சர்க்கரையைத் தவிர்ப்பதால் ஏற்படும் நன்மைகள்

3 mins read
d4a843ec-175b-48ca-b8ef-fa421ef5ce61
சர்க்கரையை ஒரு மாதத்திற்குத் தவிர்ப்பது நமது ஆரோக்கியத்திற்குப் பல நன்மைகளை விளைவிக்‌கும். - படம்: ஃபிரீபிக்‌

நம்மில் பலருக்குச் சர்க்கரை இல்லாத ஒரு நாளைக்கூட கற்பனை செய்து பார்ப்பது கடினம்.

காப்பி, டீ, சாக்லேட், தின்பண்டங்கள் போன்ற தினசரி உணவுகளில் சர்க்கரை ஒரு முக்கிய மூலப்பொருள் ஆகும். ஆனால், அதிக அளவில் சர்க்கரையை உட்கொள்ளுதல் உடல் பருமன், நீரிழிவு, இதய நோய் போன்ற கடுமையான பிரச்சினைகளுக்கும் நோய்களுக்கும் வழிவகுக்கும். இதற்குப் பதிலாக சர்க்‌கரை நிறைந்த உணவுப் பொருள்களை நீக்குவது அல்லது குறைத்துக்கொள்வது நம் ஆரோக்கியத்திற்கு நல்லது.

சர்க்கரையை ஒரு மாதத்திற்குத் தவிர்த்தால் உடலில் ஏற்படும் முக்கிய மாற்றங்கள் குறித்து தெரிந்துகொள்வோம்.

சீரான ரத்த சர்க்கரை அளவு

அதிக சர்க்கரை உட்கொள்ளும்போது ரத்தத்தில் சர்க்கரையின் அளவு வேகமாக ஏறி இறங்குகிறது. இதனால் அதைக் கட்டுப்படுத்த நமது உடல் அதிக இன்சுலின்களை வெளியிட வேண்டியிருக்‌கும். இந்தச் செயல்பாடு நீரிழிவு நோய் ஏற்படக்கூடிய அபாயத்தை அதிகரிக்கக்கூடும்.

சர்க்கரையை உட்கொள்வதை ஒரு மாதத்திற்கு நிறுத்தினால் இந்த ஏற்றத்தாழ்வுகள் குறைவதோடு, ரத்த சர்க்கரையின் அளவுகள் சீராகப் பராமரிக்‌கப்பட்டு நீரிழிவு நோய் ஏற்படும் அபாயமும் குறைக்கப்படுகிறது.

உடல் எடை குறைப்பு

ஒரு துளி சர்க்கரையிலேயே 16 கலோரி உள்ளது. இப்படி தினமும் சர்க்கரை நிறைந்த உணவுகளையும் பானங்களையும் உட்கொள்வதால், நிறைய கலோரிகள் நம் உடலுக்குள் சேர்க்கப்படுகின்றன.

கலோரி அளவு குறைந்தால் உடல் எடையும் குறையும். குறிப்பாக தொப்பைப் பகுதியில் உள்ள கொழுப்பு சுருங்கும் எனக் கூறப்படுகிறது. இதனால் உடல் எடை குறையும்; உடலின் ஆரோக்கியம் மேம்படும்.

சரும ஆரோக்கியம் மேம்படும்

சர்க்கரையை அதிகமாக உட்கொள்ளும்போது, ரத்தத்திலுள்ள கோலஜென் என்ற புரதம் பாதிக்கப்படுகிறது. இது சருமத்தில் சுருக்‌கத்தை ஏற்படுத்துவதோடு, பருக்களுக்‌கும் பொலிவு இழந்த சருமத்திற்கும் வழிவகுக்‌கிறது. இதற்குப் பதிலாக சர்க்கரையை ஒரு மாதம் முழுமையாகக் குறைத்தால், சருமம் பளபளப்பாக மாறுவதோடு பருக்கள் குறைந்து இளமையான தோற்றம் கிடைக்‌கும்.

தூக்கத்தில் முன்னேற்றம்

இரவில் இனிப்பான உணவு அல்லது பானங்கள் உட்கொள்ளும்போது, அவை உடலின் இரத்த சர்க்கரை அளவுகளைப் பாதித்து சுறுசுறுப்பை ஏற்படுத்தும். இதனால் தூக்கம் குறையும்.

சர்க்கரை இல்லாத உணவுகளை இரவில் சாப்பிடும்போது, உடல் இயல்பு நிலைக்குத் திரும்பி நல்ல தரமான தூக்கத்தைப் பெற முடியும்.

மனநிலை, மூளை செயல்பாடு மேம்படும்

சர்க்கரை நமது மூளையில் ‘டோபமைன்’ என்ற வேதிப்பொருளை அதிகரிக்கச் செய்வதால், அது சற்று மகிழ்ச்சியை ஏற்படுத்தும் உணர்வை நம்மில் எழுப்பிவிடும். ஆனால், இது தற்காலிக மகிழ்ச்சியானது. அதன் பிறகு, மனநிலை வேகமாகச் சரிந்து சோர்வு ஏற்பட நேரிடலாம்.

சர்க்கரை இல்லாத உணவுகளை உட்கொள்வதால், நமது மனநிலை சீராகி, மன அழுத்தம் குறைந்து, மூளை செயல்பாடுகள் மேம்படும்.

பற்களின் ஆரோக்கியம்

சர்க்கரை சாப்பிடும்போது, மனிதனின் வாயில் இயற்கையாக இருக்‌கும் பாக்டீரியா பற்களில் ஒட்டும் சர்க்கரையை உணவாக எடுத்துக்கொண்டு, பற்களில் குழிகளை ஏற்படுத்திவிடும். இது பற்களில் பொத்துகள், ஈறுநோய் ஏற்படுவதற்கு வழிவகுக்கும். இதைத் தவிர்த்து, வாயின் ஆரோக்கியத்தை மேம்படுத்த அதிக அளவில் இனிப்பான உணவு பொருள்களை உட்கொள்வதைத் தவிர்க்‌க வேண்டும்.

சர்க்கரைக்கான ஏக்கம் குறையும்

சிலர் சர்க்கரைக்கு அடிமையாக இருப்பார்கள். ஆனால் ஒரு மாதம் சர்க்கரையின்றி இருப்பதன்மூலம், நாளுக்கு நாள் அதற்கான ஏக்கம் குறையும்.

நீண்ட கால சர்க்கரை தவிர்ப்பு, உணவு, பானங்களில் இயற்கையான இனிப்பு சுவைக்கான விருப்பத்தைக் கூட்டும். பழங்கள், பட்டை, வெண்ணிலா போன்ற மசாலா பொருள்கள், ஸ்டீவியா போன்ற குறைவான கலோரி இனிப்புப் பொருள், ‘டார்க் சாக்லேட்’ ஆகியவற்றை உண்டு சர்க்‌கரை ஏக்‌கத்தைத் தனிக்‌கலாம்.

குறிப்புச் சொற்கள்