வாகனத்தை ஓட்டிக்கொண்டிருக்கும்போது அதன் பின்புறத்திலிருந்து வெடிப்புச் சத்தம்போல ஏதேனும் கேட்டால் கவனம் தேவை என்று வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.
சிங்கப்பூரில் மார்ச் மாதத்தின் முதல் வாரத்தில் மட்டும் வாகனம் தீப்பற்றி எரிந்த ஐந்து சம்பவங்கள் பதிவாயின. நிக்கல் ஹைவேயில் மார்ச் 2ஆம் தேதி நேர்ந்த அத்தகைய சம்பவத்தில் ஆடவர் ஒருவர் உயிரிழந்தார்.
கடந்த ஆண்டு வாகனங்கள் தீப்பற்றிய சம்பவங்களின் எண்ணிக்கை 220 ஆகப் பதிவானது. 2023ல் இந்த எண்ணிக்கை 215ஆகப் பதிவானதாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையின் அண்மைய புள்ளிவிவர அறிக்கை குறிப்பிடுகிறது. இந்தச் சம்பவங்களில் ஒன்று மட்டும் மின்வாகனத்துடன் தொடர்புடையது.
அளவுக்கு அதிகமாக வெப்பமடையும்போது அல்லது மின்னிணைப்புகளில் பழுதுகள் ஏற்படும்போது பல நேரங்களில் கார்கள் தீப்பற்றுகின்றன.
வாகன எரிபொருள் கட்டமைப்பில் கசிவு ஏற்படும்போதும் எளிதில் தீப்பற்றக்கூடிய எரிபொருளால் வாகனங்கள் தீப்பற்றலாம் என்று சிங்கப்பூர் மோட்டார் வாகனச் சங்கம் கூறியது.
அத்துடன், நன்றாகப் பொருத்தப்படாத ஒலிபெருக்கிகள், கண்காணிப்புக் கேமராக்கள் ஆகியவற்றாலும் தீச்சம்பவங்கள் நேரலாம்.
வாகனத்திலிருந்து புகை வந்தாலோ கருகிய வாசனையை நுகர்ந்தாலோ அதைத் தொடர்ந்து ஓட்டவேண்டாம் என்று சங்கம் கூறியது.
மின்விளக்குகள் சரியாக வேலை செய்யாமல் மின்னினால் அவை பிரச்சினைகளுக்கான அறிகுறி என்றும் அறிவுறுத்தப்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
வெப்பநிலையை மதிப்பிடும் கருவி வாகனத்தில் அதிகமான வெப்பம் இருப்பதாகக் காட்டினால் அது ஆபத்திற்கு அறிகுறி.
வாகனத்தை ஓட்டிக்கொண்டிருக்கும்போதே ஏதோ சரியில்லை என்று உணர்ந்தால், உடனே அதை ஓர் ஓரமாக நிறுத்தி எச்சரிக்கை விளக்கு மூலம் சாலையிலுள்ள பிறரை எச்சரிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.