சிறுவயதில் நம் அன்றாட அனுபவங்களையும் உணர்ச்சிகளையும் பற்றி எழுத ஒரு நாட்குறிப்பைப் பலரும் கைவசம் வைத்திருந்திருப்போம்.
இதைச் சாதாரணமாக பொழுதுபோக்காகக் கருதிவிட முடியாது.
‘ஜர்னலிங்’ என்று அழைக்கப்படும் இந்த பழக்கத்திற்குப் பல நன்மைகள் உள்ளன என்று ஆய்வுகள் சில குறிப்பிடுகின்றன.
நாட்குறிப்பு எழுதுவது நல்லது
மன அழுத்தம், மனச்சோர்வு அல்லது பெரும்பதற்றத்துடன் போராடுபவருக்கு நாட்குறிப்பு எழுதும் பழக்கம் உதவியாக இருக்கும். இதனால் உணர்ச்சிகள் கட்டுப்படுத்தப்பட்டு மனநலம் மேம்படும்.
நாட்குறிப்பு எழுதுவதால்:
- மனத்தளவில் ஏற்படும் பிரச்சினைகள், அச்சங்கள், கவலைகளைச் சரிவர சமாளிக்கலாம்.
- மனச்சோர்விற்கான அறிகுறிகளை எளிதில் கண்டறிந்து அவற்றைத் தடுக்க முயற்சிகள் மேற்கொள்ளலாம்.
- எதிர்மறை எண்ணங்களையும் நடத்தைகளையும் அடையாளம் கண்டு அவற்றை மாற்றியமைக்கலாம்.
தொடர்புடைய செய்திகள்
மன அழுத்தம், பதற்றம் மற்றும் மனநலனைச் சிறப்பாக நிர்வகிப்பதற்கான நல்வாழ்வுமுறையின் ஓர் அம்சம்தான் ‘ஜர்னலிங்’.
நல்வாழ்க்கைக்கு ‘ஜர்னலிங்’ பழக்கத்தைத் தவிர:
- ஆரோக்கியமான உணவை உண்ண வேண்டும்.
- தவறாமல் உடற்பயிற்சி செய்ய வேண்டும்.
- நாளும் நன்றாக உறங்கி எழவேண்டும்.
- ஒவ்வொரு நாளும் ஓய்வெடுக்க நேரம் ஒதுக்க வேண்டும்.
எவ்வாறு எழுதலாம்?
ஒவ்வொரு நாளும் சில நிமிடங்கள் ஒதுக்கி நாட்குறிப்பில் எழுத முயற்சி செய்யலாம்.
நாட்குறிப்பில் எழுதும் முயற்சியை எளிதாக்குவது சிறந்தது. எந்நேரமும் பையில் அல்லது மேசையில் ஒரு நாட்குறிப்பை வைத்துக்கொள்ளப் பரிந்துரைக்கப்படுகிறது.
தொழில்நுட்ப எழுச்சியினால் திறன்பேசிகளில் நாட்குறிப்பை வைத்திருக்கும் வசதி தற்போது புகழடைந்து வருகிறது. எழுதச் சிரமப்படுவோருக்குத் திறன்பேசியில் நாட்குறிப்பு வைத்திருப்பது ஒரு எளிய யோசனை.
உணர்வுகளை வெளிப்படையாக எழுதும் ஒரு தனிப்பட்ட இடமே நாட்குறிப்பு. அது மனத்தை இதமாக்குகிறது. நாட்குறிப்பில் எழுதுவதற்கு விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்குறிப்பு எழுதும் நேரத்தை ஓய்வு நேரமாகக் கருதுவது நன்று. அமைதியான ஓர் இடத்தில் அமர்ந்து நாட்குறிப்பில் எழுதுவதால் மனச்சுமை குறைந்து அமைதி பிறக்கலாம்.

