வெளிநாடுகளுக்குப் பயணம் மேற்கொள்வதில் சிங்கப்பூரர்களிடம் இருக்கும் ஆர்வம் சற்றும் குறையவில்லை. இருப்பினும், அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவினங்களும் மாறிவரும் முன்னுரிமைகளும் அவர்களின் பயணப் பாணியில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளன.
யூகவ் (YouGov) நிறுவனத்தின் ‘சிங்கப்பூர் அனைத்துலகப் பயணிகள் கண்ணோட்டம் 2026’ அறிக்கையின்படி, ஐந்தில் மூன்று சிங்கப்பூரர்கள் ஆண்டுக்கு ஒருமுறையாவது வெளிநாடு செல்வது தெரியவந்துள்ளது.
அதிக வருமானம் ஈட்டுவோரிடையே இந்த விகிதம், ஐவரில் நால்வர் என உள்ளது.
பயணச் செலவும் மாற்றங்களும்
பயணச் செலவு குறித்த பரிசீலனை, பயணத் திட்டங்களில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது.
ஆய்வில் பங்கெடுத்தவர்களில் ஐவரில் இருவர், விலைவாசி உயர்வு தங்களின் விடுமுறைத் திட்டங்களைப் பாதிப்பதாகக் குறிப்பிட்டனர்.
நிச்சயமற்ற பொருளியல் சூழல் காரணமாக, பத்தில் மூவர் தங்களின் பயணத் திட்டங்களைக் குறைத்துக்கொண்டுள்ளனர்.
ஏறக்குறைய 4 விழுக்காட்டினர் உள்ளூரிலேயே விடுமுறையைக் கழிக்கவோ வெளிநாட்டுப் பயணங்களின் எண்ணிக்கையைக் குறைக்கவோ திட்டமிட்டுள்ளனர்.
கடந்த ஓராண்டில் சிங்கப்பூரர்களின் மொத்தப் பயணங்களின் எண்ணிக்கை சற்று குறைந்துள்ளதாக இந்த ஆய்வு சுட்டிக்காட்டுகிறது.
தொடர்புடைய செய்திகள்
பாதிக்கும் மேற்பட்டோர், தங்களின் பயணப் பழக்கங்களில் மாற்றமில்லை என்று கூறினாலும், ஐந்தில் ஒருவர் முன்பைவிடக் குறைவாகவே பயணம் செய்கிறார்.
தலைமுறைகளுக்கு இடையிலும் சில வேறுபாடுகள் காணப்படுகின்றன. குறிப்பாக, ‘ஜென் எக்ஸ்’, ‘பேபி பூமர்ஸ்’ தலைமுறையினருடன் ஒப்பிடுகையில், ‘ஜென் ஸீ’, ‘மில்லெனியல்ஸ்’ தலைமுறையினர் அதிக அளவில் பயணம் மேற்கொள்கின்றனர்.
சிக்கனமான பயண உத்திகள்
செலவைக் கட்டுக்குள் வைத்திருக்க, சிங்கப்பூரர்கள் தற்போது பல்வேறு சிக்கனமான உத்திகளைக் கையாளத் தொடங்கியுள்ளனர்.
பாதிக்கும் மேற்பட்டோர், கூட்ட நெரிசல் குறைந்த காலங்களில் பயணம் செய்வதையும் விமானப் பயணச்சீட்டுகளை முன்கூட்டியே வாங்குவதையும் வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
அத்துடன், பயணக் காலத்தைக் குறைத்தல், மலிவுக் கட்டண தங்குமிடங்களைத் தேர்வு செய்தல், பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துதல் போன்ற தெரிவுகளும் அதிகரித்துள்ளன. ஐவரில் ஒருவர், செலவுகளைச் சமாளிக்கத் தாங்கள் செல்லும் இடத்தை மாற்றிக்கொள்ளத் தயார் எனவும் கூறியுள்ளனர்.
விமானப் பயணச்சீட்டுக் கட்டணங்களும் போக்குவரத்துச் செலவுகளும் அதிகரித்துள்ளதாக முக்கால்வாசிப் பேர் உணர்கின்றனர். இதன் விளைவாக, மூன்றில் ஒரு பங்கிற்கும் அதிகமானோர் இப்போது மலிவுக் கட்டண விமானச் சேவைகளை நாடத் தொடங்கியுள்ளனர்.
தங்குமிடத் தேர்வும் இட விருப்பங்களும்
தங்குமிடங்களைப் பொறுத்தவரை, ஏறக்குறைய 75 விழுக்காட்டினருக்கு ஹோட்டல்களே முதல் தேர்வாக இருந்தாலும், குறுகியகால வாடகை வீடுகள் அல்லது நண்பர்களின் வீடுகளில் தங்கும் பழக்கமும் பரவலாகக் காணப்படுகிறது.
குறிப்பாக, குறைந்த வருமானம் கொண்ட பயணிகள், செலவுகளைத் துல்லியமாகத் திட்டமிட உதவும் சுற்றுலாத் தொகுப்புகளை நாடுகின்றனர்.
விருப்பமான சுற்றுலாத் தலங்கள்
சிங்கப்பூரர்களின் விருப்பமான சுற்றுலாத் தலங்களைப் பொறுத்தமட்டில், விலைக்குத் தகுந்த மதிப்பு தரும் நாடாக மலேசியா முதலிடத்தில் உள்ளது.
ஒட்டுமொத்தப் பட்டியலில், சிங்கப்பூரர்கள் அதிகம் செல்ல விரும்பும் நாடாக ஜப்பான் முதலிடத்தைத் தக்கவைத்துள்ளது. அதே வேளையில், கடந்த ஓராண்டு காலத்தில் சீனா குறித்த சிங்கப்பூர் பயணிகளின் நேர்மறையான பார்வையும் ஆர்வமும் கணிசமாக உயர்ந்துள்ளது கவனிக்கத்தக்கது.

