மனிதர்களின் வாயில் ஏறத்தாழ 700 வகையான கிருமிகள் வாழலாம் என்று ஆய்வுகள் காட்டுகின்றன.
அவற்றில் சில ஆபத்தான கிருமிவகைகள் பல் சொத்தை, வாய் துர்நாற்றம், ஈறு நோய் போன்றவற்றுக்கு இட்டுச் செல்லக்கூடும்.
இந்நிலையில், வாயில் உள்ள தீங்கு விளைவிக்கும் கிருமிகளின் எண்ணிக்கையைக் குறைத்து, வாய்நலத்தை மேம்படுத்த எண்ணெய்க் கொப்புளிக்கும் பழக்கம் உதவுகிறது.
துர்நாற்றத்தைக் கட்டுப்படுத்துதல்
வாய் துர்நாற்றத்திற்குப் பல காரணங்கள் உள்ளன. தொற்று, ஈறு நோய், மோசமான வாய்நலம் பேணல் போன்றவற்றால் துர்நாற்றம் உண்டாகலாம்.
வாய் துர்நாற்றத்தைக் குறைப்பதற்காகப் பயன்படுத்தப்படும் கொப்புளித்தல் மருந்து போலவே எண்ணெய்க் கொப்புளிக்கும் முறை பயனுள்ளதாக இருக்கும் என்று 2011ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டது.
எனவே, வாய் துர்நாற்றத்தை இயற்கையான முறையில் குறைக்க எண்ணெய்யைக் கொண்டு கொப்புளிக்கும் பழக்கத்தை நாடலாம்.
சொத்தைப்பல்லைத் தடுத்தல்
பல் சிதைவிலிருந்து உருவாகும் ஒரு பொதுவான பிரச்சினை பல் சொத்தை. போதிய பராமரிப்பு இன்மை, அதிக சர்க்கரை சாப்பிடுதல், கிருமிகள் அதிகரிப்பு ஆகியவை பல் சொத்தையை ஏற்படுத்தும்.
எண்ணெய்யைக் கொண்டு கொப்புளிப்பதால் வாயில் உள்ள கிருமிகள் குறைந்து, பல் சொத்தையாவது தடுக்கப்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
ஈறு வீக்கத்தைக் குறைத்தல்
ஈறு அழற்சி (gingivitis) என்பது ஈறுகளில் தோன்றும் ஒரு நோயாகும். இந்த நோயால் ஈறுகள் வீங்கி, அதிலிருந்து எளிதில் ரத்தம் கசியும் வாய்ப்புகள் அதிகம்.
பற்குழிகளில் (cavities) காணப்படும் கிருமிகள் ஈறு அழற்சிக்கு முக்கியக் காரணமாகும். ஏனெனில், அவை ஈறுகளின் வீக்கத்தை ஏற்படுத்தும்.
தேங்காய் எண்ணெய் போன்ற அழற்சி எதிர்ப்புப் பண்புகளைக் கொண்ட சில எண்ணெய் வகைகளைப் பயன்படுத்தி வாய் கொப்புளிப்பது ஈறு நோயுடன் தொடர்புடைய வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது.
மேலும், எண்ணெய்யைக் கொண்டு கொப்புளிப்பதால் பற்கள் வெண்மையாகும் என்பதற்கான சான்றுகளும் உள்ளன.
எண்ணெய்க் கொப்புளிப்பது மிக எளிதான, செலவு குறைந்த ஒரு பழக்கமாகும்.
வழக்கமாக, எண்ணெய்க் கொப்புளித்தலுக்கு நல்லெண்ணெய் பயன்படுத்தப்படுகிறது. தேங்காய் எண்ணெய் போன்ற மற்ற வகை எண்ணெய் வகைகளையும் பயன்படுத்தலாம்.
வாயில் சிறிதளவு எண்ணெய்யை ஊற்றி, 10 நிமிடங்கள்வரை கொப்புளிப்பதால் பல்நலத்தை மேம்படுத்தி, வாய் சுகாதரம் சார்ந்த பல நோய்களிலிருந்து நம்மைப் பாதுகாக்கலாம்.

