தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

நவீனகால சிரமங்களை எதிர்கொள்ள ‘பிரமிப்புப் பயிற்சி’

2 mins read
52511099-957c-4e15-888c-f0b9847e9e38
புதுமை நடைப்பயிற்சி குறித்து அமெரிக்காவில் மூத்தோரிடம் நடத்தப்பட்ட ஆய்வில், 15 நிமிடம் இந்த வகை நடைப்பயிற்சி மேற்கொண்டோரின் மத்தியில் அதிக புன்னகையும் பிறருடனான நல்லுறவும் நிலவுவது கண்டறியப்பட்டது. - படம்: பிக்சாபே

உற்பத்தித்திறன், செயல்திறன், வெற்றி ஆகியவற்றைச் சுற்றி வாழ்க்கை இயங்கிவரும் நிலையில், வாழ்வின் மென்மையான பகுதியை அனுபவிக்கச் செய்யும் ‘ஆவ் வாக்கிங்’ (Awe-Walking) எனும் பிரமிப்பு நடைப்பயிற்சி பிரபலமடைந்து வருகிறது.

பெருங்கடலுக்கும் மலையுச்சிக்கும் பயணித்து மட்டும் பெற முடிவதாக நம்பப்படும் இயற்கை குறித்த பிரமிப்பை எளிதில் பெறவைக்கும் வழிமுறைகள் கொண்டது இந்த வகை நடைப்பயிற்சி.

செயலூக்கத்துடன் அன்றாட வாழ்வில் பிரமிப்புகள், ஆச்சரியங்கள் உள்ளிட்ட உணர்ச்சிகளை வாழ்வில் புகுத்துவது மூளையின் படைப்பாற்றலைப் பெருக்கி, ஒட்டுமொத்த மனநலனை மேம்படுத்த உதவும் என்றும் நிபுணர்கள் கருதுகின்றனர்.

மனிதர்களிடம் உந்துதல் குறித்த கோட்பாடுகளை வகுத்த ‘மாஸ்லோவின் தேவைகளின் படிநிலைகளில்’ (Maslow’s Hierarchy of Needs), ஒரு மனிதன் தனது முழுத்திறனை அடைய உதவும் ‘சுய உணர்வு’ மிக உயர்ந்த நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

அதனை அடையத் தேவையான படைப்பாற்றல், தன்னியல்பு, ஏற்பு, குறிக்கோள் உள்ளிட்ட கூறுகளை இந்த வகை நடைப்பயிற்சி மேம்படுத்துவதாகவும் நம்பப்படுகிறது. பணிச்சுமை காரணமாக எழும் சோர்வு, மன அழுத்தம் ஆகிய சிரமங்களையும் எதிர்கொள்ள உதவுகிறது.

அமெரிக்க உளவியல் சங்கம் வெளியிட்ட ‘பெர்க்லியின் கிரேட்டர் குட் சென்டரின்’ (Berkeley’s Greater Good Center) ஆய்வில், அன்றாட வாழ்வில் பிரமிப்பைத் தேடுவோர் சமூகத்துடன் அதிக ஒன்றிணைவைக் கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரமிப்பையும் ஆச்சரியத்தையும் அனுபவிப்பதற்கான இடத்தைக் கவனத்துடன் உருவாக்குவது நரம்பியல் தன்மையை வலுப்படுத்துடன் புதிய சிந்தனைகளை விரிவுபடுத்துகிறது.

‘ஆவ் வாக்கிங்’ முறை

இதன் அடிப்படை மிக எளிதானது. மின்னிலக்கக் கருவியிலிருந்து விடுபட்டு, இயற்கைச் சூழலை அனுபவித்து நடப்பது தான் ‘ஆவ் வாக்கிங்’.

இந்த வகை நடைப்பயிற்சியை சீரான வேகத்தில் மேற்கொள்ள வேண்டும். மேலும், மெதுவாகவும் ஆழமாகவும் மூச்சுவிட வேண்டும். ஆறு எண்ணிக்கை வரை ஒரு மூச்சினை இழுத்து வெளிவிட வேண்டும்.

புலன்களின் வேகத்தைக் குறைக்க வேண்டும். சுற்றியுள்ள காட்சிகள், ஒலி, வாசனைகள், சூழல்களைக் கவனிக்க வேண்டும். சருமத்தில் படும் காற்றின் வேகம், வெப்பநிலையை உணர வேண்டும்.

புதுமையையும் இயற்கையின் பரந்த தன்மையையும் நாட வேண்டும். ஒவ்வொரு முறையும் புதிய பாதையைத் தேர்ந்தெடுக்க வேண்டும். பாதையைச் சுற்றியும் இயல்பைவிட மிகப் பெரியதாகத் தோன்றும் ஒன்றையும் அதனைத் தொடர்ந்து மிகச் சிறியதான ஒன்றையும் கவனிக்க வேண்டும். இதனைச் சுழற்சி முறையில் செய்யும்போது அவை மூளைக்கு ஆச்சரிய உணர்வைத் தூண்டும்.

அடுத்தபடியாக, அவ்வப்போது வாழ்வைச் செலுத்தும் அதிசயங்கள்மீதும் கவனம் செலுத்த முற்படலாம். வாழ்வின் மீதான ஆர்வத்தைத் தூண்டி, இயற்கையுடனான இணைவையும் இது அதிகரிக்கிறது.

குறிப்புச் சொற்கள்