தண்ணீரை வாயில் கொண்டு கொப்பளிக்கும் பழக்கம் பொதுவாக பல் துலக்கும் வேளையில் பலரும் மேற்கொள்வதுண்டு. இருப்பினும், சாப்பிட்ட பிறகு வாய் கொப்பளித்தல் பல நன்மைகளுக்கு வழிவகுக்கும்.
பாக்டீரியா, கிருமிகள் குறையும்
பதமான வெந்நீர், உப்பு கலந்த நீர் அல்லது வாய் கழுவும் மருந்து பயன்படுத்தி வாய் கொப்பளிப்பதால் வாய் மற்றும் தொண்டையில் உள்ள கிருமிகளை கொல்லவும் தொற்றுநோய் அபாயத்தைக் குறைக்கவும் உதவும்.
வாய் சுத்தம் மேம்படுகிறது
உணவருந்திய பிறகு வாய் கொப்பளிப்பதால் விடுபட்ட உணவுத் துண்டுகள், கிருமிகள் எல்லாம் அகற்றப்படுகின்றன. குறிப்பாக பல் துலக்கும் வேளையில் விடுபடும் ஏதேனும் அழுக்கை வாய் கொப்பளித்து நீக்கலாம். இதனால் நாள்தோறும் வாய் சுத்தமாக இருக்கும்.
தொண்டை வலி நிவாரணம்
அதிக காரம் நிறைந்த உணவுகள் உண்பதால் சிலருக்கு தொண்டை வலி ஏற்படுகிறது. வாய் கொப்பளிப்பதால் வலியால் ஏற்படும் தொண்டை வீக்கம், வலி, புண் நீங்கி எளிதில் தொண்டை வலியிலிருந்து குணமடையலாம்.
வாய் துர்நாற்றத்தைத் தடுக்கும்
வெங்காயம், பூண்டு அதிகம் கொண்ட உணவுகள் மணிக்கணக்கில் சுவாசத்தில் நீடிக்கும். இது எளிதில் துர்நாற்றமாக உருவெடுக்கும். வாய் கொப்பளிப்பதால் வாயிலிருந்து வரும் துர்நாற்றம் நீங்கி கிருமிகள் அதிகரிக்காது. மற்றவர்களுடன் வாய்விட்டு பேசும் நேரத்தில் நல்ல சுவாசம் வீசும் வாய்ப்புள்ளது!
வாய்ப் புண்களிலிருந்து விரைவான நிவாரணம்
தவறுதலாக மீன் முள், கூர்மையான கோழி எலும்புகளை விழுங்குவதால் வாய் அல்லது தொண்டையில் சிறு வெட்டுகள் அல்லது புண்கள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. அதை குணப்படுத்த உப்பு நீரில் வாய் கொப்பளிப்பது சிறந்தது. இதனால் வாய் தொற்று அபாயங்களும் குறையும்.
சளியை சுத்தப்படுத்தும்
குளிர்ந்த உணவு, பானங்கள் சில சமயம் உடலில் குளிர்ச்சியை அதிகரித்து சளி ஏற்படுத்தும். பதமான வெந்நீர் கொண்டு வாய் கொப்பளிப்பதால் தொண்டையை அடைக்கும் சளி எளிதாக வெளியேறும்.
பற்குழிகளை தடுக்கும்
தினமும் உட்கொள்ளும் உணவின் மிச்சம் நாளுக்கு நாள் பற்களுக்கிடையில் சிக்கிக்கொண்டே வரும். இந்த சூழ்நிலை நாளடைவில் பற்குழிகளுக்கு வழிவகுக்கும். கிருமிகளை எதிர்க்கும் தரமான வாய் கழுவும் மருந்தைப் பயன்படுத்தி உணவருந்திய பிறகு வாய் கொப்பளிப்பதால் பற்குழிகள் ஏற்படாது. இதனால் வாய், ஈறுகள் சார்ந்த நோய்களை தவிர்க்கலாம்.
நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது
உப்பு நீர் அல்லது குறிப்பிட்ட வாய் கழுவுதல்களை பயன்படுத்தி வாய் கொப்பளித்தால் தொண்டையில் அடங்கியுள்ள நோய்க்கிருமிகள் வெளியேறும் என்று சில ஆய்வுகள் தெரிவித்துள்ளன. அதனைத் தொடர்ந்து நோய் எதிர்ப்பு சக்தியும் மேம்படும்.

