் மாற்றங்களுக்கு ஏற்ப மாறி, ஒரு திரை போன்ற வடிவத்தை உருவாக்குகிறது.
தொடர்புடைய செய்திகள்
இதற்கு அருகிலேயே, பிளென்ஹெய்ம் கோர்ட்டிற்கு (Blenheim Court) வெளியே, ஆஸ்திரேலியக் கலைஞர் எமிலி ஃபுளோய்ட், ‘ஃபீல்ட் லைப்ரரி’ (Field Library) எனும் படைப்பை அமைத்துள்ளார். வண்ணமயமான சிற்ப வடிவங்களுடன் அமைக்கப்பட்டுள்ள இது, வெறும் காட்சிக்கு மட்டுமன்றி, மக்கள் கூடும் இடமாகவும், சமூக நூலகமாகவும் பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து மையங்களிலும் கலை இடம்பிடித்துள்ளது. ஹார்பர்ஃபிரன்ட், ஃபோர்ட் கேனிங், ஆர்ச்சர்ட் பெருவிரைவு ரயில் நிலையங்களில் சிங்கப்பூர்க் கலைஞர் டெபி டிங், ‘ரூல்ஸ் ஃபார் தி எக்ஸ்ப்ரெஷன் ஆஃப் ஆர்க்கிடெக்சுரல் டிசையர்ஸ்’ (Rules for the Expression of Architectural Desires) எனும் தலைப்பில் சுவரொட்டித் தொடர்களை நிறுவியுள்ளார்.
அதிகாரபூர்வ அறிவிப்புகளைப்போல வடிவமைக்கப்பட்டுள்ள இவை, அதிகாரத்துவம் சார்ந்த மொழிநடை, கற்பனைக் காட்சிகளை ஒன்றிணைத்து, நகர்ப்புறக் கட்டமைப்பும் பொது வாழ்வும் குறித்த மாற்றுச் சிந்தனைகளை முன்வைக்கின்றன.
கட்டணச் சலுகைகளும் போக்குவரத்தும்
சிங்கப்பூர்க் கலை வாரத்தைச் சிறப்பிக்கும் வகையில், தஞ்சோங் பகார் டிஸ்ட்ரிபார்க்கில் (Tanjong Pagar Distripark) உள்ள சிங்கப்பூர்க் கலை அரும்பொருளகத்திற்கு (Singapore Art Museum) ஜனவரி 22 முதல் 31ஆம் தேதி வரை பொதுமக்கள் இலவசமாகச் செல்லலாம்.
மேலும் ஜனவரி 23, 24, 30, 31 ஆகிய தேதிகளில் அரும்பொருளகம் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.
வார இறுதி நாள்களில் வெசெக்ஸ் எஸ்டேட், சிவிக் டிஸ்ட்ரிக்ட் (Civic District), சிங்கப்பூர்க் கலை அரும்பொருளகம் உள்ளிட்ட முக்கிய பியனாலே இடங்களுக்கு எளிதில் செல்ல இலவசப் பேருந்துச் சேவைகள் இயக்கப்படும்.
சிறப்பு நிகழ்ச்சிகள்
இந்த இரண்டாம் கட்டத்தில் புதிய பொது நிகழ்ச்சிகளும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. சிவிக் டிஸ்ட்ரிக்ட் பகுதியில் உள்ள கலைப்படைப்புகளுக்கான வழிகாட்டியுடன் கூடிய சுற்றுலாக்கள், மத்திய, வெளிப்புற இடங்களை இணைக்கும் மிதிவண்டிச் சுற்றுலாக்கள் போன்றவையும் இவற்றில் அடங்கும்.
எஸ்ஜி60 கொண்டாட்டத்தின் ஒரு முக்கிய நிகழ்ச்சியான ‘சிங்கப்பூர் பியனாலே’ கலை விழா, சமூக, நகர்ப்புற வளர்ச்சியில் இலக்குகளுக்கும் விளைவுகளுக்கும் இடையிலான இடைவெளியை மார்ச் 29ஆம் தேதி வரை ஆராய்கிறது.
மேல் விவரங்களுக்கு www.singaporebiennale.org என்ற இணையத்தளத்தை நாடலாம்.

