புதுப்பிக்கப்பட்ட பென்கூலன் பள்ளிவாசலின் முதல் ரமலான் சமையல்

3 mins read
200 ஆண்டுகளாகத் தொடரும் ஈகை
64f15478-503e-4b6b-8471-75ef6a503426
கிட்டத்தட்ட 4 மில்லியன் வெள்ளி செலவில் புதுப்பிக்கப்பட்ட பென்கூலன் பள்ளிவாசல், 2024ஆம் ஆண்டு மார்ச் மாதம் மீண்டும் திறக்கப்பட்டது. - படம்: த.கவி

புனித ரமலான் மாதத்தின்போது நோன்பிருக்கும் அன்பர்கள், மாலை வேளையில் நோன்பு துறக்கும்போது விரும்பி நாடும் உணவு வகைகளில் நோன்புக்கஞ்சி ஒன்றாகும்.

பல ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ஆண்டு, நோன்புக் கஞ்சியைச் சொந்த வளாகத்திலேயே தயாரித்து வழங்குகிறது பென்கூலன் பள்ளிவாசல்.

200 ஆண்டுகளாகச் செயல்படும் பென்கூலன் பள்ளிவாசல், கிட்டத்தட்ட 4 மில்லியன் வெள்ளி செலவில் 15 மாதங்கள் மேற்கொள்ளப்பட்ட புதுப்பிப்புப் பணிகளுக்குப் பிறகு கடந்த ஆண்டு (2024) மார்ச்சில் மீண்டும் திறக்கப்பட்டது.

பென்கூலன் பள்ளிவாசலின் தரைத்தளக் கார் நிறுத்துமிடத்தில், நோன்புக் கஞ்சிப் பெட்டிகள் விநியோகத்திற்காக அடுக்கப்பட்டு வருகின்றன.
பென்கூலன் பள்ளிவாசலின் தரைத்தளக் கார் நிறுத்துமிடத்தில், நோன்புக் கஞ்சிப் பெட்டிகள் விநியோகத்திற்காக அடுக்கப்பட்டு வருகின்றன. - படம்: த.கவி

புதுப்பிக்கப்பட்ட வளாகத்தில் முதன்முறையாக இந்த ஆண்டு ரமலான் மாதத்திற்கான உணவு வகைகளை அது சமைத்து வழங்குகிறது.

இந்தப் பள்ளிவாசல் வளாகத்தில் 1,450 பேர் தொழுகை மேற்கொள்ள இடமுண்டு. வெள்ளிக்கிழமை தோறும் 1,000 பேரும் ரமலான் மாதத்தில் நோன்பு துறக்க நாளுக்கு 850 பேரும் இங்கு வருகின்றனர்.

பிளாஸ்டிக் பெட்டிக்குள் சுடச்சுட ஊற்றப்படும் நோன்புக் கஞ்சி.
பிளாஸ்டிக் பெட்டிக்குள் சுடச்சுட ஊற்றப்படும் நோன்புக் கஞ்சி. - படம்: த.கவி

பள்ளிவாசலிலேயே காலங்காலமாக நோன்புக் கஞ்சியைச் சமைக்கும் வழக்கம், கொவிட்-19 கிருமிப் பரவலின் தொடக்கத்தில் நிறுத்தப்பட்டது. கடந்த சில ஆண்டுகளாக சமையல் பணி குத்தகைக்கு விடப்பட்ட நிலையில் இந்த ஆண்டு மீண்டும் பள்ளிவாசலிலேயே கஞ்சி தயாரிக்கப்படுவதாக பள்ளிவாசல் தலைவர் ஹாஜி.மு.யூ. முஹம்மது ரஃபீக் தெரிவித்தார்.

ரமலான் மாதத்தில் நோன்பு துறப்புக்காக நாள்தோறும் வரும் 850 பேருக்குப் பள்ளிவாசலில் உணவு தயாராகிறது.
ரமலான் மாதத்தில் நோன்பு துறப்புக்காக நாள்தோறும் வரும் 850 பேருக்குப் பள்ளிவாசலில் உணவு தயாராகிறது. - படம்: த.கவி

16 மணி நேர நோன்புக்குப் பிறகு, இந்த நோன்புக் கஞ்சி வயிற்றுக்கு இதமளித்து உடலுக்குச் சத்து சேர்ப்பதாக அவர் கூறுகிறார்.

பள்ளிவாசலின் சமையலறையில் சமையற்கலைஞர்கள் ஏழு பேர், இந்த உணவுப் பொருள்களை ரமலான் மாதத்திற்காகத் தயாரிக்கின்றனர். தஞ்சாவூரைச் சேர்ந்த முத்துப்பேட்டையிலிருந்த வந்த இவர்கள் சிங்கப்பூர்ப் பள்ளிவாசலில் கஞ்சி தயாரிப்பது இதுவே முதல் முறை.

நிலத்தடி சமையலறையைத் தயார்ப்படுத்துவதற்கான பணிகள் கடந்த ஆண்டு ஆகஸ்டிலிருந்து மேற்கொள்ளப்பட்டதாக திரு ரஃபீக் கூறினார். “பல்வேறு அனுமதிகளைப் பெற்றபின் வெற்றிகரமாகத் திறக்கப்பட்ட இந்த சமையலறைக்கு நிதியுதவி வழங்கியோருக்கு நாங்கள் நன்றி நவில்கிறோம்,” என்றார் அவர்.

ஆயிரம் பேருக்குமேல் நாள்தோறும் உணவு

பள்ளிவாசலிலேயே தங்கி வேலைபார்க்கும் சமையற்கலைஞர்கள், அதிகாலை 5 மணிக்கு எழுந்து ஏறத்தாழ 7 மணிக்கு, சமையலுக்கான மூலப்பொருள்களைப் பதப்படுத்தும் பணிகளில் ஈடுபடுகின்றனர்.

 கொதிக்கும் நீரில் அரிசி கரையும்வரை குழுவின் தலைமை சமையற்கலைஞர் சையது அஹமது ஹாஜா அலாவுதீன், பெரும்பானையில் உள்ள உணவைக் கிண்டிவிடுகிறார்.
கொதிக்கும் நீரில் அரிசி கரையும்வரை குழுவின் தலைமை சமையற்கலைஞர் சையது அஹமது ஹாஜா அலாவுதீன், பெரும்பானையில் உள்ள உணவைக் கிண்டிவிடுகிறார். - படம்: த.கவி

70 கிலோ அரிசி, 12 கிலோ தக்காளி, 10 கிலோ வெங்காயம், ஆறு கிலோ காலிஃப்ளவர், ஆறு கிலோ கேரட் , 20 கிலோ ஆட்டிறைச்சி ஆகியவற்றுடன் பென்கூலன் பள்ளிவாசலின் சிறப்பு மசாலாத் தூள் கலக்கப்பட்டு, மூன்று அண்டாக்களில் இவை குழைய விடப்படும். மொத்தம் 450 லிட்டர் வரை தயாரிக்கப்படும் நோன்புக் கஞ்சி, நாள்தோறும் கிட்டத்தட்ட 1,200 பேருக்கு ( மூவருக்குப் போதுமான 400 பெட்டிகள்) விநியோகிக்கப்படும்.

அத்துடன், 75 கிலோ அரிசியுடன் 120 கிலோ கோழித்துண்டுகளுடன் சமைக்கப்பட்ட சிறப்பு கோழி ‘தம்’ பிரியாணி பொட்டலமிட்டு ஆயிரம் பேருக்குமேல் பரிமாறப்படுகிறது.

பொட்டலமிட்டுப் பரிமாறப்படும் கோழி ‘தம்’ பிரியாணி.
பொட்டலமிட்டுப் பரிமாறப்படும் கோழி ‘தம்’ பிரியாணி. - படம்: த.கவி

சிங்கப்பூரில் அரிசி, காய்கறி, மூலப்பொருள்கள் போன்றவை புதிதாகக் கிடைப்பதால் இங்கு தாங்கள் சமைக்கும் நோன்புக் கஞ்சிக்குக் கூடுதல் சுவை இருப்பதாக இக்குழுவின் தலைமை சமையற்கலைஞர் சையது அஹமது ஹாஜா அலாவுதீன், 42, கூறினார்.

ஒவ்வொரு பானையிலும் தலா 150 லிட்டர் கஞ்சி என  நாளுக்கு மூன்று பானைகள் அளவுக்குத் தயாரிக்கப்படுகிறது.
ஒவ்வொரு பானையிலும் தலா 150 லிட்டர் கஞ்சி என நாளுக்கு மூன்று பானைகள் அளவுக்குத் தயாரிக்கப்படுகிறது. - படம்: த.கவி

“முதலில் பெரும்பானைகளில் தண்ணீரைக் கொதிக்க வைப்போம். அரிசி, முட்டைக்கோஸ், கேரட் ஆகியவற்றை நன்கு கலந்த பிறகு கடலைப் பருப்பு, பாசிப்பருப்பு, வெள்ளைக் கொண்டைக் கடலை ஆகியவற்றைச் சேர்ப்போம். பின்னர், புதினா, கொத்தமல்லி ஆகியவற்றுடன் தேங்காய்ப்பாலையும் சேர்ப்போம். தனியே சமைத்த கீமா கடைசியாகச் சேர்க்கப்படும்,” என்றார் ஹாஜா.

மணக்கும் நெய்யைப் பதப்படுத்தும் சமையற்கலை வல்லுநர்.
மணக்கும் நெய்யைப் பதப்படுத்தும் சமையற்கலை வல்லுநர். - படம்: த.கவி

சைவ உணவு மட்டும் சாப்பிடும் எனக்கு, கீமா கலக்காத கஞ்சியைச் சமையற்குழு வழங்கியது. முதன்முதலாக நோன்புக் கஞ்சியைச் சுவைத்து மகிழ்ந்த அனுபவம் எனக்குக் கிட்டியது.

சிங்கப்பூரில் ஒற்றுமையுடன் வாழும் பல்வேறு இனத்தவருக்குப் பள்ளிவாசலில் சமைத்து உணவு வழங்குவதில் தங்கள் குழுவினர் பெருமையடைவதாக ஹாஜா கூறினார்.

குறிப்புச் சொற்கள்