உலக அமைதிக்காக அதிருத்ர பெருவேள்வி

1 mins read
c29addb3-655e-4713-96a2-c6e2b413b466
பெருவேள்வியின்போது 140 அடியார்கள் நாள்தோறும் ருத்ர பாராயணத்தில் கலந்துகொண்டு சிவ சிந்தனையோடு அர்ப்பணம் செய்தனர். - படம்: சிங்கப்பூர் தென்னிந்திய அந்தணர் சபை

சிங்கப்பூர் தென்னிந்திய அந்தணர் சபையின் ஏற்பாட்டில் அதிருத்ர பெருவேள்வி கடந்த டிசம்பர் 21ஆம் தேதி முதல் 26ஆம் தேதி வரை சிராங்கூன் சாலை, ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலின் பிஜிபி மண்டபத்தில் நடைபெற்றது.

அச்சபையின் நூற்றாண்டு நிறைவுக் கொண்டாட்டங்களின் இறுதி நிகழ்ச்சியாக, ‘உலக அமைதியும் நல்லிணக்கமும்’ எனும் கருப்பொருளுடன் அந்தப் பெருவேள்வி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

சிங்கப்பூரில் முதன்முறையாக கடந்த 2019ஆம் ஆண்டு சிங்கப்பூர்த் தென்னிந்திய அந்தணர் சபை, கேலாங் ஈஸ்ட் சிவன் கோவிலுடன் இணைந்து அதிருத்ர வேள்வியை மிகச் சிறப்பாக நடத்தியது.

இம்முறை இந்து அறக்கட்டளை வாரியம், சிவன் கோவில், பெருமாள் கோவில் ஆகியவற்றின் ஆதரவுடன் அப்பெருவேள்வி நடத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கென்றே வேள்வி மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த 16 அடி உயர லிங்கோத்பவர் அலங்காரம், வந்திருந்தோர் கண்களையும் கருத்தையும் கவர்ந்தது.

இந்து அறக்கட்டளை வாரியத்தின் தலைவர் ராஜன் கிருஷ்ணன், தலைமை நிர்வாக அதிகாரி ஜீவா, இந்து ஆலோசனை மன்றத்தின் தலைவர் செங்குட்டுவன், ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலின் தலைவர் செல்வம் ஆகியோருடன் திரளான பக்தர்களும் இப்பெருவேள்வியில் கலந்துகொண்டனர்.

முன்னதாக, கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற கலைநிகழ்ச்சியில் உள்துறை, சட்ட அமைச்சர் கா சண்முகம் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, சபையின் நூற்றாண்டு விழா மலரை வெளியிட்டது நினைவுகூரத்தக்கது.

குறிப்புச் சொற்கள்