ஓர் உயிரைக் காப்பாற்ற எலும்பு மஜ்ஜை தானம் செய்த கல்பனா

2 mins read
74b244fb-f060-4e30-83f3-3e938480f6a5
கல்பனா விஜயகுமார். - படம்: எலும்பு மஜ்ஜை கொடையாளர் திட்டம் 

எலும்பு மஜ்ஜை தானம்குறித்து கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு முன்னர் கல்பனா விஜயகுமாருக்கு ஒரு பள்ளி நிகழ்ச்சியில் தெரியவந்தது.

எளிய கன்னச் சளி மாதிரிப் பரிசோதனைமூலம் எலும்பு மஜ்ஜை தானம் செய்ய கல்பனா பெயர் பதிந்துகொண்டார்.

அவரது இரு சகோதரிகளும் அதில் இணைந்தனர். இருவரும் ஒரு கட்டத்தில் எலும்பு மஜ்ஜை தானமளிக்க தொடர்பு கொள்ளப்பட்டனர். எனினும், அந்த நோயாளிகள் இறுதியில் மாற்று சிகிச்சைகளைக் கண்டறிந்தனர். இந்த முறை வேறுபட்டது.

36 வயதாகும் கல்பனாவின் மஜ்ஜை வெளிநாட்டில் உள்ள ஒரு பெயர் தெரியாத பெறுநருக்கு மிகச் சரியான பொருத்தமாக இருந்தது. அவரிடம் பக்கவாட்டு ரத்த குருத்தணு தானம் கோரப்பட்டது.

தானம் கொடுக்க அவர் மனமுவந்து முன்வந்தபோதிலும், மயக்க மருந்து கொடுத்து, அறுவை சிகிச்சைமூலம் எலும்பு மஜ்ஜை எடுக்கப்படுவது குறித்து கல்பனாவுக்குச் சற்றுக் கவலையாக இருந்தது.

எனினும், அவரது ரத்தவியல் நிபுணர் அவருக்குத் தைரியம் அளித்தார்.

தானத்திற்கு முந்தைய நாள் திடீரென கிருமித்தொற்று ஏற்பட்டதால், கல்பனாவுக்கு வருத்தம் ஏற்பட்டது.

என்றாலும், அவர் தம் உடல்நிலையைத் தேற்றுவதில் கவனம் செலுத்தினார்.

ஓய்வெடுத்தல், ஊட்டச்சத்து மாத்திரைகளை எடுத்துக்கொள்ளுதல், மக்கள் கூட்டம் அதிகம் இருக்கும் இடங்களைத் தவிர்ப்பது என கல்பனா மிகக் கவனமாக இருந்தார்.

தானம் செய்யும் நாளன்று அஃபெரெசிஸ் இயந்திரம் தொடர்ந்து ஒலி எழுப்பியதால் சில பதற்றமான தருணங்கள் இருந்தபோதிலும், திறமையான தாதியர்கள் சிக்கலைத் தீர்த்துக் கல்பனாவின் அச்சத்தைப் போக்கினர்.

மதிய நேரத்திற்குள் தேவையான அளவு ரத்த குருத்தணுக்கள் சேகரிக்கப்பட்டன. கல்பனா விரைவாகக் குணமடைந்தார். சில நாள்களுக்குள் அவர் இயல்புநிலைக்குத் திரும்பினார்.

தொடர் சோதனைகளும் அவரது ரத்த குருத்தணு எண்ணிக்கை அடிப்படை நிலைக்குத் திரும்பியதை உறுதிப்படுத்தின.

“நான் அளித்த தானத்தினால் ஒருவருக்கு சிகிச்சைக்கான வாய்ப்புக் கிடைத்தது,” என்று மகிழ்ந்தார் கல்பனா.

கடந்த 2015ஆம் ஆண்டு உலக எலும்பு மஜ்ஜை கொடையாளர்கள் சங்கத்தால் தொடங்கப்பட்ட உலக எலும்பு மஜ்ஜை கொடையாளர்களின் தினம், ஆண்டுதோறும் செப்டம்பர் மாதத்தின் மூன்றாவது சனிக்கிழமையில் 60க்கும் மேற்பட்ட நாடுகளில் கொண்டாடப்படுகிறது.

ரத்த நோய்கள் உள்ள நோயாளிகளுக்கு வாழ்க்கையில் இரண்டாவது வாய்ப்பைக் கொடுக்கக் கொடையாளர்களை அங்கீகரிப்பது இதன் நோக்கம்.

எலும்பு மஜ்ஜை கொடையாளர் திட்டம் சிங்கப்பூரின் தொண்டூழிய எலும்பு மஜ்ஜை கொடையாளர்களின் ஒரே பதிவேட்டை நிர்வகித்து வருகிறது.

இது குணப்படுத்த முடியாத ரத்தம் தொடர்பான நோய்களால் பாதிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான நோயாளிகளுக்கு எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சைமூலம் உயிர் பிழைப்பதற்கான கடைசி வாய்ப்பை வழங்குகிறது.

சிங்கப்பூரில் அண்மையில் நடைபெற்ற உலக எலும்பு மஜ்ஜை கொடையாளர்கள் தினத்தன்று 100க்கும் மேற்பட்ட கொடையாளர்கள் அங்கீகரிக்கப்பட்டனர்.

குறிப்புச் சொற்கள்