மூன்றாம் முறையாகச் சாதனை படைத்த நடைப்பந்தயக் குழு

மூன்றாம் முறையாகச் சாதனை படைத்த நடைப்பந்தயக் குழு

1 of 2
படம்: லெட்ஸ் டேக் அ வாக் 2024
படம்: லெட்ஸ் டேக் அ வாக் 2024

08 Nov 2024 - 5:45 am

3 mins read

‘ஜஸ்ட் வாக் லா’ நடைப்பந்தயக் (race walking) குழு, 50 கி.மீ. நடந்த ஆகப் பெரிய குழு (38 பேர்) என்ற சாதனையுடன் சிங்கப்பூர் சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.

‘ராலீ சிங்கப்பூர்’ (Raleigh Singapore) ஏற்பாடு செய்த ‘லெட்ஸ் டேக் அ வாக்’ எனும் லாப நோக்கமற்ற நடையில் பங்கேற்று ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 3) அக்குழு இச்சாதனையைப் புரிந்துள்ளது. ‘ரே ஆஃப் ஹோப்’ அறநிறுவனத்துக்கு நிதி திரட்டும் நோக்கிலான இந்நடையில் ஏறக்குறைய 1,800 பேர் பங்கேற்றனர்.

சனிக்கிழமை (நவம்பர் 2) இரவு 10 மணிக்கு பொங்கோல் சாஃப்ராவில் தொடங்கி, ஞாயிற்றுக்கிழமை காலை சிங்கப்பூர் விளையாட்டு நடுவத்தில் ‘ஜஸ்ட் வாக் லா’ குழுவினர் இரவு நடையை முடித்தனர்.

அவர்களில் 20க்கும் மேற்பட்டோருக்கு 50 கி.மீ. நடப்பது இதுவே முதன்முறை. ஒருவர் காலில் கட்டுப் போட்டிருந்தபோதும் விடாமுயற்சியோடு நடையை முடித்தார்.

50 கிலோமீட்டர் நடந்த ஆகப் பெரியக் குழு (38 பேர்) என்ற புதிய சாதனையுடன் மூன்றாம் முறையாக சிங்கப்பூர் சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றது ‘ஜஸ்ட் வாக் லா’ நடைப்பந்தயக் குழு.
50 கிலோமீட்டர் நடந்த ஆகப் பெரியக் குழு (38 பேர்) என்ற புதிய சாதனையுடன் மூன்றாம் முறையாக சிங்கப்பூர் சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றது ‘ஜஸ்ட் வாக் லா’ நடைப்பந்தயக் குழு. - படம்: ரவி சிங்காரம்

13.5 மணி நேரத்திற்குள் குழுவினர் அனைவரும் இந்நடையை முடித்தனர். சிங்கப்பூரர் உட்பட சிங்கப்பூரில் வசிக்கும் இந்திய, வியட்னாமிய, மலேசிய, அமெரிக்க நாட்டவர்கள் மற்றும் வெளிநாட்டில் இருந்து வந்தவர்களும் இந்த நடையில் பங்கேற்றனர்.

சென்ற ஆண்டு இதே நிகழ்ச்சியில் இக்குழு, 100 கி.மீ. தொலைவு நடந்த ஆகப் பெரிய குழு என்ற சிங்கப்பூர்ப் புத்தகச் சாதனையையும் புரிந்திருந்தது.

21.1 கி.மீ. வெறுங்காலோடு நடந்த ஆகப் பெரிய குழு என்ற சாதனையையும் இக்குழு இதற்குமுன் படைத்துள்ளது.

2022 நவம்பரில் தொடங்கிய இக்குழு, வாராவாரம் நடைப்பயிற்சிகளுக்கு இலவசமாக ஏற்பாடு செய்கிறது.

“வாரநாள், ஞாயிற்றுக்கிழமை காலை பொங்கோல் பூங்காவிலும், சனிக்கிழமை காலை பீஷான், அப்பர் பியர்ஸ், ஈஸ்ட் கோஸ்ட் போன்ற பூங்காக்களிலும் நடக்கிறோம்,” என்றார் ‘ஜஸ்ட் வாக் லா’ குழுவைத் தோற்றுவித்தவர்களில் ஒருவரான 61 வயது ரா.சுப்பிரமணியம்.

இதுவரை பத்துச் சிங்கப்பூர்ச் சாதனைகளைப் படைத்துள்ள சுப்பிரமணியம், நடைப்பந்தயத்தின் ‘மாஸ்டர்ஸ்’ பிரிவில் சிங்கப்பூரை அனைத்துலக அளவில் பிரதிநிதித்துவருகிறார்.

அண்டைநாட்டு உறவுகள் வலுப்பெற ஒரு பாலம்

இவ்வாண்டு நடையில் பங்கேற்பதற்காக  மலேசியாவிலிருந்து சிங்கப்பூர் வந்த  (இடமிருந்து) ஜி சுரே‌ஷ்குமார், பர்னார்ட் குமார், தேவேந்திரன் கணபதி, ஜொவேன்.
இவ்வாண்டு நடையில் பங்கேற்பதற்காக மலேசியாவிலிருந்து சிங்கப்பூர் வந்த (இடமிருந்து) ஜி சுரே‌ஷ்குமார், பர்னார்ட் குமார், தேவேந்திரன் கணபதி, ஜொவேன். - படம்: ரவி சிங்காரம்

இவ்வாண்டு நடையில் இக்குழுவில் பங்கேற்பதற்காக மலேசியாவிலிருந்து நால்வர் சனிக்கிழமை காலை சிங்கப்பூர் வந்தடைந்தனர்.

மலேசிய ‘மாஸ்டர்ஸ்’ நடைப்பந்தயத்தில் 13 முறை தங்கப் பதக்கமும் ஆசிய நிலையில் மூன்று வெள்ளி, ஒரு வெண்கலப் பதக்கங்களும் பெற்ற ஜி சுரே‌ஷ் குமார், 52, அவர்களில் அடங்குவார்.

அவரும் திரு சுப்பிரமணியமும் கிட்டத்தட்ட 25 ஆண்டுகால நண்பர்கள். இருவரும் சிங்கப்பூரின் 200வது ஆண்டை வரவேற்கும் வகையில் 200 கி.மீட்டர் நடையிலும் பங்கேற்றுள்ளனர்.

ரா.சுப்பிரமணியம் (இடம்), ஜி.சுரே‌ஷ் குமார் இருவரும் இந்நடையை வெகுவிரைவில் முடித்தனர்.
ரா.சுப்பிரமணியம் (இடம்), ஜி.சுரே‌ஷ் குமார் இருவரும் இந்நடையை வெகுவிரைவில் முடித்தனர். - படம்: ஜி சுரே‌ஷ் குமார்

அடுத்து, டிசம்பர் 1ஆம் தேதி நடக்கவுள்ள ஹாங்காங் சாலை நடைப்பந்தயத்திலும் இருவரும் பங்கேற்கின்றனர்.

வயது வரம்பில்லை

குழுவினரில் ஆக இளையவரான வெற்றி சிவானன், 15, தன் தாயார் மணிமேகலை ராமசாமியுடன் நடையில் பங்கேற்றார்.
குழுவினரில் ஆக இளையவரான வெற்றி சிவானன், 15, தன் தாயார் மணிமேகலை ராமசாமியுடன் நடையில் பங்கேற்றார். - படம்: ரவி சிங்காரம்

குழுவினரில் ஆக இளையவரான வெற்றி சிவானன், 15, தன் தாயார் மணிமேகலை ராமசாமியுடன் நடையில் பங்கேற்றார். “இரவு நடை என்பது ஒரு புதிய வகைச் சவால். 12 மணி நேரத்துக்கு மேலாக நடந்தோம்” என்றார் வெற்றி.

“என் மகன் வெற்றி வெகு விரைவாக நடப்பவர். அவருக்கு ஈடுகொடுக்க சற்று சிரமப்பட்டேன். இருந்தாலும், சுற்றிலும் மரங்கள், இயற்கைச் சூழல் நன்றாக இருந்தது,” என்றார் சென்ற ஆண்டு 100 கி.மீ. சவாலிலும் பங்குபெற்ற மணிமேகலை.

“நான் பல்லாண்டுகளாக உடல் ஆரோக்கியத்துக்காக நடைப்பந்தயத்தில் பங்கேற்கிறேன்,” என்றார் இந்நடையில் பங்கேற்ற ஆக முதியவரான அஃபாண்டி, 79.

“நடைப்பயிற்சியை 1969ல் தொடங்கினேன். என் முதல் போட்டியிலேயே நான் முதல் நிலையில் வந்து, தேசிய சாதனையை முறியடித்தேன்,” என நினைவுகூர்ந்தார் தேசிய அளவில் நடைப்பந்தய வீரர்கள் பலருக்குப் பயிற்சி வழங்கியுள்ள 72 வயது தனபால் ராமசாமி.

“இக்குழுவோடு நான் இணைந்து நடப்பது இதுதான் முதன்முறை. நான் தைவான், மலேசியாவிலும் போட்டிகளில் நடந்துள்ளேன்,” என்றார் 75 வயது ஃப்ரெடி லோ.

 (இடமிருந்து) ‘ஜஸ்ட் வாக் லா’ குழு தோற்றுநர்கள் ராஜேந்திரன் எம்கேஎஸ், தனபால் ராமசாமி, டி ஜெயகுமார், ரா சுப்பிரமணியம். ஐந்தாவது தோற்றுநர் துரைராஜூ பெருமாள் படத்தில் இல்லை.
(இடமிருந்து) ‘ஜஸ்ட் வாக் லா’ குழு தோற்றுநர்கள் ராஜேந்திரன் எம்கேஎஸ், தனபால் ராமசாமி, டி ஜெயகுமார், ரா சுப்பிரமணியம். ஐந்தாவது தோற்றுநர் துரைராஜூ பெருமாள் படத்தில் இல்லை. - படம்: ரவி சிங்காரம்
ஏற்பாடுசெய்யும் தொண்டூழியராகவும் நடப்பவராகவும் ‘ஜஸ்ட் வாக் லா’வின் முயற்சியில் பங்கேற்பதில் நான் பெருமிதம் கொள்கிறேன். 
ராலீ சிங்கப்பூர் தலைவர் ஜோஹான் அனுவார்
குறிப்புச் சொற்கள்
நடைப்பயிற்சிபோட்டிவேகம்