உடல், மனம், ஆன்மீக நலத்திற்கு யோகாவைத் தொடர்ந்து பயிற்சி செய்தால் பல நன்மைகளை பெறலாம் என்று அனைவரும் கேள்விப்பட்டிருப்போம். ஆனால், சிங்கப்பூரில் அண்மையில் நடைபெற்ற ஆசிய யோகா விளையாட்டுப் போட்டிகள், யோகாவை போட்டித்தன்மையுடைய விளையாட்டாக நிரூபித்துக் காட்டியுள்ளன.
இந்தியாவின் ஆசிய யோகா சம்மேளனத்தின் ஆதரவுடன் சிங்கப்பூர் யோகா விளையாட்டுச் சங்கம் ஏற்பாடு செய்திருந்த 10ஆம் ஆசிய யோகா விளையாட்டுப் போட்டிகள், ஜனவரி 6 முதல் 8ஆம் தேதி வரை சிராங்கூன் சாலையில் அமைந்துள்ள பிஜிபி மண்டபத்தில் நடைபெற்றன.
மேடையில் போட்டியாளர்கள் யோகாசனங்களை யோகா நிபுணர்களான நடுவர்களின் முன்னிலையில் வெவ்வேறு முறைகளில் படைத்துக் காட்டினர். துல்லியம், உடல் தோரணை முதலியவற்றின் அடிப்படையில் அவர்களின் படைப்புகள் மதிப்பிடப்பட்டன.
சிங்கப்பூர், இந்தியா, வியட்னாம், மலேசியா, ஹாங்காங் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த கிட்டத்தட்ட 150 போட்டியாளர்கள் ஆறு பிரிவுகளில் (யோகாசன விளையாட்டு, தனிநபர் படைப்பு, இணைப் படைப்பு, தாள யோகா, நிபுணத்துவ யோகா, ஃப்ரீ ஃப்லோ யோகா) போட்டியிட்டனர். 8-11 வயதிற்குட்பட்ட இளையர்கள் முதல் 35 வயதுக்கு மேற்பட்ட பெரியவர்கள் வரை என்று வயது அடிப்படையில் போட்டிகள் மேலும் பிரிக்கப்பட்டன.
அங் மோ கியோ குழுத்தொகுதி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இந்தர்ஜித் சிங், ஆசிய யோகா சம்மேளனத் தலைவர் அசோக் குமார் அகர்வால், யோகா விளையாட்டுச் சங்கத்தின் தலைவர் குமரேஸ்வரன் சுப்பிரமணியம் ஆகியோர் போட்டிகளை அதிகாரபூர்வமாகத் தொடங்கிவைத்தனர்.
ஜனவரி 8ஆம் தேதி நடைபெற்ற நிறைவு விழாவில், இந்தியா வெற்றியாளர் பட்டத்தை வென்றதாக அறிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து வியட்னாம், சிங்கப்பூர், ஹாங்காங், மலேசியா ஆகிய பகுதிகள் முறையே பரிசுகளைப் பெற்றன.
“யோகா என்பது அமைதியாக அமர்ந்து தியானம் செய்வது மட்டுமல்ல,” என்றார் டாக்டர் குமரேஸ்வரன்.
“உங்கள் உடலை பிரபஞ்சத்துடன் இணைப்பது யோகாவின் முக்கியக் கொள்கைகளில் ஒன்று. யோகா போட்டிகள் அந்தத் தொடர்பை மற்றவர்களின் முன்னிலையில் வெளிப்படுத்த ஒரு கட்டமைக்கப்பட்ட தளமாக அமைகின்றன,” என்று அவர் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
இந்த ஆண்டு போட்டிகளை நடத்துவதற்கு தேவையான நிதியைப் பெறுவதில் சவால்கள் இருந்ததாக டாக்டர் குமரேஸ்வரன் கூறினார்.
“எதிர்காலத்தில் போட்டிகளை நடத்துவதற்கு அரசாங்கம், தொடர்புள்ள மற்ற நிறுவனங்கள் போன்றவற்றின் ஆதரவு கிடைத்தால் அவற்றை மேலும் சிறப்பாக நடத்த முடியும்,” என்றார் அவர்.
“இன்றைய இளம் தலைமுறையினர் மின்சாதனங்களைப் பயன்படுத்துவதிலேயே அதிக கவனம் செலுத்துகிறார்கள். இதுபோன்ற யோகா போட்டிகளில் அவர்கள் கலந்துகொள்ள தொடர்ந்து பயிற்சி செய்யும்போது, ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு நேரத்தை பயனுள்ள வழியில் செலவிடவும் உத்வேகம் பெறுவார்கள்.
“வருங்காலத்தில் சிங்கப்பூரர்கள் பலர் இதில் கலந்துகொண்டு தங்கள் ஈடுபாட்டையும் ஆதரவையும் வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்,” என்றார் அவர்.
சிங்கப்பூர் போட்டியாளரான வனிக்கா ஷர்மாவிற்கு, யோகா விளையாட்டுகளில் இசையையும் தாளத்தையும் கலை வெளிப்பாட்டையும் ஒருங்கிணைக்க முடிந்த அம்சம் மிகவும் பிடித்திருந்ததாகச் சொன்னார்.
“சிங்கப்பூரைப் பிரதிநிதித்து போட்டியிட வேண்டும் என்று நினைத்துப் பார்த்தபோது முதலில் சற்று பயமாக இருந்தாலும் இது எனக்கு ஒரு மறக்க முடியாத அனுபவமாக அமைந்தது,” என்று வனிக்கா, 18, கூறினார்.
சிங்கப்பூரைப் பிரதிநிதித்து போட்டியிட்ட மற்றொருவரான யோகா ஆசிரியர் கலைவாணி கிருஷ்ணன், 37, இந்தப் போட்டியின்வழி தன்னை மென்மேலும் மேம்படுத்திக்கொண்டு, யோகா விளையாட்டில் சிறப்பாகச் செய்ய வேண்டும் என்று உத்வேகம் பெற்றதாகக் கூறினார். அடுத்த ஆண்டு சிங்கப்பூர் முதலிடம் பிடிக்க வேண்டும் என்பதே அவருடைய ஆசை.

