பிற்பகலில் தூங்குவதால் சுகாதார நலன்கள் அதிகம்
சிறுதூக்கம் நமது மூளையின் நீண்டகால ஆரோக்கியத்திற்கு நல்லது என்று ஆராய்ச்சிகள் காட்டுகின்றன. 2023ஆம் ஆண்டு லண்டன் பல்கலைக்கழக கல்லூரி (University College London) மற்றும் உருகுவேயின் குடியரசு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில் வழக்கமான சிறுதூக்கம் மூளையை நீண்ட நேரம் பெரிதாக வைத்திருக்கவும் அதன் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை அதிகரிக்கவும் உதவும் என்று கண்டறியப்பட்டது.
இது மூளையின் முதுமையை மூன்று முதல் ஆறு ஆண்டுகள் வரை தாமதப்படுத்துவதற்கு சமம் என்று தெரிவிக்கப்பட்டது.
குழந்தைகளின் அறிவாற்றல் வளர்ச்சிக்கு சிறுதூக்கம் முக்கியமானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. சிறுதூக்கம் இல்லாவிட்டால் குழந்தைகளுக்கு நினைவாற்றல் குறைவாக இருக்கும் என்று நிபுணர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
சிறுதூக்கம் மேற்கொள்வதால் தினமும் ஏற்படும் பயன்கள்
சிறுதூக்கம் மேற்கொள்வதால் குறுகியகால ஆரோக்கிய நன்மைகளும் உள்ளன. 5 முதல் 15 நிமிடங்கள் வரை நீடிக்கும் சிறுதூக்கம் மனதளவில் செயல்பாட்டை மேம்படுத்தும். மேலும், சிறுதூக்கத்திலிருந்து எழுந்த பிறகு உற்பத்தித்திறன் மூன்று மணி நேரம் வரை நீடிக்கும்.
பிற்பகல் 1 மணி முதல் மாலை 4 மணி வரை தூங்குவதால் மனநிலைக்கு நன்மை பயக்கும் என்றும் உடல் மற்றும் அறிவாற்றல் செயல்திறன் மேம்படும் என்றும் ஆய்வுகள் காட்டுகின்றன.
இருப்பினும் சிறுதூக்கம் மேற்கொள்வது ஒரு நல்ல இரவு தூக்கத்துக்கு சமம் இல்லை என்று நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர். அடிக்கடி பகல் நேரத்தில் சிறுதூக்கம் தேவைப்பட்டால் இரவில் போதுமான அளவு தூக்கம் கிடைக்கிறதா என்று யோசிப்பது அவசியம்.
பிற்பகலில் சிறுதூக்கம் எப்படி மேற்கொள்வது?
சிறுதூக்கத்துக்கு நேரம் ஒரு பெரிய பங்கு வகிக்கிறது. பிற்பகல் 2 மணி முதல் 4 மணி இடையில் 20 நிமிடங்களுக்குள் மேற்கொள்ளும் சிறுதூக்கம் போதுமானது. பகலில் தாமதமாக சிறுதூக்கம் மேற்கொண்டால் இரவில் தூக்கம் சற்று சிரமமாகும், என்கின்றனர் நிபுணர்கள்.
அதே நேரம், 20 நிமிடங்களுக்கு மேல் தூங்கினால் எழுந்திருப்பது கடினமாகிறது. அத்துடன் உடல் ரீதியில் மிகுந்த களைப்பு ஏற்படும். இதனால் மற்ற காரியங்களை செய்ய உடல், மனதளவில் வலிமை இருக்காது.
தூக்கம் என்பது இயற்கையின் மருந்து. குறிப்பாக சிறுதூக்கத்தை சிறிதளவில் மேற்கொள்வதால் வாழ்க்கை முறையின் ஒரு பகுதியாக மாறிப் பல விதங்களில் நன்மைை பயக்கும்.