சிங்கப்பூரின் 60வது தேசிய தினத்தைச் சிறப்பிக்கும் வகையில், பழங்கால இந்தியர் குடும்பங்களில் தத்தெடுக்கப்பட்ட சீனப் பெண்பிள்ளைகளைப் பற்றிய புத்தகம் குறித்த சிறப்புக் கலந்துரையாடல் நடைபெற்றுள்ளது.
‘சிறு துளிகள்: கடந்தகால சிங்கப்பூரின் செல்லப் பிள்ளைகள்’ (Little Drops: Cherished Children Of Singapore’s Past) என்ற தலைப்பில் மானுடவியல் ஆய்வாளர் டாக்டர் தெரேசா தேவசகாயம் எழுதிய புத்தகம், தத்தெடுக்கப்பட்ட 15 பேரின் வாழ்க்கைக் கதைகளைத் தொகுத்து வழங்குகிறது.
“இந்த மாதர்களின் தனிப்பட்ட வரலாற்றை ஆவணப்படுத்தவேண்டும் என ஆசைப்பட்டேன். ஆவணப்படுத்தப்பட்ட வரலாற்றுக்கு அப்பால் சிங்கப்பூர்ச் சமூகத்தின் பரந்த அனுபவங்களில் ஒன்றான இதனை ஆய்வுசெய்ய எண்ணியே நூலை எழுத முற்பட்டேன்,” என்று டாக்டர் தெரேசா கூறினார்.
தத்தெடுக்கப்பட்ட அந்தக் காலத்துப் பெண் பிள்ளைகளில் சரஸ்வதி நாகலிங்கம், மனோரஞ்சிதம் பரம், தங்கம் கோ, தேவகி சீனிவாசராஜம் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
இரண்டு மணி நேரம் நீடித்த இந்த நிகழ்ச்சியில் கிட்டத்தட்ட 40 பேர் கலந்துகொண்டனர். கலகலப்பான கேள்வி பதில் அங்கமும் இடம்பெற்றது.
சிங்கப்பூர் வரலாற்றில் மறக்கப்பட்ட அத்தியாயம் ஒன்றை இந்த ஆழமான தனிப்பட்ட வரலாற்றுக் குறிப்புகள் வெளிச்சம்போட்டுக் காட்டுவதாக இந்திய மரபுடைமை நிலையத் தலைவர் ஆர். ராஜாராம் தெரிவித்தார்.
“அன்றாடப் பரிவுச் செயல்களாலும் ஒற்றுமையுணர்வாலும் உருவான மிகவும் தனித்துவமான கலாசாரப் பன்முகத்தன்மையை இந்தக் கதைகள் காட்டுகின்றன,” என்றார் அவர்.

