உடல்நலத்திற்கு மட்டுமல்லாமல் சருமம், தலைமுடிப் பராமரிப்பு எனப் பல்வேறு வழிகளில் தயிர் பயன்படுத்தப்படுகிறது.
அன்றாட உணவில் தயிர் சேர்ப்பதால் பல்வேறு நன்மைகளைப் பெறலாம்.
செரிமானம்
கொழுப்புச் சத்து, மாவுச்சத்து நிறைந்த உணவு வகைகள் சில நேரங்களில் செரிப்பதற்குக் கூடுதல் நேரம் ஆகும். இதனால் பலரும் அசௌகரியத்தை எதிர்கொள்வார்கள். உணவில் இறுதியாகச் சிறிது தயிர் உட்கொள்வதால் உணவு எளிதில் செரிமானம் ஆகும்.
மேம்படும் நோய் எதிர்ப்பாற்றல்
தயிரில் காணப்படும் நலநுண்ணுயிரிகள் (probiotics) பல்வேறு கிருமிகளை எதிர்த்துப் போராட உதவும். இதனால் நோய் எதிர்ப்பு சக்தி மேம்படும் வாய்ப்புகள் அதிகம்.
‘கால்சியம்’ அதிகரிக்க உதவும்
தயிரில் அதிக கால்சியம் சத்து நிறைந்துள்ளது. தொடர்ந்து தயிர் உண்பதால் எலும்புகளும் பற்களும் வலுவடையும்.
ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும்
தயிர் உண்பதால் உடலில் கொழுப்பு, உயர் ரத்த அழுத்த அளவுகள் கட்டுப்படுகிறது. இதனால் மாரடைப்பு அபாயம் குறைவதாகக் கூறப்படுகிறது.
பளபளப்பான சருமம்
தயிருடன் மஞ்சள், சந்தனம் போன்றவற்றைக் கலந்து முகத்தில் பூசினால் முகம் பிரகாசமாக, மென்மையாக விளங்கும்.
தழும்புகள், முகப்பருக்களைக் குணப்படுத்த தயிர்
முகத்தில் ஏற்படும் வீக்கம் (inflammation), கறைகள், கரும்புள்ளிகளைக் குறைக்க தயிர் உதவும்.
மேலும், தயிரில் உள்ள இயற்கையான கொழுப்புகள், புரதங்கள் முகத்தின் ஈரப்பதத்தைத் தக்கவைத்து, சருமத்தை மிருதுவாக வைத்திருக்க உதவுகின்றன.
ஆரோக்கியமான கூந்தலுக்குத் தயிர்
தயிரில் புரதங்களும் வைட்டமின்களும் நிறைந்துள்ளன. அவை தலைமுடி நுனிகளையும் வேர்களையும் வலுப்படுத்த உதவும்.
வறட்சி, முடி நுனி பிளவுபட்டிருத்தல் ஆகியவற்றைச் சரியாக்கவும் ஆரோக்கியமான, வலுவான கூந்தலைப் பெறவும் தயிர் உதவுகிறது.

