மலையேறும் நடவடிக்கையில் ஈடுபட்ட சிறுவர்கள்

மலையேறும் நடவடிக்கையில் ஈடுபட்ட சிறுவர்கள்

2 mins read
e1fa4019-25db-4983-aa58-9405197d451b
பங்கேற்பாளர்கள் ஹோர்ட் பூங்காவிலிருந்து கென்ட் ரிட்ஜ் பூங்கா வரை மூன்று கிலோமீட்டர் சிறுவர்கள் நடைப்பயணத்தில் ஈடுபட்டனர். - படம்: யோகிதா அன்புச்செழியன்
multi-img1 of 4

இந்தியக் குடும்பங்களில் ஆரோக்கியமான பழக்கவழக்கங்களை ஊக்குவிக்கும் நோக்கில் மலையேறும் நடைப்பயண நடவடிக்கை ஒன்றை சனிக்கிழமை (மே 31) ‘தாறுமாறு ரன்னர்ஸ்’ (டிஎம்ஆர்) ஓட்டக் குழு ஏற்பாடு செய்திருந்ததது

இரண்டாவது ஆண்டாக நடைபெற்றுள்ள ‘கிட்ஸ்-அ-ஹைக்’ என்ற அந்த நிகழ்ச்சியில் 50க்கும் மேற்பட்ட சிறார்களுடன் பெற்றோர்களும் உறவினர்களும் பங்கேற்றனர்.  

சிறார்கள் மூன்று வயதுக்கும் 12 வயதுக்கும் இடைப்பட்டவர்கள். 

ஹோர்ட் பூங்காவிலிருந்து கென்ட் ரிட்ஜ் பூங்கா வரை 3 கிலோமீட்டர் நடைப்பயணத்தில் அவர்கள் உற்சாகமாக ஈடுபட்டனர்.

பங்கேற்பாளர்கள் ஹோர்ட் பூங்காவிலிருந்து கென்ட் ரிட்ஜ் பூங்கா வரை மூன்று கிலோமீட்டர் நடைபயணத்தில் ஈடுபட்டனர்.
பங்கேற்பாளர்கள் ஹோர்ட் பூங்காவிலிருந்து கென்ட் ரிட்ஜ் பூங்கா வரை மூன்று கிலோமீட்டர் நடைபயணத்தில் ஈடுபட்டனர். - படம்: யோகிதா அன்புச்செழியன்

விளக்குக் கம்பங்களை எண்ணுவது, உடற்பயிற்சி செய்வது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளைச் சிறார்கள் சவாலாக எடுத்துக் கொண்டு நிறைவேற்ற வேண்டியிருந்தது. 

வழிநெடுக ஒவ்வொரு சவாலையும் கடந்து செல்ல, சிறுவர்கள் தங்களுக்கு அளிக்கப்பட்ட ‘ஹைக்கிங்’ அட்டையில் முத்திரைகளைச் சேகரித்தனர்.

‘ஹைக்கிங்’ அட்டையில் முத்திரைகளைச் சேகரிக்கும் சிறுவர்கள்.
‘ஹைக்கிங்’ அட்டையில் முத்திரைகளைச் சேகரிக்கும் சிறுவர்கள். - படம்: யோகிதா அன்புச்செழியன்

கென்ட் ரிட்ஜ் பூங்காவின் உச்சியை அடைந்த பின், சிறுவர்களின் வெற்றியைப் பாராட்டி பதக்கங்கள் வழங்கப்பட்டன.

சிங்கப்பூர் இந்தியர் மேம்பாட்டுச் சங்கத்தின் ஆதரவில் (சிண்டா) பள்ளிக்குப் பயன்படும் பொருள்கள் அடங்கிய பரிசுப் பைகளும் அவர்களுக்கு வழங்கப்பட்டன.

கென்ட் ரிட்ஜ் உச்சியை அடைந்த பின் சிறுவர்களுக்கு பதக்கங்கள் வழங்கப்பட்டன.
கென்ட் ரிட்ஜ் உச்சியை அடைந்த பின் சிறுவர்களுக்கு பதக்கங்கள் வழங்கப்பட்டன. - படம்: தாறுமாறு ரன்னர்ஸ்

2021லிருந்து ‘தாறுமாறு ரன்னர்ஸ்’ ஓட்டக் குழுவின் உறுப்பினரான வெஸ்ட் கோஸ்ட் - ஜூரோங் வெஸ்ட் குழுத்தொகுதிக்கான நாடாளுமன்ற உறுப்பினர் ஹமீது ரசாக், தமது மூத்தப் பிள்ளைகள் இருவருடன் பங்கேற்றார்.

மரினா அணைக்கட்டில் ‘டிஎம்ஆர்’ குழுவின் ஓட்டத்தை நேரில் கண்டபோதுதான் முதன்முதலாக அவர்களைப் பற்றி அறிந்து கொண்டதாக டாக்டர் ஹமீது தெரிவித்தார். 

“இந்திய சமூகத்தை நேர்மறையான, சுறுசுறுப்பான வழியில் ஒன்றிணைக்க அவர்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் என்னை வெகுவாகக் கவர்ந்தன,” என்று அவர் கூறினார்.

வெஸ்ட் கோஸ்ட் - ஜூரோங் வெஸ்ட் குழுத்தொகுதிக்கான நாடாளுமன்ற உறுப்பினர் ஹமீது ரசாக்குடன் (நடுவில்), அவரது 12 வயது மகள் ‌‌ஷமினா, ஒன்பது வயது மகன் நஈம்.
வெஸ்ட் கோஸ்ட் - ஜூரோங் வெஸ்ட் குழுத்தொகுதிக்கான நாடாளுமன்ற உறுப்பினர் ஹமீது ரசாக்குடன் (நடுவில்), அவரது 12 வயது மகள் ‌‌ஷமினா, ஒன்பது வயது மகன் நஈம். - படம்: யோகிதா அன்புச்செழியன்

குடும்பங்களும் குழந்தைகளும் மகிழ்ச்சியுடன் பங்கேற்பதைப் பார்க்கும்போது, உடற்பயிற்சி என்பது ஆரோக்கியத்திற்காக மட்டுமல்ல, ஒற்றுமைக்கும் அடிப்படையாகும் என்பதை இந்நிகழ்ச்சி நினைவூட்டுவதாகவும் டாக்டர் ஹமீது கூறினார். 

“குடும்பமாக மேற்கொள்ளும் பழக்கங்கள், பிள்ளைகளைவிட்டு நீங்குவதில்லை. இவ்வாறு அவர்கள், பெரியவர்களாக வளர்ந்த பின்பும் அவர்களது வாழ்க்கையில் உடற்பயிற்சி இயல்பாகத் தங்கும் ,” என்றும் அவர் கூறினார்.

தந்தையுடனும் தமக்கையுடனும்  நடைப்பயணத்தில் பங்கேற்றது மகிழ்ச்சியைத் தந்துள்ளதாக டாக்டர் ஹமிதின் ஒன்பது வயது மகன் நஈம் தெரிவித்தார்.

“பள்ளி இடைவேளைகளிலும் ஓய்வு நேரங்களிலும் நான் வழக்கமாக காற்பந்து விளையாடுவேன். சுறுசுறுப்புடன் திகழ இன்றைய நடவடிக்கை மற்றொரு வழியாக அமைந்துள்ளது,” என்று அவர் கூறினார்.

இரண்டு வயது மகன் நிதே‌ஷுடன் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பெற்றோர்கள் 37 வயது தனே‌ஷ் குமார், 34 வயது ஸ்ரீதேவி ஆகியோர், அனைத்து நடவடிக்கைகளும் விளையாட்டுகளும் சிறப்பாக திட்டமிடப்பட்டிருந்ததாகக் கூறினர்.

(இடமிருந்து) தந்தை தனே‌ஷ் குமார், 37, மகன் நிதே‌‌ஷ், 2, தாயார் ஸ்ரீதேவி, 34.
(இடமிருந்து) தந்தை தனே‌ஷ் குமார், 37, மகன் நிதே‌‌ஷ், 2, தாயார் ஸ்ரீதேவி, 34. - படம்: யோகிதா அன்புச்செழியன்

அர்த்தமுள்ள முறையில் தங்கள் மகனுடன் இங்கு நேரத்தைச் செலவழித்துள்ளதாகப் பெற்றோர்கள் கூறினர்.

தந்தை, இரண்டு மகள்கள் ஆகியோருடன் நிகழ்ச்சியில் பங்கேற்ற மற்றொரு பெற்றோர் ரிஸ்வானா பேகம், 31, தங்கள் குடும்பத்தினர் இதில் உற்சாகமாகப் பங்கேற்றதாகக் கூறினார்.

திருவாட்டி ரிஸ்வானா பேகம், 31,(இடது) அவரது தந்தை அக்பர் அலி, 63, அவரது இரண்டு மகள்கள், ஷான்ஸா ஹாதியா, 6, வஸீலா ஹனான், 4,
திருவாட்டி ரிஸ்வானா பேகம், 31,(இடது) அவரது தந்தை அக்பர் அலி, 63, அவரது இரண்டு மகள்கள், ஷான்ஸா ஹாதியா, 6, வஸீலா ஹனான், 4, - படம்: யோகிதா அன்புச்செழியன்

“என் நண்பரின் பரிந்துரையினால் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டோம். என் மகள்களுக்கு இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவது இதுவே முதன்முறையென்றாலும் அவர்கள் மிகவும் உற்சாகத்துடன் செயல்பட்டார்கள்,” எனத் திருவாட்டி ரிஸ்வானா கூறினார்.

குறிப்புச் சொற்கள்