தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஆசிய பசிபிக் பயணிகளிடையே மாறிவரும் விருப்பங்கள்

2 mins read
பண்பாட்டையும் இயற்கையையும் மையப்படுத்திய பயணங்களையே மக்கள் அதிகம் விரும்புகின்றனர் என்று அண்மைய ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.
2fec0c7f-5903-483b-be2a-9e0c6f955291
நிலைத்திருக்கும் நினைவுகளும் ஆழ்ந்த அர்த்தமும் நிறைந்த பயணங்களையே மேற்கொள்ள பயணிகள் விழைகின்றனர். - படம்: இணையம்

இவ்வாண்டு ஏப்ரல் 22ஆம் தேதிமுதல் மே 5ஆம் தேதிவரை, ட்ராவலோக்கா (Traveloka) நிறுவனம் நடத்திய ‘எபிக் சேல் 2025’ (EPIC Sale 2025) என்ற சிறப்பு விற்பனை, வெவ்வேறு சலுகைகள் மட்டுமின்றி, மாறிவரும் மக்களின் பயண விருப்பத்தெரிவுகளையும் வெளிச்சத்திற்குக் கொண்டுவந்துள்ளது.

சிங்கப்பூர், இந்தோனீசியா, மலேசியா, வியட்னாம், தாய்லாந்து, ஜப்பான், ஆஸ்திரேலியா என ஏழு ஆசிய பசிபிக் சந்தைகளிலும் இந்தச் சிறப்பு விற்பனை நடைமுறைப்படுத்தப்பட்டது.

அதில் திரட்டப்பட்ட தரவுகளின்படி, பயணிகளால் அதிகம் தேடப்பட்ட நாடுகளின் பட்டியலில் இந்தோனீசியா, தாய்லாந்து, வியட்னாம் ஆகிய மூன்று நாடுகளும் மேலிடங்களைப் பிடித்துள்ளன.

இந்நாடுகளோடு ஜப்பான், மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளும் புகழ்பெற்ற தெரிவுகளாக விளங்குகின்றன.

ஓய்வு, பண்பாட்டுப் பகுப்பாய்வு, சாகசம் என அனைத்துக் கூறுகளும் நிறைந்த பயணங்களை மேற்கொள்ளவும் பயணிகள் விரும்புவதால், பண்பாட்டைப் பாராட்டும் வகையில் வெவ்வேறு நிகழ்ச்சிகள், குடும்பங்களுக்கு ஏற்ற சுற்றுலாத் தளங்கள் எனப் பல அம்சங்களைக் கொண்ட சொகுசுக் கப்பல்களில் செல்லும் பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

குடும்பத்துடன் விலைமதிப்பற்ற நினைவுகளை உருவாக்க, நீண்ட வார இறுதிகளையும் பள்ளி விடுமுறைகளையும் பயணிகள் முழுமையாகப் பயன்படுத்திக்கொள்கின்றனர்.

எளிதாக மாற்றியமைக்கக் கூடிய பயணத்திட்டங்கள் கொண்ட ஓய்வுப் பயணங்களில் காட்டப்படும் ஆர்வமும் அதிகரித்து வருகிறது.

அவ்வாறு உள்ளூரிலேயே ஓர் இடத்தில் தங்கி ஓய்வெடுக்கும் (Staycation) சிங்கப்பூரர்களுக்கு மத்தியில், சைனாடவுன், ஆர்ச்சர்ட், லிட்டில் இந்தியா ஆகிய இடங்கள் பலரது விருப்பத்தெரிவுகளாக விளங்குகின்றன.

“பணத்தைப் பற்றி மட்டும் கவலைப்படாமல், அனுபவத்தின் தரம், பொருத்தம், தங்கள் விருப்பத்திற்கு ஏற்றவாறு பயணத்தை மாற்றியமைக்கும் வாய்ப்பு ஆகியவற்றையும் தற்போது பயணிகள் கருத்தில் கொள்கின்றனர்,” என்று ட்ராவலோக்கா நிறுவனத்தின் வணிகப் பயணச் செயல்பாடுகள் பிரிவின் துணைத்தலைவர் பைடி லி தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்