இந்தியத் தலைநகர் புதுடெல்லியில் அமைந்துள்ள பேரிடர் தாங்கும் உள்கட்டமைப்புக்கான கூட்டணி (Coalition for Disaster Resilient Information) எனும் அமைப்பு தேசிய அரசாங்கங்கள், ஐக்கிய நாடுகள் அமைப்புகள், பல்வேறு வளர்ச்சி வங்கிகள், நிதியளிப்பு வழிமுறைகள், தனியார் துறை மற்றும் நிறுவனங்கள் ஆகியவற்றின் கூட்டாண்மையில் அமைக்கப்பட்டது.
பேரழிவு அபாயங்கள், பருவநிலை மாற்றத்தால் எழும் அபாயங்கள் போன்றவற்றால் பாதிக்கப்படும் நாடுகளுக்கு உதவிக்கரம் நீட்டும் நோக்கத்துடன் தொடங்கப்பட்ட இந்த அமைப்பு, அந்நாடுகளின் உள்கட்டமைப்பைச் சீரமைக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
பாதிப்பிற்குள்ளான நாட்டில் பேரழிவு ஏற்படும்போது, உடனடியாக செயற்குழுக்களை அமைத்து அந்நாட்டிற்கு உதவுவதோடு, பேரிடர் காலங்களில் எவ்வாறு பாதுகாத்துக் கொள்ளலாம் என்பதை சார்ந்த விழிப்புணர்வையும் இந்த அமைப்பு ஏற்படுத்தி வருகிறது.
மொரிஷியஸ், இத்தாலி, ஜமைக்கா, ஹோண்டுராஸ், பிஜி போன்ற 40 நாடுகளுடன் ஒத்துழைத்துவரும் இந்த அமைப்பு ஐந்தாண்டுகளுக்கு முன்னர் தொடங்கப்பட்டது.
வெள்ளம், நிலநடுக்கம், நிலச்சரிவு போன்ற இயற்கைப் பேரிடர்களால் எளிதில் பாதிக்கப்படும் நாடுகள் இந்த அமைப்பின் உதவியை நாடி வருகின்றன. பல திட்டங்களைச் செயல்படுத்தி வரும் இந்த அமைப்பு, மின்சாரம், சுகாதாரம், நகர்ப்புற மேம்பாடு, நிதியுதவி, போக்குவரத்து, தொலைத்தொடர்பு போன்ற அம்சங்களில் கவனம் செலுத்தி வருகிறது.

