தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மோசடியை சமாளிக்க மேம்பட்ட அம்சங்கள்

3 mins read
4e0533d5-7e30-44b5-8dc4-782a4e062250
மோசடிகள் குறித்த பாவனைப் படம். - படம்:

இணையம் வழியே பொருள்களை வாங்கும் வழக்கமுடைய ஜோனதன் சியாவுக்கு தொடர்ந்து தெரியாத எண்களிலிருந்து வாட்ஸ்ஆப் குறுஞ்செய்திகள் வருகின்றன.

“நான் இணையம்வழி வாங்கிய பொருள்களை வீட்டிற்கு கொண்டுசேர்க்கும் விநியோக ஊழியர்கள் அதுகுறித்த தகவல்களைக் குறுஞ்செய்தியாகப் பகிர்வது வழக்கமானதுதான். அதனாலேயே ஆர்டர் எண் உள்ளிட்ட பொருள் குறித்த தகவல்கள் இல்லாத குறுஞ்செய்திகளைக் குறித்து கவலை கொள்வதில்லை” என்றார் 33 வயது கட்டட உள்புற வடிவமைப்பாளரான ஜோனதன்.

எப்போதும் அவ்வாறு இருப்பதில்லை. சில நேரங்களில் இணையத் தளங்களில் முகவரியைப் புதுப்பிக்கக் கோரியும், சில பொருள்களுக்கு கூடுதல் கட்டணம் செலுத்தக் கோரியும் குறுஞ்செய்திகள் வருகின்றன.

‘டெலிவரி பார்சல் ஸ்கேம்கள்’ என்று அறியப்படும் இவ்வகைப் பொருள் விநியோக மோசடிகளில் தனிப்பட்ட, வங்கித் தகவல்களைப் பெறும் இணைப்புகளை மின்னஞ்சல், குறுஞ்செய்திகள் வழி அனுப்புகின்றனர் மோசடிப் பேர்வழிகள்.

அப்பாவிப் பொதுமக்கள் பதிவேற்றும் விவரங்களைப் பயன்படுத்தி வங்கியிலிருந்து பணத்தைத் திருடுகின்றனர் மோசடிப் பேர்வழிகள்.

“நான் அண்மையில் பொருள் ஏதேனும் வாங்கியிருந்தால் இந்தக் குறுஞ்செய்தியை நம்பியிருப்பேன். அதுவும் உள்ளூர் எண்ணிலிருந்து வந்திருந்தால் சந்தேகம் எழாது,” என்றார். “ஆனால் அது உண்மையானதா என உறுதியாகத் தெரியாது,” என்றார்.

செயல்பாட்டு முறை

மோசடிக்கான சாத்தியக்கூறுகள் உள்ள இவ்வாறான சூழ்நிலைகளில் திரு. சியாவ் போன்றோர் யாரை நாடலாம்?

ஸ்கேம்ஷீல்டின் புதிய உதவி எண், ஸ்கேம் ஷீல்ட் செயலியின் மேம்படுத்தப்பட்ட திறன்கள் இதற்கு உதவும்.

இவை சிங்கப்பூர்க் காவல்துறை, தேசிய குற்றத் தடுப்பு மன்றம், Open Government Products இணைந்து தொடங்கிய ஸ்கேம் ஷீல்ட் சியூட்டின் (Suite) முக்கிய அம்சங்களில் அடங்கும்.

இந்தத் தொகுப்பு பல ஊழல் எதிர்ப்பு குறித்த தகவல்களை ஒருங்கிணைத்து, அவற்றைப் பொதுமக்களிடம் கொண்டுசேர்ப்பதையும், அதன் மூலம் பயனடைவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது என்றார் மோசடிப் பொதுக் கல்வி அலுவலகச் செயல்பாட்டுத் துறையின் துணை இயக்குநர் திரு ஜெஃப்ரி சின்.

எளிதில் நினைவில் வைத்துக்கொள்ளும் 1799 எனும் எண் கொண்ட 24 மணிநேர உதவி மையம், கடினமான சூழலில் அது மோசடியா என்பதைச் சரிபார்க்கவும் உதவுகிறது என்றார் திரு. சின்.

ஸ்கேம்ஷீல்டின் அண்மைய தொகுப்பில் மோசடிகளைக் கண்டறிந்து பயனர்களின் உதவியுடன் மோசடிகளைக் கண்டறியும் கருவி சேர்க்கப்பட்டுள்ளது.

அதில் சந்தேகத்திற்குரிய தொலைபேசி எண்கள், இணைப்புகளைப் பதிவேற்றி அவை மோசடிகளுடன் தொடர்புடையதா எனச் சரிபார்த்துக் கொள்ளலாம்.

வேகமாகப் பெருகி வரும் மோசடிகளிடமிருந்து பொதுமக்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கான சிறந்த வழியை இந்த அம்சம் வழங்குகிறது என்கிறார் மூத்த தயாரிப்பு மேலாளர் திருவாட்டி ரேஷ்மா வாசு.

சந்தேகத்திற்குரிய எண்கள் குறித்த தகவல்களை அதிகாரிகளிடம் தெரியப்படுத்தி, அவற்றை முடக்கவும் இது வழி செய்கிறது.

இது நாளடைவில் பொதுமக்களிடையே பெரும் மோசடி அழைப்புகளின் எண்ணிக்கையைக் குறைக்கவும் உதவும் என்றார் அவர்.

இவ்வாறு செயலி வழி புகார் அளிப்பது ஸ்கேம்ஷீல்டின் தடுக்கப்பட்ட மோசடி எண்கள் பட்டியலை விரிவுபடுத்தவும், அதுகுறித்து செயற்கை நுண்ணறிவுக்கு பயிற்சி அளிக்கவும் உதவும்.

கடந்த 2020ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தச் செயலியை, இதுவரை ஒரு மில்லியனுக்கும் அதிகமானோர் பதிவிறக்கம் செய்துள்ளனர். மோசடியுடன் தொடர்புடைய அழைப்புகள், குறுந்செய்திகள் மூலம் 178,000க்கும் மேற்பட்ட எண்களை முடக்கியுள்ளது காவல்துறை.

பாதுகாப்பது எளிது

ஸ்கேம்ஷீல்ட் தொகுப்பின் ஒரு பகுதியான, புதிய இணையத்தளம் (ScamShield.gov.sg) மோசடிகளை நிரந்தரமாகத் தடுக்கும் ஒருங்கிணைந்த தளமாகச் செயல்படும்.

அண்மைய மோசடிப் போக்குகள் குறித்த ஆலோசனைகள், மோசடியை எதிர்கொண்டால் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள், மோசடி தொடர்பான மீள்திறனை மேம்படுத்தும் நடவடிக்கைகள் ஆகியவை இதில் அடங்கும்.

வாட்ஸ்ஆப், டெலிகிராம் உள்ளிட்ட தகவல் பகிரும் ஊடகங்கள் வழி மோசடி குறித்த தகவல்களைப் பகிரும் தளங்கள் உருவாக்கப்பட்டுள்ளன என்றார் திரு சின்.

இவை எவ்வாறு உதவும்?

1799க்கு அழைக்கலாம்

இதன் மூலம் ஒரு குறிப்பிட்ட சூழ்நிலை மோசடியா என்பதை உறுதி செய்யலாம். ஏழு முக்கிய வங்கிகளையும் தொடர்பு கொண்டு பற்று அட்டை, வங்கிக் கணக்குகள் குறித்த தகவல்கள் பறிபோனதா என்பது குறித்த தகவல்களையும் பெறலாம்.

ஸ்கேம்ஷீல்ட் செயலி பயன்படுத்தலாம்

மோசடிகளை சரிபார்த்து முடக்கவும், மோசடி எண்களிலிருந்து வரும் அழைப்புகள், செய்திகள் எண்ணிக்கையையும் குறைக்கிறது.

ScamShield.gov.sg இணையத்தளம்

இதில் அண்மைய போக்குகள் குறித்த ஆலோசனை, பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து அறியலாம்.

ஸ்கேம்ஷீல்ட் முக்கிய தகவல் தளம்

மோசடிகள் குறித்த அண்மைய முக்கியத் தகவல்களைப் பெற வாட்ஸ்ஆப், டெலிகிராம் ஊடகங்களின் வழி இணையலாம்.

மோசடித் தடுப்பை மேம்படுத்திக்கொள்ளுங்கள்

ஸ்கேம்ஷீல்டையும் பாதுகாப்பு அம்சங்களையும் சேர்க்கவும்

  1. ஸ்கேம்ஷீல்ட் செயலியைப் பதிவிறக்கம் செய்து மோசடி அழைப்புகளிலிருந்தும் குறுஞ்செய்திகளிலிருந்தும் பாதுகாத்துக்கொள்ளுங்கள்.
  2. இணைய, திறன்பேசி வங்கிப் பரிவர்த்தனை வரம்புகளை மறுபரிசீலித்து குறைக்க முற்படுங்கள். ஈரடுக்கு, பலஅடுக்கு கண்காணிப்பை முடுக்கிவிடுங்கள்.
  3. அதிகாரத்துவ வழிகளில் மட்டுமே செயலிகளைப் பதிவிறக்கம் செய்யுங்கள்.

மோசடிக்கான அறிகுறிகளை அடையாளம் காணவும்

  1. ஸ்கேம்ஷீல்ட் உதவி எண்ணை 1799ல் அழைத்து சந்தேகத்தைக் களையுங்கள். சந்தேக எண்களை, குறுஞ்செய்திகளை, இணைப்புகளை ஸ்கேம்ஷீல்ட் செயலியில் சரிசெய்துக்கொள்ளுங்கள்.
  2. அமைப்புகளுக்கு நேரடியாக அழைத்து உறுதிசெய்துக்கொள்ளுங்கள். தனிப்பட்ட தகவல்களைக் கேட்கும் இணைப்புகளை நம்பவேண்டாம்.
  3. தனிப்பட்ட தகவல்களை (சிங்பாஸ், மசேநி-தொடர்பானவை உட்பட), இணைய வங்கி, சமூக ஊடகக் கணக்கு, ஒருமுறை பயன்படுத்தும் கடவுச்சொல் முதலியவற்றை எவரிடமும் பகிரவேண்டாம்.
  4. அரசாங்க அமைப்புகளிலிருந்து வரும் குறுஞ்செய்திகள் அனைத்தும் “gov.sg” எனும் ஒரே அடையாளத்தில் வரும். குறுஞ்செய்தியின் தொடக்கத்தில் அமைப்பின் பெயரும் இறுதியில் சிங்கப்பூர் அரசாங்கம் அனுப்பியது என்று இருக்கும்.

அதிகாரிகள், குடும்பத்தினர், நண்பர்களிடம் சொல்லவும்

  1. மோசடி சம்பவங்கள் குறித்து நண்பர்கள், உறவினர்களுக்குத் தெரிவிக்கவும்.
  2. சந்தேக மோசடி கணக்குகளையும் தொடர்புக் குழுக்களையும் தடுத்து புகாரளிக்கவும்.
  3. மோசடிக்கு உள்ளாகிவிட்டால் வங்கியை உடனடியாகத் தொடர்புக்கொண்டு காவல்துறையிடம் புகாரளிக்கவும்.

சிங்கப்பூர் காவல்துறையுடன் இணைந்து வழங்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்