சைவ வாழ்வியல் நெறிமுறைகளையும் கோட்பாடுகளையும் அனைத்துலக அளவில் பலரிடம் கொண்டு சேர்க்கும் பணியில் ஈடுபட்டு வரும் சிவஸ்ரீ அண்ணா இணையத்தளத்தின் 450வது நிகழ்ச்சி ஆகஸ்ட் 10ஆம் தேதி அருள்மிகு தெண்டாயுதபாணி ஆலய வளாகத்தில் நடைபெற உள்ளது.
இந்நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழாவும் பாராட்டு விழாவும் நடைபெறும். ஆகஸ்ட் 10ஆம் தேதி பிற்பகல் 2.30 மணியளவில் மங்கள இசையுடன் தொடங்கும் இந்த விழாவில், திருக்கயிலாய பரம்பரை தருமை ஆதீனம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள், திருக்கயிலாய பரம்பரை செங்கோல் ஆதீனம் சிவப்பிரகாச தேசிக ஞான பரமாச்சாரிய சுவாமிகள், திருக்கயிலாய ஸ்ரீ கந்த பரம்பரை ஸ்ரீகாரியம் வாமதீவ ஸ்ரீசிவாக்கிர தேசிக சுவாமிகள் ஆகியோர் ஆசியுரை வழங்க உள்ளனர்.
உலக இந்து சமய ஆன்மிக கலாசார மையத்தின் வழிகாட்டுதலின் பேரில் கடந்த 2020ஆம் ஆண்டு தொடங்கி ஆன்மிக, பண்பாட்டு, கலை நிகழ்ச்சிகளை நடத்தி வரும் இந்த இணையத்தளத்தில் உலகெங்கிலுமிருந்து இளைஞர்கள் பலர் பங்கேற்று வருகின்றனர்.
அவர்களை ஊக்குவிக்கும் விதமாகவும், திருமுறை கற்கும் மாணவர்களைக் கௌரவிக்கும் விதமாகவும் இந்த பாராட்டு விழா நடைபெற உள்ளது.

