‘செல்’லுமிடமெல்லாம் கைப்பேசி வடிவில் வந்துகொண்டிருக்கும் செயற்கை நுண்ணறிவு, தற்போது படுக்கையறைக்குள்ளும் நுழைந்துவிட்டது.
தொழில்நுட்பக் கருவிகளால் தொலைந்துபோன உறக்கத்தை மீட்டெடுக்க புதிய தொழில்நுட்பக் கருவிகள் பல சந்தையில் உலா வருகின்றன.
“தொழில்நுட்ப ஆதிக்கம் தொடங்கியபோதே நமது உறக்கத்தின் முறை முற்றிலும் மாறிவிட்டது,” என்கிறார் உறக்கவியல் மருத்துவர் கர்வி பாண்டியா.
‘டூம்ஸ்குரோலிங் (Doomscrolling)’ எனப்படும் நேரம் போவதே தெரியாமல் திறன்பேசியைப் பார்ப்பது நேரடியாகவும், அத்திரைகள் வெளியிடும் நீலவொளி, அதனால் வரும் கண் பாதிப்பு என பல மறைமுகக் காரணங்களினாலும் உறக்கம் கெடுகிறது.
“உறக்கம் குறித்து அறிந்துகொள்ளவும் நன்கு உறங்கவும் துணைசெய்யும் கருவிகள் வந்துள்ளது வரவேற்கத்தக்கதுதான். அவற்றை உரிய பரிந்துரைகளுடன் சரியான முறையில் பயன்படுத்த வேண்டும்,” என்று சொல்கிறார் மருத்துவர் கர்வி.
அவை, பொதுமக்கள் நேரடியாகப் பயன்படுத்தக்கூடிய எளிய கருவிகள், மருத்துவர்களுக்குத் தேவையான விரிவான தகவல்களைத் தரக்கூடிய கருவிகள் என இரு வகைப்படும்.
உறக்கம் வராமல் தவிப்போர்க்கு ‘வொயிட் நாய்ஸ் டிவைஸ் (white noise device)’ எனும் மனத்தைத் தளர்வாக்கும் ஒலியை வெளியிடும் கருவி பிரபலமடைந்துள்ளது.
அதேபோல இதமான இசையை வெளியிடக்கூடிய, கழுத்துப் பகுதியில் பட்டிபோல மாட்டிக்கொள்ளும் ஒலிக்கருவி, அருவியில் நீர் விழுவது உள்ளிட்ட இயற்கை ஒலிகளை எழுப்பும் கருவி, கண்களில் மெல்லிய அதிர்வை ஏற்படுத்தி உறக்கத்தில் ஆழ்த்தும் ‘ஐ மாஸ்க்’, காதில் எந்த ஒலியும் கேட்காமல் அடைக்கும் ஒலிநீக்கிகள் (noise cancellation buds) என, கருவிகளின் பட்டியல் நீள்கிறது.
கனமான, உடலுக்கு உகந்த வெப்பநிலையைப் பேணும் ‘ஸ்மார்ட்’ போர்வைகளும் பயன்பாட்டுக்கு வரத் தொடங்கியுள்ளன.
மேலும், உறங்கும் நேரத்தைக் கண்காணிக்கும் செயலி, திறன்கடிகை (smart watch) போல, சுவாச நிலை, உயிர்வாயு அளவு, இதயத் துடிப்பு, ரத்த அழுத்தம் உள்ளிட்டவற்றைக் கண்காணித்துப் பதிவு செய்யும் மோதிரம் போன்ற கருவியும் பயன்பாட்டில் உள்ளது.
மனத்தை அமைதிப்படுத்தி உறக்கத்தில் ஆழ்த்தும் கருவிகளை விருப்பத்திற்கேற்ப பயன்படுத்துவதில் பிரச்சினை ஏதுமில்லை என்று கூறிய மருத்துவர் கர்வி, தேவையின்றி பல்வேறு கருவிகளில் கவனம் செலுத்துவதை விடுத்து, காரணத்தை அறிந்து களைவதே சிறந்த வழி என்றும் பரிந்துரைத்தார்.
பொதுவாக, இவ்வகைத் தொழில்நுட்பங்கள் மருத்துவ உலகுக்கு நன்மையளிப்பதாகக் கூறும் இவர், “உண்மையில் உதவி தேவைப்படும் நோயாளிகளுக்குச் சில கருவிகளைப் பரிந்துரைப்போம். இதன் மூலம் அவர்களது உறக்க விழுக்காடு, அதன் தரம், எந்த வகையில் அவர்கள் தூங்குகிறார்கள் என்பன போன்ற அனைத்துத் தரவுகளையும் தரும் கருவிகளும் இருக்கின்றன,” என்றும் சொன்னார்.
“காலையில் எப்போதும் வாய்ப்பகுதி உலர்ந்தே உள்ளது என்று சாதாரணமாகக் கூறும் ஒருவருக்கு ‘ஸ்லீப் அப்னியா’ இருக்கலாம். இதையெல்லாம் எளிதில் கண்டறிய உரிய கருவிகள் துணை புரிகின்றன,” என்றார் மருத்துவர் கர்வி.
“மூத்தோர், குறிப்பாக நரம்பு தொடர்பான நோய்களுக்கு ஆட்பட்டோர் உறக்கத்தின்போது எதிர்கொள்ளும் சிக்கல்களைக் கண்டறிந்து எச்சரிக்கை செய்யும் கருவிகள் இருக்கின்றன. இவை பல நேரங்களில் உயிரைக் காக்கவும் உதவும்,” என்றும் இவர் கூறினார்.
குறட்டை விடுவதைக் குறைக்கவும் பல கருவிகள் கிடைக்கின்றன.
குறட்டைவிடுவது நல்ல தூக்கத்தின் வெளிப்பாடு எனக் கருதுவது தவறு என்றும் அதற்குச் சுவாசக்குழாய் அடைப்பு காரணமாக இருக்கலாம் என்றும் மருத்துவர் கர்வி எச்சரித்தார்.
சுவாசத் தடை, மூச்சுத் திணறல் உள்ளிட்ட அறிகுறிகள் தோன்றாமல் காக்கும் கருவிகளைப் பயன்படுத்துமுன் மருத்துவ ஆலோசனை பெறுவது சிறந்தது.
வாழ்வைப் பாதிக்கும் மோசமான அறிகுறிகள் தென்பட்டால் உறக்கவியல் வல்லுநர்களை நாடுவது நல்லது.
“பொதுவாகவே, நல்ல உறக்கம் முக்கியம். ஆனால், அது குறித்து பெரிதும் பயமும் பதற்றமும் அடையத் தேவையில்லை. ‘சர்கேடியன் ரிதம்’ எனப்படும் இயல்பான உடலியக்கச் சுழற்சியைப் பேணி வந்தால் உறக்கப் பிரச்சினைகளிலிருந்து இயல்பாகவே விடுபடலாம்,” என்பது மருத்துவர் கர்வியின் அறிவுரை.