தமிழர் பண்பாட்டிற்குப் பங்களித்த சிங்கப்பூரர்களுக்குத் தமிழ்நாட்டில் விருது

தமிழ் மக்களுக்கு உதவும் கடமை தமிழ் வணிகங்களுக்கும் உண்டு என்கிறார் ஜோதி ஸ்டோர் உரிமையாளர் ராஜ்குமார் சந்திரா 

தமிழர் பண்பாட்டிற்குப் பங்களித்த சிங்கப்பூரர்களுக்குத் தமிழ்நாட்டில் விருது

2 mins read
b9d852cf-61e8-42b9-b7bb-4c3e2f64af45
விருது மேடையில் திருவாட்டி ஜாய்ஸ் கிங்ஸ்லி. - படம்: கிராமியக் கலைகள் வளர்ச்சி, நல அமைப்பு அறக்கட்டளை
multi-img1 of 2

சிங்கப்பூர்ச் சமூகத்தில் தமிழ்ப் பண்பாட்டைப் பல்வேறு துறைகளிலும் பல வழிகளிலும் பேணி வளர்த்தவர்களுக்குக் கடல்கடந்தும் பாராட்டும் மரியாதையும் குவிகின்றன. அந்த வகையில் அண்மையில் தமிழகத்தில் சிங்கப்பூரில் தமிழ் மொழி, கலை, வணிகம் என பலதுறைகளிலும் தொடர்ந்து பங்காற்றி வருவோர் சிறப்பிக்கப்பட்டனர்.

தமிழ்நாட்டின் விருதுநகர் மாவட்டம், காரியாபட்டியிலுள்ள கிராமியக் கலைகள் வளர்ச்சி மற்றும் நல அமைப்பு அறக்கட்டளை, பண்பாட்டுச் சேவையில் சிறந்து விளங்கும் சிங்கப்பூரர்களுக்கு விருது வழங்கிச் சிறப்பித்தது.

ஜோதி ஸ்டோர் புஷ்பக் கடை உரிமையாளர் ராஜ்குமார் சந்திரா, வர்த்தகரும் சமூகத் தலைவருமான ஜாய்ஸ் கிங்ஸ்லி, இந்து அறக்கட்டளை வாரியத் தலைவர் சரோஜினி பத்மநாதன், அவான்ட் நாடகக் குழுத் தலைவர் ஜி.செல்வா, உள்ளூர்ப் பாடகரும் எழுத்தாளருமான ஆர்.ராஜேந்திரம், உள்ளூர் நடிகை சித்ரா, உள்ளூர்ப் பாடகர் லட்சுமி சந்திரன், சமூக ஆர்வலர் இரா. திலகராணி ஆகியோருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதுகள் வழங்கப்பட்டன.

அத்துடன், சிங்கப்பூர் ஸ்ரீ வீரமாகாளியம்மன் கோயிலில் பல்லாண்டு காலமாகப் பணியாற்றிவரும் அர்ச்சகர்கள் திரு சுப்பையா சேதுராமன், திரு புவனேஸ்வரன், திரு பா. சுகுமார் சிவம் ஆகியோருக்கும் விருது வழங்கப்பட்டது.

நிகழ்ச்சி டிசம்பர் 21ஆம் தேதி காரியாபட்டியிலுள்ள பேரூராட்சித் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

சிங்கப்பூரின் ‘விஎஸ்டிகே’ அமைப்பு இந்நிகழ்ச்சியின் இணை ஏற்பாட்டாளராகச் செயலாற்றியது. சிறப்பிக்கப்பட்ட விருதாளர்கள், நலிந்த கலைஞர்களுக்கு நன்கொடை வழங்கி விருது வழங்கிய அமைப்பிற்கு ஆதரவளித்தனர்.

வாழ்நாள் சாதனை விருது பெற்ற ஜாய்ஸ் கிங்ஸலி

லிஷா பெண்கள் பிரிவை உருவாக்கிய திருவாட்டி ஜாய்ஸ் கிங்ஸ்லிக்கு லிஷா பேச்சாளர் மன்றம், வளர்தமிழ் இயக்கத்தின் தமிழ் மொழி மாதம் உள்ளிட்டவற்றுக்குப் பல்லாண்டுகளாகப் பணியாற்றியமைக்காக வாழ்நாள் சாதனை விருது வழங்கப்பட்டது.

2021ல்கிடைத்த ஒளவையார் விருதிற்குப் பிறகு வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்ற மகிழ்ச்சிக்கு ஒப்பான உணர்வு தமக்கு ஏற்பட்டதாகத் திருவாட்டி ஜாய்ஸ் கூறினார். “கிராமத்துச் சூழலில் விருது கிடைப்பது எனக்கு இதுவே முதல் முறை,” என்றார் அவர்.

அடுத்த தலைமுறையை உருவாக்கும் வேட்கை

அனுபவமிக்க நாடகக் கலைஞரும் நடனக் கலைஞருமான திரு செல்வா, கைதேர்ந்த கலைஞர்களை உருவாக்கும் தமது வேட்கையை நிகழ்ச்சி மேடையில் வெளிப்படுத்தினார்.

உள்ளூர் மூத்த நடிகை சித்ரா (நடுவில்) அங்கீகாரம்.
உள்ளூர் மூத்த நடிகை சித்ரா (நடுவில்) அங்கீகாரம். - படம்: கிராமியக் கலைகள் வளர்ச்சி, நல அமைப்பு அறக்கட்டளை

அமரர் நீலா சத்தியலிங்கத்திடம் முறைப்படி பரதநாட்டியம் கற்ற திரு செல்வா, பின்னர் ரவீந்திரன் நாடகக் குழுவில் நடித்தும் இயக்கியும் உள்ளார்.

“அடுத்த தலைமுறைக்கான கலைஞர்களை உருவாக்கவேண்டும் என இலக்கு கொண்டுள்ளேன். கலையில் ஒழுங்குமுறையும் தெளிவான சிந்தனையும் தேவை என்பதால் அதனை நான் அடிக்கடி வலியுறுத்துவேன்,” என்று அவர் கூறினார்.

தமிழ் மக்களுக்கும் மொழிக்கும் உதவும் கடமை தமிழ் வணிகங்களுக்கும் உண்டு

விருதை எதிர்பார்த்துச் சேவையாற்றுவதில்லை என்றாலும் விருது கிடைத்ததில் மகிழ்ச்சி அடைவதாகக் கூறினார் ஜோதி ஸ்டோர் புஷ்பக்கடை உரிமையாளர் ராஜ்குமார் சந்திரா.

சமுதாய நலனுக்காகச் செயல்படும் வணிகங்கள் முடிவில் மக்களின் வளர்ச்சியாலும் பயனடையும் என்பது அவரது நிலைப்பாடு.

“தமிழர்கள் மூலம் வருமானம் ஈட்டும் வணிகங்களும் நிறுவனங்களும் தமிழர்களுக்கும் தமிழ் நிகழ்ச்சிகளுக்கும் ஆதரவு தர கடமைப்பட்டுள்ளன,” என்று திரு ராஜ்குமார் கூறினார்.

சிங்கப்பூர் ஸ்ரீ வீரமாகாளியம்மன் கோயிலில் பல்லாண்டு காலமாகப் பணியாற்றிவரும் அர்ச்சகர்களுக்கு விருது வழங்கப்பட்டது. படத்தில் திரு பா.சுகுமார் சிவம் (இடமிருந்து இரண்டாவது).
சிங்கப்பூர் ஸ்ரீ வீரமாகாளியம்மன் கோயிலில் பல்லாண்டு காலமாகப் பணியாற்றிவரும் அர்ச்சகர்களுக்கு விருது வழங்கப்பட்டது. படத்தில் திரு பா.சுகுமார் சிவம் (இடமிருந்து இரண்டாவது). - படம்: கிராமியக் கலைகள் வளர்ச்சி, நல அமைப்பு அறக்கட்டளை
குறிப்புச் சொற்கள்