ஜூலை 13ஆம் தேதியன்று ஆறு மாணவர்கள் செய்தி அறையில் ஒருநாள் செய்தியாளராகப் பணிபுரியும் வாய்ப்பைப் பெற்றனர். இந்த வாய்ப்பு அவர்களின் மொழிபெயர்ப்புத் திறனைச் சோதிக்க நடந்த போட்டியில் முதலிடத்தை வென்றதற்காக அவர்களுக்குக் கிடைத்தது.
மீடியாகார்ப் தமிழ்ச் செய்தி, நடப்பு விவகாரப் பிரிவின் ஏற்பாட்டில் நடைபெற்ற ‘தமிழில் யோசி! தமிழில் வாசி!’ போட்டி நிகழ்ச்சியில் பங்கேற்ற 100 மாணவர்களில் அவர்களும் அடங்குவர்.
மூன்றாவது முறையாக இவ்வாண்டு நடைபெற்ற இந்நிகழ்ச்சி, தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சின் மொழிபெயர்ப்புப் பிரிவு, சிங்கப்பூர் தமிழ் ஆசிரியர் சங்கம் ஆகியவற்றின் ஆதரவுடன் நடைபெற்றது.
உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், உயர்நிலைப் பள்ளிகள், தொடக்கக்கல்லூரிகள், பலதுறைத்தொழிற்கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் பங்கேற்றனர்.
மாணவர்கள் தங்கள் தாய்மொழியில் சிந்திப்பதாலும் எழுதுவதாலும் எவ்வாறு செய்தி வாசிப்பவர்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் தகவல்களைப் பரிமாற்றம் செய்ய முடியும் என்பதை அறிந்துகொண்டனர்.
இறுதி வெற்றியாளர்கள் மீடியாகார்ப்பின் தமிழ்ச் செய்திப் பிரிவின் தொலைக்காட்சி, வானொலி, மின்னிலக்கத் தளங்களில் செய்தி படைப்பதற்கான வாய்ப்பைப் பெற்றனர்.
“இளம் திறமையாளர்களை வளர்ப்பதில் எங்களது அர்ப்பணிப்பைத் ‘தமிழில் யோசி தமிழில் வாசி’ நிகழ்ச்சி திறம்படக் காட்டுகிறது,” என்று மீடியாகார்ப் தமிழ்ச் செய்தி, நடப்பு விவகாரப் பிரிவின் தலைமை ஆசிரியர் என். குணாளன் கூறினார்.
“செய்தி அறைச் சூழலில் நேரடி அனுபவத்தை அவர்களுக்கு வழங்குவதன்மூலம், எதிர்காலத்தில் செய்தித் துறையில் சேரவும், ஊடகத் துறையில் முக்கியப் பங்களிப்பை வழங்கவும் அவர்களை ஊக்குவிப்பதே எங்களின் நோக்கம்,” என்று குறிப்பிட்டார் திரு குணாளன்.